மகளிர்மணி

காவல் பணிக்கு பெண்கள் அதிகம் வரவேண்டும்!

14th Oct 2020 06:00 AM | கோதை ஜோதிலட்சுமி 

ADVERTISEMENT

 

இந்திய காவல் பணியில் சேர்வது எந்த அளவுக்குக் கடினமோ, அதைவிடக் கடினம் பணியில் சேர்ந்து பணியாற்றுவது. வெளியில் இருந்து பார்க்கிறவர்களுக்கு காக்கி உடையின் அதிகாரங்கள் மட்டும்தான் தெரியும்; சவால்கள் கண்ணுக்குத் தெரியாது. பெயர் சம்பாதிப்பதைவிட, எதிர்ப்புகளையும், வீண்பழிகளையும் அதிகம் எதிர்கொள்ளும் ஒரு துறை இருக்குமானால், அது காவல்துறையாகத்தான் இருக்கும். அப்படி இருக்கும்போது அதில் பெண்கள் பணியில் சேர்ந்து, தங்களை அடையாளம் காட்டிக் கொள்வதும், தங்களது திறமைக்கு அங்கீகாரம் தேடிக் கொள்வதும் எவ்வளவு  கடினம் என்பதை பணியில் இருப்பவர்களைக் கேட்டால்தான் தெரியும்.

24 ஆண்டுகளுக்கு முன்னால், அரசுப் பணியில் சேர வேண்டும் என்கிற குறிக்கோளுடன் குடிமைப் பணிக்கான தேர்வுக்குத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ள முனைந்த பவானீஸ்வரி.  இப்போது தமிழகக் காவல் துறையின் காவல்துறைத் தலைவர் (பொதுப்பிரிவு) என்கிற பதவி வகிக்கும் பவானீஸ்வரி ஐ.பி.எஸ்.யின் குடிமைப்பணிக் கனவே,  காவல்துறைப் பணியில் கொண்டு சேர்த்தது. அதுவும் அவரைப் பொருத்தவரை அவர் எதிர்பாராத  வரம் என்றுதான் கூற வேண்டும். அவரது தாய் வழிப் பாட்டனார் வரதராஜன்,

பொள்ளாச்சி காவல்துறை துணைக் கண்காணிப்பாளராகப்  பணியாற்றி ஓய்வு பெற்றவர். காக்கிச் சட்டை வாசத்தில் வளர்ந்த பெண் என்பதால், காவல்துறைப் பணி அவருக்கு இயல்பாகவே அமைந்துவிட்ட ஒன்றாக இருந்ததில் வியப்பில்லை.

ADVERTISEMENT

"பவானீஸ்வரி ஐ.பி.எஸ்.' என்று சொன்னால், நேர்மைக்கும், திறமைக்கும் எடுத்துக்காட்டான காவல்துறை அதிகாரி என்று பொதுமக்களாலும், காவல் துறையினராலும் மட்டுமல்ல, ஆட்சியிலுள்ள அரசியல்வாதிகளாலும் அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது. கடந்த 24 ஆண்டுகளில் கடந்து வந்த பாதையில் எதிர்கொண்ட சவால்கள் அவருக்கு குடியரசுத் தலைவர் விருதுவரை பெற்றுத் தந்திருக்கிறது.

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணனைத் தந்த அதே திருத்தணி இப்போது வழங்கி இருக்கும் இன்னொரு ஆளுமை பவானீஸ்வரி. இவரது தந்தையார் மருத்துவர் கேசவராம், திருத்தணியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மிகப் பிரபலம். கைராசிக்கார மருத்துவரான அவர், மருத்துவத்தை சேவையாகக் கருதி செயல்படுபவர். அதனால் சேவை என்பது மகள் பவானீஸ்வரியின் ரத்தத்தில் ஊறிய ஒன்றாக இருப்பதில் வியப்பில்லை.
தமிழகக் காவல்துறையில் மிகவும் பொறுப்பான பதவியில் இருக்கும் பவானீஸ்வரி ஐ.பி.எஸ். மகளிர் மணிக்கு அளித்த பேட்டி இது:

சிறு வயதிலேயே காவல்துறையில் சேர வேண்டும் என்கிற கனவு உங்களுக்கு இருந்ததா?

அப்படியெல்லாம் பெரிய கனவுகள் ஏதுமில்லை. விளையாடுவது பிடிக்கும். திருத்தணியில் ஆண்கள் பள்ளியில் ஒரே பெண்ணாக நான் மட்டும் படித்து வந்தேன். சாகசம் செய்யும் பெண் என்றெல்லாம் ஒன்றுமில்லை. அமைதியான, தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்த பெண்தான் நான். 

படிக்கும்போது என்னவாக வேண்டும் என்று ஏதாவது ஆசை இருந்திருக்குமே...

அப்பா மருத்துவர் என்பதால் எனக்கும் மருத்துவம் படிக்கும் எண்ணம் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் வளர வளர ஏதேனும் அரசுப் பணிக்கு வர வேண்டும்  என்ற எண்ணம் உறுதிப்பட்டுவிட்டது. அதனால் குடிமைப் பணிக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயார் ஆனேன். அப்போதும் கூட காவல்துறைக்கு வர வேண்டும் என்று திட்டமிடவில்லை. காவல்துறை பணி என்பது நான் தேடிச் சென்றதல்ல. என்னைத் தேடி  வந்த  பணி. அதனால்தான்  எனக்குப் பிடித்திருக்கிறது.

நீங்கள் காவல்துறைப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது எப்படி உணர்ந்தீர்கள்?

காவல் பணியில் முதலில் கோவையில்  பணி நியமனம் கிடைத்தது. பணியில் சேர்ந்தேன். ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தது, என்னோடு தேர்வு எழுதியவர்களில் நான் மட்டுமே தேர்வாகியிருந்தேன். அதோடு எங்கள் தாத்தா காவல் பணியில் இருந்தவர். அவரைப் போலவே நானும் காவல் பணிக்கு வந்தது எனக்கு மட்டுமல்லாது என் குடும்பத்தினர் அனைவருக்கும் சந்தோஷம். 
 
காவல்துறைப் பணி உங்களுக்கு சவாலாக இல்லையா? பெண்கள் காவல்துறையில் ஈடுபடுவதில் சிரமம் கிடையாதா?
பெண்கள் பணிக்கு செல்வது என்பதே சவாலான ஒன்று தான். வேலைக்குச் செல்லும் வழியில் சந்திக்கும் சிக்கல்கள், பணியிடத்தில் எதிர்கொள்ளும் பிரச்னைகள், குடும்பத்தில் இருக்கும் பொறுப்புகள் என பல தடைகளைத் தாண்டித்தான் பணியாற்றுகிறோம். காவல்துறை பணியில் ஆண்களுக்கு நிகராக சாதித்துக் காட்டும்போது  கிடைக்கும் நிறைவு மிகவும் அதிகம்.

ஆண்களுக்கு நிகராக சாதனைகளைச் செய்யும்போது அதற்கான அங்கீகாரம் கிடைக்கிறதா?

பொதுவாகவே, பெண்கள் முழுத் திறனையும் வெளிப்படுத்தி நூறு சதம் வேலைகளை செவ்வனே செய்தாலும் அவர்களுக்கான அங்கீகாரம் என்னவோ 50 சதவீதம் கூட இல்லை. இதுவே ஆண்கள் என்றால் அவர்களது அங்கீகாரம் முழுமையானது. எந்தத் துறை என்றாலும் இது கண்கூடான விஷயம். இப்படியான சூழலில்   ஆரம்ப நிலையிலிருந்து உயர் அதிகாரிகள் வரை காவல் பணிக்கு வரும் பெண்கள் அனைவருமே போராடித்தான் தங்களை நிலைநிறுத்திக் கொண்டாக வேண்டும்.

நீங்கள் பணியில் சேர்ந்தபோது இருந்த நிலைமைதான் இப்போதும் தொடர்கிறதா?

நான் பணிக்கு சேர்ந்து ஏறத்தாழ கால் நூற்றாண்டு ஆகப்போகிறது. 24 வருடத்தில் நிறைய சவால்கள் இருந்தன. இரவு காவல் பணியில், ரோந்து பணியில் கழிவறை கூட இல்லாத சூழல் தொடங்கி பல நடைமுறைச் சிக்கல்கள் இருந்தன. மகப்பேறு விடுமுறை இப்போது போல முன்பு இல்லை. இப்படியான சவால்கள் நிறைய இருந்தன. தற்போது நிலைமை மாறியிருக்கிறது. அங்கீகாரம் கிடைக்கும் நிலை உருவாகியிருக்கிறது. காவல் பணியில் பெண்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள்.

காவல்துறை அதிகாரியாக நீங்கள் உங்களுக்கென்று கையாளும் வழிமுறைகள் என்று ஏதாவது ஏற்படுத்திக் கொண்டிருக்கிறீர்களா?

நிச்சயமாக... என்னுடைய பகுதியில் சட்டத்திற்குப் புறம்பான விஷயங்கள், குற்றங்கள் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சட்டத்திற்கு உட்பட்டு பொதுமக்களுக்கு எவ்வளவு உதவ முடியுமோ அவ்வளவு உதவ வேண்டும். இதை மட்டுமே மனதில் கொண்டு தான் இத்தனை காலமும் பணியாற்றி வருகிறேன். சட்டம் ஒழுங்கு பணியில் இருந்தால் நடந்தே ரோந்து பணியை மேற்கொள்வதும் உண்டு. நேரடியாக மக்களிடம் பேசி விவரங்களைத் தெரிந்து கொள்வேன். என்னுடைய செல்லிடபேசி எண்ணில் பொதுமக்கள் என்னை அழைக்க முடியும். இதெல்லாம் குற்றச் செயல்களை குறைக்கும், மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும்.

உங்களது கால் நூற்றாண்டு காவல்துறைப் பணியில் மாற்ற முடியாத வழக்கு என்று சொன்னால் அது எது?

குற்றப் புலன் விசாரணைப் பிரிவில் இருந்த போது குளித்தலை மீனாட்சி வழக்கு ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் அதிகம் பேசப்பட்டது. பல சுவாரஸ்யங்கள் நிறைந்த வழக்கு அது. குற்றவாளியை கண்டுபிடித்து விசாரணை நடத்தி வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனையும் குற்றவாளிக்கு கிடைத்தது.

உங்களால் மறக்க முடியாத வேறு ஏதாவது காவல்துறை தொடர்பான நிகழ்ச்சிகளைச் சொல்லுங்களேன்?

நான் பயிற்சியில் இருந்த போது ஒரு பேச முடியாத மாற்றுத்திறனாளிப் பெண்ணை ஒருவன் ஏமாற்றி கர்ப்பமாக்கி விட்டான். சில நடவடிக்கைகளுக்குப் பிறகு அவன் உண்மையை ஒப்புக்கொண்டான்.  அந்தப் பெண்ணை திருமணமும் செய்து கொண்டான். அந்த பெண் நன்றாய் இருக்கிறாள். அதேபோன்று கலப்புத் திருமணம் செய்து கொண்ட கணவன்- மனைவி இருவரும்  ஜாதி பிரச்னையாகி விடும் என்றும் கொல்லப்படலாம் என்றும் பயந்து காவல் நிலையம் வந்தனர். மிரட்டல்களும் இருந்தன. அவர்களுக்குப் பாதுகாப்பு கொடுத்து பேச்சு வார்த்தை நடத்தி சரி செய்தோம். இப்போது இரண்டு குழந்தைகளோடு நன்றாக  வாழ்கிறார்கள். அவ்வப்போது குழந்தைகளோடு வந்து பார்ப்பார்கள். இப்படி எத்தனையோ மறக்க முடியாத சம்பவங்கள், மனிதர்களை கடந்த 24 ஆண்டுகளில் சந்தித்தாயிற்று.

காவல்துறையில் பெண்கள் மீதான தாக்குதல்களை எதிர்கொள்ள என்னவெல்லாம் வசதிகள் இருக்கின்றன என்று சொல்ல முடியுமா?

பெண்களுக்காக பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் தொடங்கி பல செயலிகள் வரை இருக்கின்றன. எதிர்பாராத ஆபத்து வந்தால் "காவலன் செயலி' இருக்கிறது. உங்கள் செல்லிடபேசியை பலமாக அசைத்தாலே நீங்கள் இருக்குமிடம் வரை தகவல்கள் காவல் துறைக்கு உடனே கிடைத்துவிடும். காவல் துறையைத் துணிந்து அணுகுங்கள், நிச்சயம் நியாயமும் பாதுகாப்பும் கிடைக்கும். உயர்நிலை அதிகாரிகள் வரை எல்லாரையும் அணுக எளிதான நிலையில் தான் இருக்கிறோம். தேவையற்ற கற்பனைகளில் சிக்கி உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்.

பெண்கள் காவல் பணியில் எப்படி  செயல்படுகிறார்கள்...?

மற்ற பணிகளை விடக் காவல் பணி சவால்கள் நிறைந்தது என்பது உண்மைதான். ஆனால், பெண்களால் முடியாதது என்று எதுவும் இல்லை. இது முடியாது அது முடியாது என்று பட்டியல் இடுவதெல்லாம் ஒரு மாயை தான். எல்லாமும் நம்மால் முடியும். இயற்கை அனைவருக்கும் ஆற்றலை சமமாகவே தந்துள்ளது. பெண் காவலர்கள் நிறைய சாதித்தும் இருக்கிறார்கள். போக்குவரத்து பணி முதல் விசாரணை வரை அற்புதமாக செயல்படுகிறார்கள். பணியில் அவர்கள் கவனமும் பொறுப்புணர்வும் கொண்டவர்கள். தரமான சேவையை வழங்குவதில் சிறந்தவர்கள்.

உங்கள் குடும்பம் எப்படி துணை நிற்கிறது?

காவல் பணியில் இருப்பவர்களுக்கு அவர்களது குடும்பம் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். அப்போது தான் நாம் திறம்பட செயல்பட முடியும். என்னைப் பொருத்த வரை என் குடும்பம் எனக்கு எல்லா விதத்திலும் உறுதுணையாகவும் நல்ல புரிதலோடும் இருப்பது தான் என்னுடைய இத்தனை ஆண்டு சேவைக்கு மிகப் பெரிய காரணம். என்னுடைய அம்மா, அப்பாவை முக்கியமாகச் சொல்ல வேண்டும். கணவரும் குழந்தைகளும் அனுசரனையாக இருப்பது காவல் துறையின் பணிபுரியும் எங்களுக்கு மிகப்பெரிய வரம்.

தற்போது தலைமையகத்துக்கு வந்திருக்கிறீர்கள். எப்படி உணர்கிறீர்கள்?

எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை விட மக்களோடு இருக்கிறோம் என்பது தான் உண்மை. நான் விரும்புவதும் அதுதான். மக்களோடு தொடர்புடைய பணி என்பதில் தான் ஆத்ம திருப்தி.

ஐ.பி.எஸ். கனவோடு முயலும் பெண்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன?

ஐ. பி. எஸ். கனவு காணும் பெண்கள் முயன்று தேர்வெழுதுங்கள். தற்போது நல்ல மரியாதை கிடைக்கத் தொடங்கியிருக்கிறது. பெண்கள் அதிகமாக காவல் பணிக்கு வர வேண்டும். அப்படி வருவது காவல் துறைக்கு மட்டுமல்லாமல் நாட்டிற்கே நல்லது. லட்சியத்தோடு வாருங்கள், நிறைய சாதிக்க முடியும். போட்டி போட்டே சம எண்ணிக்கையில் சமமாகப் பணிபுரிவோம். கடினமான பணியில் தான் நமது திறமைகள் வெளிப்படும். எதற்காகவும் விட்டுக்கொடுத்து விடாமல் தொடர்ந்து முன்னேறினால் வெற்றி நிச்சயம். 

இன்னும் என்ன சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

அப்படி எதையும் வகுத்துக் கொள்ளவில்லை. மனசாட்சிப்படி செயல்பட வேண்டும். என்னை மனசாட்சித்தான் வழிநடத்துகிறது.  ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு நல்ல விஷயம் செய்ய வேண்டும். அந்த ஆத்ம திருப்தியோடு தூங்க வேண்டும். வறுமையில் இருப்போர், எளிய மனிதர்களுக்கு நம்மால் ஆனதைச் செய்ய வேண்டும். வாழ்நாள் முழுவதும் இப்படியே எளிமையாய் வாழ்ந்து விட வேண்டும் அவ்வளவு தான். 

தீர்வுகளை நோக்கி நகர்வதே புத்திசாலித்தனம்

பெண்களுக்கு எங்கேனும் சிக்கல்கள் தொந்தரவுகள் இருந்தால் முதலில் மனதைரியத்தோடு அதனை அணுகுங்கள். வெளியில் வரும் போது கவனமாய் இருங்கள். காதில் இயர் போனை மாட்டிக்கொண்டு உங்கள் செல்லிடபேசியில் மூழ்கிவிடாதீர்கள். உங்கள் சூழலில் கவனம் வையுங்கள். உங்களைச் சுற்றி இருப்போர், கடந்து போவோர் எவரேனும் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கலாம், அதனால் விழிப்போடு இருங்கள். தவறு எங்கேனும் நிகழ்ந்து விட்டால் தனியே மனதில் வைத்துக் குமைந்து கொண்டிருக்காதீர்கள். தீர்வுகளை நோக்கி நகர்வதே புத்திசாலித்தனம். யாரோ தவறு செய்ததற்கு நீங்கள் மனதளவில் தண்டனை அனுபவிக்காதீர்கள். அதனால் காவல் துறையை நாடுங்கள் தாராளமாக.
 

Tags : மகளிர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT