மகளிர்மணி

நவராத்திரி  சுண்டல் ஸ்பெஷல்! 

ஏ. காந்தி

காராமணி இனிப்பு சுண்டல்

தேவையானவை: வெள்ளை காராமணி - 1 கிண்ணம், வெல்லம் -அரை கிண்ணம், நெய் - 2 தேக்கரண்டி, ஏலக்காய்த்தூள்- கால் தேக்கரண்டி, தேங்காய்த் துருவல் - 3 தேக்கரண்டி.

செய்முறை: வெள்ளை காராமணியை 6 மணி நேரம் ஊறவிட்டு, வேகவிட்டு எடுக்கவும். வெல்லத்தைக் கரைத்து, வடிகட்டி கெட்டிப்பாகு காய்ச்சவும். வாணலியில் நெய்யைச் சூடாக்கி, காராமணியை சேர்க்கவும். கூடவே, காய்ச்சிய வெல்லப்பாகு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். இறக்குவதற்கு முன் தேங்காய்த் துருவல் தூவி இறக்கவும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சுண்டல் இது.

மிக்ஸ்டு வெஜ் சுண்டல்

தேவையானவை: முளைகட்டிய ஏதேனும் ஒரு பயறு - 1 கிண்ணம், கேரட் - ஒன்று (துருவிக் கொள்ளவும்), வெள்ளரித் துண்டுகள் - கால் கிண்ணம், வேக வைத்த உருளைக்கிழங்கு துண்டுகள் - கால் கிண்ணம், தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), பச்சை மிளகாய் - 2 தேக்கரண்டி(நறுக்கியது), சீரகத்தூள் - 1 தேக்கரண்டி, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு- தேவையான அளவு. 

செய்முறை: முளை கட்டிய பயறை ஆவியில் வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய்யைச் சூடாக்கி, கறிவேப்பிலை தாளித்து, காய்கறிகளை சேர்த்து வதக்கவும். இதனுடன் வேக வைத்த பயறு, உப்பு, பச்சை மிளகாய், சீரகத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். சத்துகள் மிகுந்த வெஜ் சுண்டல் ரெடி.

ராஜ்மா கட்டா மிட்டா சுண்டல் 

தேவையானவை: ராஜ்மா - 1 கிண்ணம், பச்சை மிளகாய் - 2, வெல்லம் - சிறிய துண்டு, எலுமிச்சைச் சாறு - 2 தேக்கரண்டி, தேங்காய்த் துருவல் - 3 தேக்கரண்டி, கடுகு, சீரகம் - தலா கால் தேக்கரண்டி, கறிவேப்பிலை, நறுக்கிய கொத்துமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: ராஜ்மாவை 10-12 மணி நேரம் ஊற வைத்து, குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்யைச் சூடாக்கி, கடுகு, சீரகம், கறிவேப்பிலை, கீறிய பச்சைமிளகாய் சேர்த்து தாளிக்கவும். வெந்த ராஜ்மா, உப்பு சேர்க்கவும். வெல்லத்தைச் சிறிது நீரில் கரைத்து, வடிகட்டி சேர்க்கவும். எல்லாம் நன்கு கலந்தவுடன் கொத்துமல்லி, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கி, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்தால், புளிப்பும், இனிப்பும் கலந்த "கட்டா மிட்டா' சுண்டல் ரெடி.

சாபுதானா சுண்டல்

தேவையானவை: ஜவ்வரிசி -1கிண்ணம், முளை கட்டிய பச்சைப் பயறு - முக்கால் கிண்ணம், கீறிய பச்சை மிளகாய் - 2, இஞ்சித் துருவல் -  ஒரு தேக்கரண்டி, கேரட் - ஒன்று (துருவிக் கொள்ளவும்), நெய் - ஒரு தேக்கரண்டி, கொத்துமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு. 

செய்முறை: ஜவ்வரிசியை வேகவைத்து நீரை வடித்துக் கொள்ளவும். வாணலியில் நெய்யைச் சூடாக்கி, பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், வேக வைத்த ஜவ்வரிசி, பயறு, உப்பு சேர்த்துக் கிளறவும்.  அதனுடன் துருவிய கேரட் சேர்க்கவும். பின்னர் கொத்துமல்லி தூவி, (விருப்பப்பட்டால்) தேங்காய்த் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்.

பச்சைப்பயறு பனீர் சுண்டல்

தேவையானவை: பச்சைப்பயறு -  1கிண்ணம், பனீர் துருவல் - முக்கால் கிண்ணம், இஞ்சித் துருவல் -1தேக்கரண்டி, கரம் மசாலாத்தூள்- 1 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் - 2, சீரகம் - கால் தேக்கரண்டி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. 
செய்முறை: பச்சைபயறை ஆவியில் வேகவிடவும். வாணலியில் எண்ணெய்யைச் சூடாக்கி, சீரகம், காய்ந்த மிளகாய் தாளித்து, இஞ்சித் துருவல் சேர்க்கவும். அதனுடன் வெந்த பாசிப்பயறு, உப்பு சேர்த்துக் கலக்கவும். பின்னர், கரம் மசாலாத்தூள், பனீர் துருவல் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும் சுவையான  பச்சைப்பயறு பனீர் சுண்டல். 

சிவப்பு காராமணி சுண்டல்

தேவையானவை: முளைகட்டிய சிவப்பு காராமணி -1 கிண்ணம், மிளகாய்த்தூள் -1 தேக்கரண்டி, கடுகு, உளுந்தம்பருப்பு  - தலா கால் தேக்கரண்டி, கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய்த் துருவல் - 2  தேக்கரண்டி, எண்ணெய், உப்பு - தேவையான யளவு. 

செய்முறை: முளைகட்டிய காராமணியை வேக வைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்யைச் சூடாக்கி, கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, வேக வைத்த காராமணியை சேர்க்கவும். மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறவும். சிறிது தண்ணீர் தெளித்து (ஒரு ஸ்பூன் அளவு) நன்கு கலக்கவும். தேங்காய்த் துருவல் தூவி கிளறி இறக்கவும்.

கொண்டைக்கடலை ஃப்ரூட் சுண்டல்

தேவையானவை: முளைகட்டிய வெள்ளை கொண்டைக்கடலை -1 ஒரு கிண்ணம், ஆப்பிள் -1(சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்), மாதுளை முத்துக்கள் - 1 கைப்பிடி, திராட்சைப்பழம் - 20, செவ்வாழைப்பழம் - 1(சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்), சாட் மசாலா - 1 தேக்கரண்டி, எலுமிச்சைச் சாறு - 1தேக்கரண்டி, தேன் - 1 தேக்கரண்டி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: முளைகட்டிய கொண்டைக் கடலையை சிறிதளவு உப்பு சேர்த்து, வேக விடவும். ஒரு பாத்திரத்தில் வெந்த கடலை, நறுக்கிய ஆப்பிள் துண்டுகள், வாழைப்பழத் துண்டுகள், மாதுளை முத்துகள், திராட்சை, சாட் 
மசாலா, எலுமிச்சைச் சாறு, தேன் சேர்த்து நன்கு கலந்தால் சுவையான கொண்டைக்கடலை  ப்ரூட் சுண்டல் ரெடி. 

பூம்பருப்பு சுண்டல்

தேவையானவை: கடலைப்பருப்பு - 1
கிண்ணம், கீறிய பச்சை மிளகாய் - ஒன்று, காய்ந்த மிளகாய் - 2, இஞ்சித் துருவல் – - அரை தேக்கரண்டி, பெருங்காயத்தூள் -  கால் தேக்கரண்டி, மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி, கொத்துமல்லி - சிறிதளவு, தேங்காய்த் துருவல் -3 தேக்கரண்டி, கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம் -கால் தேக்கரண்டி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. 

செய்முறை: கடலைப்பருப்பை, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்து எடுக்கவும் ( ஊற வைத்து செய்வதானால், பாத்திரத்தில் வேக வைக்கவும். பருப்பை குழையாமல் மலர வேக வைக்கவும்). வாணலியில் எண்ணெய்யைச் சூடாக்கி, கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சித் துருவல் தாளித்து, வேக வைத்த பருப்பு, உப்பு சேர்த்துக் கிளறவும். தேங்காய்த் துருவல், நறுக்கிய கொத்துமல்லி சேர்த்துக் கிளறி இறக்கினால், பூம்பருப்பு சுண்டல் தயார்.

மக்காச்சோள சுண்டல்

தேவையானவை: மக்காச்சோளம் - 1கிண்ணம், கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள் - தலா கால் தேக்கரண்டி, கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. 

அரைக்க: இஞ்சி - சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 2, சோம்பு - கால் தேக்கரண்டி,தேங்காய்த் துருவல் -2 தேக்கரண்டி.

செய்முறை: மக்காச் சோளத்தை 8 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, குக்கரில் வேக வைக்கவும். அரைக்க கொடுத்துள்ளவற்றை அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்யைச் சூடாக்கி, கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து வெந்த சோளம், அரைத்த மசாலா, உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து நன்கு கிளறி விடவும். 2 நிமிடம் கழித்து தேங்காய்த் துருவல் தூவி இறக்கவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

SCROLL FOR NEXT