மகளிர்மணி

தாயிற் சிறந்த பள்ளி இல்லை!

ந.முத்துமணி

முன்பெல்லாம் வீதியில் காலார நடந்து சென்றால், "அ...அம்மா, ஆ...ஆடு" என்ற அரிச்சுவடி, "அறஞ் செய விரும்பு, ஆறுவது சினம்..." என்ற ஒளவையின் ஆத்திச்சூடியை தாய், தனது குழந்தைகளுக்கு சொல்லி தருவது நமது காதுகளில் இனிமையாக ஒலிக்கும்.
அன்றைக்கு வீடுகள் பள்ளிக்கூடங்களாக இருந்தன. கற்பித்தலும், கற்றலும் வீடுகளில் குதூகலித்தன. அந்தக் கால வாழ்க்கை கரோனாவினால் மீண்டும் நமக்கு கிடைத்திருக்கிறது. பள்ளிக்கூடங்கள் கரோனாவால் மூடப்பட்டுள்ளன. குழந்தைகள் வீடுகளில் முடங்கிக்கிடக்கிறார்கள். நம் குழந்தைகளை நல்மனிதனாக்குவதற்கு கிடைத்துள்ள மிகச்சிறந்த வாய்ப்பு தான், வீட்டுப்பள்ளி( Home Schooling).
அதாவது, வீடுகளே பள்ளிகளாக மாறுவது. தாயே, ஆசிரியராக கற்றுத்தருவது. குழந்தையே, மாணவராக கற்றுக்கொள்வது. இந்த நூற்றாண்டில் பெற்றோர், குழந்தைகளும் நீண்ட காலத்திற்கு ஒரே இடத்தில் சேர்ந்திருப்பது, கரோனா காலமாக தான் இருந்திருக்கும். இதை சாபமாக கருதாமல், சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கல்விக்கூடங்களால் சொல்லித்தர முடியாத மனித வாழ்வியலை குழந்தைகளுக்கு சொல்லித்தர இதைவிட நல்லதருணம் வாய்த்து விடாது. நல்லப்பள்ளிக்கு போகாத குறையை, கலை, விளையாட்டை கற்றுக்கொள்ள வாய்ப்பில்லாத குறையை வீட்டுப்பள்ளி செய்து முடிக்கும். பள்ளிகளைக் கண்டு கோபம் கொள்ள வைக்கும் வீட்டுப்பாடம், கட்டுப்பாடுகள், தேர்வு,மதிப்பெண், போட்டித்தேர்வு போன்றவை இல்லாத சூழலில் அம்மாவின் மடியில் அமர்ந்து பாடம் கற்கும் வாய்ப்பு அமைத்திருக்கிறது.
பாடத்திட்டம்: வீட்டை பள்ளிகளாக மாற்ற நினைக்கும் பெற்றோர், சொந்தமான கற்பித்தல் முறையை, பாடதிட்டங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஒருசிலர் மத்திய அரசின் சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., ஐ.ஜி.சி.எஸ்.இ., மாநில பாடதிட்டங்கள், வால்டார்ஃப் போன்ற பாடதிட்டங்களில் ஏதாவதொன்றை கற்றுத்தர முனைகிறார்கள். இவை தவிர, தேசிய திறந்தப் பள்ளி மையம் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்கூலிங் - என் ஐ ஒ எஸ் அடிப்படையிலும் பாடம் சொல்லித்தருகிறார்கள்.
பெரும்பாலான குடும்பங்கள் எந்த பாட திட்டத்தையும் பின்பற்றாமல் சொந்தவிருப்பத்தின் அடிப்படையில் பாடங்களை கற்றுத் தருகிறார்கள்; குழந்தைகளும் சொந்தமாக கற்றுக் கொள்கிறார்கள். குழந்தைகள் தாமாக கற்றுக்கொள்ளும் என்பது நடைமுறை சாத்தியமில்லாததாக பலருக்கு தோன்றினாலும், "முறைசாரா பள்ளி' (அன்ஸ்கூலிங்) என்றழைக்கப்படும் இம்முறை மிகப்பெரிய வெற்றியை ஈட்டித்தந்துள்ளது.
தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்குப் பதிலாக கற்றலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவது தான் வீட்டுப் பள்ளியின் தலையாய இலக்காகும்.
வீட்டுப் பள்ளியில் பயிலும் குழந்தைகள் தேர்வு எழுதமுடியுமா? என்றால் முடியும். வீட்டிலேயே படித்துவிட்டு, தேர்வை மட்டும் என்.ஐ.ஓ.எஸ். மற்றும் கேம்ப்ரிட்ஜ் இன்டர்நேஷனல் ஆகிய 2 தேர்வு வாரியங்களில் ஒன்றில் தேர்வு எழுதலாம். என்.ஐ.ஓ.எஸ்., மத்திய அரசால் நிர்வகிக்கப்படுகிறது. எனவே, மத்திய அரசின் சி.பி.எஸ்.இ., தேர்வுவாரியங்களின் தேர்வுக்கு நிகரானதாக என்.ஐ.ஓ.எஸ். தேர்வும் கருதப்படுகிறது.
பத்தாம் வகுப்புக்கும் முன்பாக வேறு எந்த தேர்வையும் எழுத வேண்டியதில்லை. நேரடியாக பத்தாம் வகுப்பு தேர்வை எழுதலாம். விரும்புவோருக்காக 3,5, 8, 10, 12-ஆம் வகுப்புகளுக்கான தேர்வை என்.ஐ.ஓ.எஸ். நடத்திவருகிறது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.nios.ac.in என்ற இணையதளத்தில் காணலாம்.


கேம்ப்ரிட்ஜ் இன்டர்நேஷனல் கல்வி வாரியம் இங்கிலாந்தை சேர்ந்தது. இந்த வாரியம், 8,10,12-ஆம் வகுப்புகளுக்கான தேர்வை நடத்துகிறது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.cambridgeinternational.org என்ற இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
ஒரு சில வகுப்புகள் வெகுவிரைவில் திறக்கப்பட்டாலும், பெற்றோரும் குழந்தைகளும் அதிகமாக உறவாடுவதற்கும், கற்பித்தல்-கற்றலுக்கும் அதிக வாய்ப்புகள் உள்ளதை பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள வேண்டும். வீடுகள், பள்ளிகளாக மாறிவிட்டால் அதைவிட குழந்தைகளுக்கு இன்பம் பொங்கும் தருணம் வேறு எதுவும் இருக்க முடியாது.
ஆழமான அடித்தளம்: சில காலம் கழித்து பள்ளிக்கூடங்கள் திறக்கலாம். குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கூடங்களுக்குத் திரும்பலாம். அதற்கு முன்பாக தற்போது கிடைத்திருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி, கற்றலுக்குத் தேவையான கல்வியின் அடிப்படைகளை பெற்றோர்கள் கற்றுத்தர முற்படலாம்.
குழந்தைகளின் மனதை துல்லியமாக புரிந்து கொள்வதற்கும், கற்றல் முறையை உணர்வதற்கும், தற்போதைய கல்விமுறை ஆழமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதா என்பதை மதிப்பிடுவதற்கும் வாழ்நாள் வாய்ப்பாக கரோனாகாலம் பெற்றோருக்கு வாய்த்திருக்கிறது.
வீட்டுப்பள்ளி என்பது கற்றலுக்கே தவிர, தேர்வுக்கு அல்ல என்பதால், அடிப்படை கற்றலை வலுவாக்க வேண்டும்.
தினசரி வாழ்க்கையில் காணப்படும் அறிவியல், கணித அடிப்படைகளை கற்க குழந்தைகளை ஊக்குவிக்கலாம். சமையலறையில் சமைக்கும்போது நேரும் வேதியல் மாற்றங்கள், தண்ணீர் குழாய்களில் நிகழும் இயற்பியல் விளைவுகளை கவனிக்க வழிகாட்டலாம்.
உணவுப் பண்டங்களின் ஊட்டச்சத்தை மதிப்பிடுவதன் மூலம் கணிதத்தை சொல்லி தரலாம். வீடுகளிலேயே முடங்கிக் கிடப்பதால் ஏற்பட்டுள்ள மகிழ்ச்சி, கோபங்கள் குறித்து குழந்தைகளோடு பேசி நேரத்தை செலவிடலாம். சொந்தமாக கதை எழுதவும், பாட்டுபாடவும், நடனம் ஆடவும், சொந்தமாக யூடியூப் சேனலை தொடங்கி கரோனா கால அனுபவங்களை பகிர்ந்துகொள்ளவும் குழந்தைகளை ஊக்குவிக்கலாம்.
குழந்தைகளின் கற்றலை இனிமையாக்கவும், புரிதலோடு அமைத்துக்கொள்ளவும் இணையதளத்தில் ஏராளமான தகவல்கள் காணக்
கிடைக்கின்றன.
கல்வி, பள்ளிகளோடு சம்பந்தப்பட்டதாக இருந்தாலும், கற்றல் என்பது எங்கும், எப்போதும், எதன் வாயிலாகவும் தினமும், காசு செலவில்லாமல் நடக்கக்கூடியது. இதை குழந்தைகளுக்கு உணர்த்த தவறக்கூடாது.
குழந்தைகளும் பெற்றோர்களும் ஒன்றாக இருக்கும் இத்தருணத்தை குடும்பங்கள் சிறப்பாக பயன்படுத்தி, தேர்வு அழுத்தங்களில் இருந்து குழந்தைகளை விலக்கிவைத்து, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவும், அறிவை பயன்படுத்தவும், இணைந்திருக்கவும் பயன் படுத்திக்கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெறாது: மம்தா

ஹே.. பொன்னி!

காதலரைக் கரம்பிடித்த சீரியல் நடிகை!

சன் ரைசர்ஸின் பேட்டிங் ரகசியத்தைப் பகிர்ந்த டிராவிஸ் ஹெட்!

ஆள்குறைப்பில் டெஸ்லா? எலான் மஸ்க்கின் முடிவு புதிதல்ல!

SCROLL FOR NEXT