மகளிர்மணி

ஈதலும் இசைபட வாழ்தலும்...

7th Oct 2020 06:00 AM | -ந.முத்துமணி

ADVERTISEMENT


கரோனா பொதுமுடக்கம்,  உலக மக்களின் சமூக, பொருளாதார, கல்வி, சுகாதார வாழ்க்கையைப் புரட்டிப்போட்டுள்ளது. ஏழ்மையை விரட்டுவதற்கு பொதுத்தொண்டே சிறந்த தீர்வாகத் தென்படுகிறது. 
அந்த வகையில் கர்நாடகத்திலும், தமிழகத்திலும் பொதுசேவையில் ஈடுபட்டு வருகிறார் ஜே.காயத்ரி. அதிலும் முதியோருக்கு சேவை செய்வதை பெரும் பாக்கியமாகக் கருதும் இவர், யார் வந்து கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல், உதவி செய்து வருகிறார். காயத்ரி, தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்:
துன்பத்தில் யார் தவித்தாலும் அங்கு என் மனம் இரங்கிவிடும். இளம் வயதில் இருந்தே பிறருக்கு உதவி செய்வதில் அதிக நாட்டம் கொண்டிருந்தேன். நமது சமூகம் முதியோரை நடத்தும் விதம் கண்டு மனம் புழுங்கியிருக்கிறேன். மக்கள்சேவையே மாதவசேவை என்ற ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் அருளால் முதியோர் நலனில் அக்கறை செலுத்தி வருகிறேன். 
2000-ஆம் ஆண்டில் ராஜகோபால பாலாஜி தொடங்கிய "பிரசாந்தி' முதியோர் நல்வாழ்வு இல்லத்தின் அறங்காவலராகப் பங்காற்றி வருகிறேன். மாணவர்களின் கல்வித் தேவைகளை நிறைவு செய்வதற்காக 2014-ஆம் ஆண்டு முதல் "ஸ்ரீ ஷீரடி பார்த்தி சாய்லட்சுமி' அறக்கட்டளையை நிறுவி, ஏழைக் குழந்தைகளுக்கு கல்விக் கட்டணத்தை அளித்து வருகிறேன்.     
மேலும், "ஸ்ரீ சத்யசாய் எம்.ஜி.ஆர்.' அறக்கட்டளையை நிறுவி தமிழ்நாடு மட்டுமல்லாது, கர்நாடகத்திலும் தமிழ் மற்றும் பிறமொழி பேசும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை ஆண்டுதோறும் அளித்து வருகிறோம். சென்னை- ராமாவரம் தோட்டத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். சிறப்புப் பள்ளிக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்குவதோடு, அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகிறேன். 
கோடைக் காலத்தில் தொடர்ந்து 2 மாதம் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கி வருகிறேன். தினமும் மதிய வேளையில் ஏழைகளுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கி வருகிறேன். தொடர்ந்து 3 மாதங்களுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்கிறேன். 
திருவான்மியூரில் உள்ள சுமார் 100 தூய்மைப் பணியாளர்களுக்கு தலா 10 கிலோ வீதம் அரிசி வழங்கினோம். பெங்களூரில் தூய்மைப் பணியாளர்கள் 130 பேருக்கு அரிசி, மளிகைப் பொருட்கள், வேட்டி, சேலை வழங்கினோம். 
கர்நாடக மாநிலம், சிவமொக்காவில் பொதுமுடக்கத்தின்போது சிக்கிக்கொண்ட திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 59 தமிழகத் தொழிலாளர்களுக்கு உணவுச் செலவுக்காக நிதியுதவி அளித்தோம். பெங்களூரில் 25 புகைப்படக் கலைஞர்களுக்கு தலா ரூ. 2,000 மதிப்புள்ள நிவாரண உதவிகளை வழங்கினோம். 

சென்னை, அரசு ஓமந்தூரார் மருத்துவமனைக்கு ஆயிரம் பிபிஇ கிட்கள், 1,500 கிலோ அரிசி, 2,000 பிஸ்கட் பாக்கெட்கள், 10,000  முகக் கவசங்கள், 25 லிட்டர் கிருமிநாசினியையும்,  சென்னை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ
மனைக்கு 5,000 கிலோ அரிசி, ஆயிரம் பிஸ்கட் பாக்கெட்கள் வழங்கினோம். 
கரோனா பரிசோதனை செய்ய வரும் புறநோயாளிகள் 100 பேருக்கு ஒரு மாதத்திற்கு தினமும் உணவளித்தோம். கிண்டியில் உள்ள அரசு கரோனா சிறப்பு மருத்துவமனைக்கு 2 கிருமிநாசினி இயந்திரம், ஆயிரம் பிஸ்கட் பாக்கெட்கள், 25லிட்டர் கிருமிநாசினி, 5,000 முகக்கவசங்கள், 600 டயபர்கள், 600 அன்டர்பேடுகள், குளியல்சோப், மோர் பாக்கெட் ஆகியவற்றை வழங்கினோம். 
பொதுத்தொண்டில் ஈடுபடுவது மிகவும் சவாலானதுதான். எந்த முயற்சியும் வெற்றி பெறுவதற்கு அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டால்தான் வெற்றி பெற முடியும். 
நமது சமூகம் முதியோரை அரவணைத்துக் கொள்ளத் தவறிவிட்டது. இன்றைய முதியோர், நேற்றைய மாமனிதர்கள். அந்த முதியோர் இல்லங்கள் இல்லாவிட்டால் முதியோரின் கதி என்னாவது? வயதால் முதிர்ந்தவர்களை அன்பால் அரவணைத்து, குழந்தைகளைப் போல பராமரிப்பது பெரும் புண்ணியமாகும்'' என்றார் காயத்ரி.

Tags : மகளிர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT