மகளிர்மணி

முயற்சியை திருவினையாக்கிய சிவரஞ்சனி

7th Oct 2020 06:00 AM | வ.ஜெயபாண்டி

ADVERTISEMENT

 

இயற்கை குறைபாட்டை கண்டு சிலர் இறைவனை சபித்து முடங்கிப் போவதுதான் வழக்கம். ஆனால், குறைகளை நிறைகளாக்கி வாழ்க்கையில் சாதித்து பிறருக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டுபவர்கள் சிலரே. அப்படி குறையை நிறையாக்கி வாழ்க்கையில் ஜெயித்துக் காட்டியிருக்கிறார் ராமநாதபுரம்மாவட்டத்தைச் சேர்ந்த சிவரஞ்சனி.
காது கேட்புத்திறன் குறைபாட்டோடு பிறந்த சிவரஞ்சனி வறுமையையும் சேர்த்து போராடி வெற்றிக் கனியையும் தட்டிப் பறித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்திய பிரிவு 4 வகைப் பணியாளர் தேர்வில் வென்று அம்மாவின் வறுமைக்கு முற்றுப்புள்ளி வைத்தது மட்டுமல்ல... அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் முன்னுதாரணத்தையும்
ஏற்படுத்தியுள்ளார்.
இனி அவரது தாயார் உதவியுடன் நம்மிடம் அவர்கூறியதாவது -
""வானம் பார்த்த ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகேயுள்ள புளியங்குடிதான் எனது பூர்வீகம். கொஞ்சூண்டு நிலம், கூலி வேலை என இருந்த அப்பா முத்து ராமலிங்கத்துக்கும், தாய் நாகவள்ளிக்கும் இரண்டு அக்காள்களளுக்கு பின்னால் மூன்றாவதாக நானும் பெண்ணாக பிறக்க, பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
காது கேட்காத நிலையில் பிறந்த என்னைக் கண்டு அப்பாவும், அம்மாவும் கலங்கி நின்றனர். ஆனாலும், என்ன செய்ய.. எங்களை வறுமை தெரியாமல் வளர்க்க ஆசைப்பட்டனர். மதுரை, ராமநாதபுரத்தில் சிறப்பு வகுப்பில் சேர்த்து என்னை பள்ளியில் படிக்க வைக்க பெற்றோர் படாதபாடு பட்டனர். பத்தாவது படித்துக் கொண்டிருந்த போதுதான் மணல் வீட்டில் மழை நீர் விழுந்தது போல அப்பாவும் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். அப்பா இல்லாத வெறுமையும், வீட்டில் வறுமையும் ஒரு சேர விரட்டின.
விவசாயக் கூலி வேலைக்குப் போன அம்மாவின் வருமானம் உணவுக்கும், உடைக்கும் கூட போதவில்லை. அப்படிப்பட்ட நிலையில் மூத்த அக்காள் எட்டாம் வகுப்போடு நின்றதால்தான், இளைய அக்காளும், நானும் கல்லூரியை எட்ட முடிந்தது. அம்மா எங்கள் படிப்புக்காக வட்டிக்கு வாங்கி அதைக் கட்டுவதற்காக சீமைக்கருவேல மரங்கள் வெட்டியும், விவசாய வேலைக்குச் சென்றும் எங்களுக்காக எறும்பாய் உழைத்தார்.
இரு அக்காள்களையும் கரையேத்திய அம்மா எனக்கு ஒரு சாதாரண வேலை கிடைத்தால் நிம்மதி என கூறிவந்தார். ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்ற நான், வீட்டில் இருக்க விரும்பவில்லை. ஜவுளி கடை வேலைக்குக் கூடப் போக விரும்பினேன். ஆனால், காது கேட்காத என்னால் எப்படி பணியாற்ற முடியும் ஆனாலும், நான் முடங்கிவிடவில்லை.
கடந்த 2018 - ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் கறவை மாடு அல்லது காது கேட்காத எனக்கு வேலை கேட்கலாம் என மனுவோடு அம்மாவும், நானும் ஆட்சியரைப் பார்க்கச் சென்றோம். வேலை கேட்ட என்னை விசித்திரமாக பார்த்த ஆட்சியர், அரசு வேலைக்கு இலவசமாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கும் பயிற்சி வகுப்பில் சேர
பரிந்துரைத்தார்.
ராமநாதபுரத்தில் தங்குவதற்கு அரசு பெண்கள் விடுதியில் இடம் கிடைத்தது. நான் பயிற்சி வகுப்பில் ஆர்வமுடன் பங்கேற்றேன். இடையில் தபால் துறையில் தற்காலிக வேலை கிடைத்தது. அதில் கிடைத்த வருமானத்தை வைத்து அரசு வேலைக்கு தொடர்ந்து முயற்சித்தேன்.
அரசு தேர்வாணையம் நடத்திய பிரிவு 2 வகை பணி தேர்வில் வென்றேன். ஆனால்...நேர்முகத் தேர்வில் நான் தேர்ச்சி பெறவில்லை. ஒரு அரசு பணித் தேர்வில் தோல்வியைத் தழுவிய நான், அதை அனுபவமாக ஏற்று அடுத்த அரசுப்பணி பிரிவு 4 வகைத் தேர்வில் பங்கேற்று வென்றேன். தற்போது தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் பணி கிடைத்துள்ளது.
எப்போதும் போல தற்போதும் அம்மா என்னுடனே சாத்தான்குளத்தில் தங்கியுள்ளார். இளநிலை உதவியாளராக நான் பணியாற்றினாலும், அம்மா கூலி வேலைக்குச் சென்று வருவதை நிறுத்தவில்லை. சிவரஞ்சனி, தனக்கு பயிற்சி அளித்த ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு இலவச பயிற்சி பிரிவு அதிகாரிகள் தனக்கு இரண்டாம் தாயாக இருந்து உதவியதை உள்ளப்பூர்வகமாக கூறி நெகிழ்கிறார்.

Tags : மகளிர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT