மகளிர்மணி

குமரியின் முதல் பெண் ஐ.பி.எஸ்.

7th Oct 2020 06:00 AM | - ஜே. லாசர்

ADVERTISEMENT

 

தொடர் தேடலும் விடாமுயற்சியும் உள்ளவர்களுக்கு மட்டுமே காலம் மகுடங்களைச் சூட்டுகிறது. அந்த வகையில் தமிழகத்தின் தென்கோடி மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து குடிமைப் பணித் தேர்வின் மூலம் ஐபிஎஸ் பணியை எட்டிப்பிடித்திருக்கிறார் பி. பிரபினா.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஆற்றூரைச் சேர்ந்த பி. பிரபினாவின் தந்தை பிரேமசந்திரன் காவல் துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தாய் ரெஜீனாள் பள்ளித் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். பிரபினாவிற்கு ஒரு சகோதரர் அவர் இறகுப்பந்து விளையாட்டு அகாதமிநடத்துகிறார்.

சிறுவயது முதலே பிரபினாவிற்கு குடிமைப் பணி தேர்வு எழுதி ஐஏஎஸ் ஆக வேண்டுமென்பது கனவாக இருந்துள்ளது. பிளஸ் 2 வில் நல்ல மதிப்பெண் பெற்ற இவருக்கு மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்ததையடுத்து கணினி அறிவியலில் பட்டம் பெற்றார். தொடர்ந்து அந்த துறை சார்ந்த வேலையை நாடாமல், தனக்குள் இருந்த கனவை எட்டிப்பிடிக்கும் வகையில் கோவையிலுள்ள ஒரு சிவில் சர்வீஸ் பயிற்சி அகாதெமியில் சேர்ந்தார். அங்கு பயின்றவாறு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினார். தொடர்ந்து 3 முறை தேர்வு எழுதிய பின்னரும் வெற்றி வசமாகவில்லை.

ADVERTISEMENT

இதனிடையே அதே அகாதெமியில் பயிற்றுநராகவும் தன்னை வளர்த்துத் கொண்ட அவர் 4-ஆவது முறையாக தேர்வு எழுதிய போது அவருக்கு ஐஆர்டிஎஸ் எனப்படும் இந்திய ரயில்வே டிராபிக் சர்வீஸ் பணி கிடைத்தது.

இந்நிலையில் கிடைத்த பணியை விடாமல் அதில் பயிற்சியில் இருந்து கொண்டே மீண்டும் 5- ஆவது முறையாக தேர்வு எழுதினார். இப்போது அவர் அகில இந்திய அளவில் 445- ஆவது இடத்தைப் பிடித்து ஐபிஎஸ் அதிகாரி பணியிடத்தை எட்டிப்பிடித்திருக்கிறார். இதன் மூலம் அவர் கன்னியாகுமரி மாவட்டத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இனி பி.பிரபினாவிடம் உரையாடியதிலிருந்து...

""ஐபிஎஸ் பணிக்கு தேர்வாகியுள்ளது குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். அதுவும் தமிழகத்தின் தென்கோடி மாவட்டமான குமரி மாவட்டத்திலிருந்து முதல் பெண் ஐபிஎஸ் ஆக வந்துள்ளது குறித்து இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. சிறுவயதிலிருந்தே என்னை எனது பெற்றோர் தைரியத்தோடு வாழ கற்றுக்கொடுத்தனர். பெண் என பாகுபாட்டை என்னிடம் காட்டியதில்லை. ஐபிஎஸ் பணியினை என்னால் திறம் பட செய்ய முடியும்.

சிவில் சர்வீஸ் தேர்வுகள் கடினமானவை தான், ஆனால் சரியாகத் திட்டமிட்டு படிப்பதுடன் விடாமுயற்சியும், இருந்தால் நிச்சயம் வெற்றி பெறலாம். பணம் இருப்பவர்கள் மட்டும் தான் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெற முடியும், கிராமங்களைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற முடியாது என்பதெல்லாம் இப்போது கிடையாது.

பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்க முடியாதவர்களுக்குக் கூட பல்வேறு வாய்ப்புகள் இப்போது கிடைக்கின்றன. பாடப்புத்தகங்களை இணைய வழியில் இலவசமாகப் பெற்று விட முடி யும்.

அரசுத் தரப்புகளிலிருந்து நிறைய உதவிகள் இப்போது கிடைக்கின்றன. மாநில அரசுகளின் பயிற்சி மையங்களிலும் சேர்ந்து படிக்கலாம். இது தவிர தொண்டு நிறுவனங்கள், டிரஸ்டுகள் போன்றவை சிவில் சர்வீஸ் தேர்வுகள் எழுதுவோருக்கு உதவுகின்றன. எனவே கிராமங்களில் இருந்து வருகிறோம். படிப்பதற்கு பணம் இல்லையென தயங்கக்கூடாது.

புத்தகங்களை மட்டும் படித்துக் கொண்டிருந்தாலும் வெற்றி பெற முடியாது. நம்மிடையே தேடல்கள் இருக்க வேண்டும். தன்னம்பிக்கை இருக்க வேண்டும். இரண்டு, மூன்று முறை தோல்வியடைந்து விட்டால் சமூக அழுத்தங்கள் நம்மீது விழுந்து விடும். அப்போது சோர்ந்து போய்விடக்கூடாது. வெற்றி பெற்றுவிடுவேன் என்ற திடமான நம்பிக்கையை பெற்றோருக்கு அளிக்கும் போது அவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

பெண்களுக்கு மன உறுதி அவசியம். குமரி மாவட்டத்திலிருந்து முதல் பெண் ஐபிஎஸ் ஆக வந்திருப்பது குறித்து மகிழ்ச்சி தான், ஆனால் ஒரு பெண் ஐபிஎஸ் ஆக வந்துள்ளார் என்று சிறப்புப் படுத்தி சொல்லும் நிலை இல்லாமல் இயல்பாக எடுத்துக்கொள்ளும் வகையில் நிறையப் பெண்கள் இது போன்ற பணிகளை எட்டிப்பிடித்து சாதிக்க வேண்டும்'' என்றார்.

Tags : மகளிர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT