மகளிர்மணி

வெட்கத்தையும், பயத்தையும் மாற்றி அமைத்தார்!

25th Nov 2020 06:00 AM | - கண்ணம்மா பாரதி

ADVERTISEMENT

 

இரண்டு தமிழ் படங்களில், பதினான்கு மலையாள படங்களில் நடித்திருந்தாலும் கிடைக்காத அங்கீகாரத்தை, பிரபலத்தை தமிழில் மூன்றாவது படமான "சூரரை போற்று' நடிகை அபர்ணா பாலமுரளிக்கு தந்திருக்கிறது.

"இந்த அங்கீகாரத்திற்கு காரணம் நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் சுதா கொங்கராதான்' என்கிறார் அபர்ணா. 2013-இல் மலையாளத்தில் அறிமுகமான அபர்ணா தமிழில் 2016-இல் "8 தோட்டாக்கள்' மூலம் காலடி எடுத்து வைத்தார். 2019 -இல் வெளிவந்த "சர்வம் தாள மயம்' தமிழில் அபர்ணாவின் இரண்டாவது படம். மலையாளத்தில் பார்வதி, மஞ்சு வாரியர், நமிதா பிரமோத், மியா ஜார்ஜ், ஹனி ரோஸ் போன்ற முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்திருந்தாலும் மலையாள படவுலகில் பரபரப்பாகப் பேசப்படவில்லை அபர்ணா. இது குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை:

""பொம்மி வேடத்தில் நடிக்கும் முன் இயக்குநர் சுதா மேம் "மண்வாசனை', "பருத்தி வீரன்' படங்களைப் பார்க்கச் சொன்னார். வழக்கமான வீட்டு வேலை செய்து அடங்கிப் போகும் பெண்ணாக இல்லாமல் சொந்தக்காலில் நிற்க பேக்கரி நடத்தும் தொழில் முனைவராகக் காட்டியிருப்பதுடன் "ஆணுக்கு பெண் சமம்' என்ற சமத்துவத்துடன் "உன் பணம் என் பணம் என்று பார்த்தா சோத்துல விஷம் வச்சிருவேன்..' என்று மிரட்டும் பொம்மியாக வலம் வந்த என்னை தமிழகம் நன்றாகவே கொண்டாடுகிறது.

ADVERTISEMENT

மதுரை மண்வாசனையுடன் ஹீரோவுக்கு சவாலாகவும், படம் முழுவதும் வசனம் பேசுவதில் உதவ சத்யா, விருமாண்டி போன்றவர்கள் உதவினார்கள். கிராமத்துப் பெண் என்றால் எடுத்ததுக்கெல்லாம் வெட்கப் படணும்.. பயப்படணும். அதை இயக்குநர் சுத்தமாக மாற்றி அமைத்தார். வழக்கமான காதல் காட்சிகளுக்கும் தடை போட்டார்.

"காட்டுப் பயலே...', "வெய்யோன் சில்லி' பாடல்களை வித்தியாசமாகப் படமாக்கினார். இவை எல்லாம் எனக்குப் புது அனுபவம்.

"" படத்தில் வரும், "ஒன்ன 20 பேர் வேணாம்ட்டாங்க...' என்று ஹீரோ பொம்மியை கலாய்க்க, "ஒங்க ஐடியாவையுந்தான் 24 பேங்க்ல வேணாம்னு சொல்லிட்டாங்க, அதைப் பத்தி பேசுவோமா?'' என்று பொம்மி எடக்கு மடக்காக பேசும் வசனக் காட்சி எனக்குப் பிடித்தமான காட்சி. சுருக்கமா சொன்னா சுதா மேமும், சூர்யா அவர்களும் என்னை வேற லெவலுக்கு உயர்த்திட்டாங்க.

"கேரளத்தில் திருச்சூர் எனது சொந்த ஊர். அப்பா பாலமுரளி இசை அமைப்பாளர். அம்மா ஷோபா வழக்கறிஞர். பின்னணிப் பாடகியும் கூட. "கட்டடக் கலை' படித்த நான் வாய்ப்பாட்டு பயிற்சி பெற்றிருப்பதுடன் சாஸ்த்திரிய நடனங்களையும் கற்றுள்ளேன். ஆறு மலையாள படங்களில் பாடியும் உள்ளேன்'' என்று சொல்கிறார் அபர்ணா பாலமுரளி.

Tags : மகளிர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT