மகளிர்மணி

வெற்றி சுலபமாக கிடைத்துவிடவில்லை!

பூா்ணிமா


பார்வை குறைபாடு உள்ளவர்கள் முயற்சித்தால், அவர்கள் நினைத்ததை சாதிக்க முடியும். அதற்கான உதவிகளை அளிப்பது முக்கியம் என்ற நோக்கத்தோடு பெங்களூரில் "மித்ர ஜோதி' என்ற பெயரில் தொண்டு நிறுவனமொன்று செயல்பட்டு வருகிறது. இதன் நிர்வாக அமைப்பாளர் மது சிங்கலும் பார்வை குறைபாடு உள்ளவர்தான். பார்வை குறைபாடு உள்ளவர்கள் கல்வி கற்கவும், தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும் கடந்த 30 ஆண்டுகளாக "மித்ரஜோதி' செயலாற்றி வருகிறது. இதுவரை இதன்மூலம் 13,500 பேர் படித்து பயனடைந்துள்ளனர். பலர் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதி வெற்றிப் பெற்றுள்ளனர்.

ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த மது சிங்கல் பிறவியிலேயே பார்வை குறைபாடு உள்ளவராக இருந்தாலும், இந்துஸ்தானி சங்கீதத்தில் தேர்ச்சிப் பெற்றவுடன் இந்திய பல்கலைக்கழகங்கள் ஏதாவது ஒன்றில் சங்கீத விரிவுரையாள ராக பணியாற்ற விரும்பி 1987- ஆம் ஆண்டு பெங்களூரு வந்தார்.

அந்தக் காலகட்டத்தில் பார்வை குறைபாடு உள்ளவர்களில் பலர், தங்கள் வாழ்க்கைக்கு வருமானத்தைத் தேடித்தரும் என்ற நம்பிக்கையில் சங்கீதம் பயிற்சிப் பெறவே விரும்புவதுண்டு, பெங்களூரில் தன்னுடைய மூத்த சகோதரியுடன் நிரந்தரமாக தங்கியிருந்த மது சிங்கல், இந்த அடிப்படை எண்ணத்தை மாற்றவும், கர்நாடகாவில் பார்வை குறைபாடு உள்ள சமூகத்தினருக்கு சேவை செய்யவும் விரும்பினார். இதற்காக தொண்டு நிறுவனமொன்றை தொடங்கும் எண்ணம் அப்போது அவர் மனதில் இல்லை என்றாலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் அமைப்பொன்றை நடத்திவந்த ஹேமா என்பவரின் நட்பு கிடைத்தது.

அந்த நேரத்தில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு கல்வி கற்பிக்க, தொழில் பயிற்சி அளிக்க அவ்வளவாக அடிப்படை வசதிகள் இல்லை. பிரெய்லி பயிற்சியளிக்கும் பள்ளிகளோ, சமூகசேவை மையங்களிலோ தேர்ச்சிப் பெற்றவர்களும் இல்லை. அதனால் இளவயதினர் கல்விகற்க முடியாமல் சிரமப்பட்டனர். இதையறிந்த மது, பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு உதவும் பொருட்டு அமைப்பொன்றை தொடங்க முடிவு செய்தார். இந்த முடிவு மது குடும்பத்தினருக்கு ஆச்சரியத்தை அளித்தாலும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. திட்டம் போட்டாயிற்று போதுமான நிதிவசதியும் இல்லை. 1990-ஆம் ஆண்டு ஹேமா உதவியுடன் அவரது வீட்டு கேரேஜிலேயே "மித்ரஜோதி' என்ற பெயரில் அமைப்பொன்றைத் தொடங்கினார். சிறிய கேரேஜில் ஆரம்பித்த மித்ரஜோதி விரைவில் வளர்ச்சியடைந்து இன்று பெங்களுரூ எச். எஸ் .ஆர் லே- அவுட்டில் சொந்த கட்டடம் ஒன்றில் செயல்பட்டு வருகிறது. இந்த அசுர வளர்ச்சி எப்படி நிகழ்ந்தது என்பதை இனி மது சிங்கலே கூறுவார்:

""என்னுடைய முயற்சிக்கான வெற்றி சுலபமாக கிடைத்துவிடவில்லை. ஹேமா வீட்டு கேரேஜில் மித்ர ஜோதி தொடங்கிய போதே நானும் சில நண்பர்களும் சேர்ந்து, பார்வை குறைபாடு உள்ள மாணவர்கள் கற்பதற்கு வசதியாக எங்களிடமிருந்த பெரிய டேப்-ரிகார்டிலும், வெற்று காசெட்களிலும் அவர்களுக்குத் தேவையான பாட புத்தகங்களைப் படித்து பதிவு செய்தோம். இன்று நவீன தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக ஒலிநாடா பயன்பாடு மறைந்து, பதிவேற்றம் செய்த குறுந்தகடுகள், பேசும் புத்தகங்கள் என வசதிகள் பெருகிவிட்டன. இந்த அசுர வளர்ச்சியை நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை. ஆயிரக்கணக்கில் பொது அறிவு பாடப் புத்தகங்களைச் சேகரித்து வாசகசாலை அமைத்து பாதுகாக்க வேண்டிய அவசியமின்றி போய்விட்டது. நாளடைவில் எங்கள் அமைப்பில் சேரும் மாணவர்- மாணவியர் எண்ணிக்கை அதிகரிக்கவே இடவசதிக்காக இருப்பிடத்தை அடிக்கடி மாற்ற வேண்டியதாயிற்று. பிரெய்லி புத்தகங்களையும், தேவையான பாடப் புத்தகங்களையும் பாதுகாப்பாக கொண்டு செல்வது சிரமமாக இருந்தது. மேலும் படிக்க வரும் மாணவர்களும் புதிய முகவரியை கண்டுபிடிக்க சிரமப்பட்டனர்.

மித்ரஜோதியில் பயிலும் மாணவர்களுக்கு நல்ல உள்ளம் படைத்த பலர் உதவ முன்வந்ததால், நிரந்தரமான கட்டடம் ஒன்றை அமைக்க 2005-ஆம் ஆண்டு பெங்களூரு நகர அபிவிருத்த வாரியத்தில், ப்ளாட் ஒன்றை ஒதுக்கி தரும்படி கேட்டேன். ஆனால், எங்கள் கோரிக்கையை ஏற்று நிலம் ஒதுக்குவது அத்தனை சுலபமாக இல்லை. கடின முயற்சிக்குப் பின்னர் பெங்களூரு எச்.எஸ்.ஆர் லே -அவுட்டில் நிலம் கிடைத்தது. ஆனால் கட்டடம் கட்டுவது ஒரு சவாலாக இருந்தது. என்னுடைய முயற்சியை அறிந்த மேலும் பலர் தேவையான உதவிகளை அளிக்க முன்வந்தனர். என் குடும்பத்தினரும் எனக்கு பக்கபலமாக இருந்தனர்.

2008-ஆம் ஆண்டு கட்டடம் பூர்த்தியடைந்ததோடு, 2015- ஆம் ஆண்டு மித்ரஜோதியின் வெள்ளிவிழாவையும் இங்கு கொண்டாடினோம். இந்த நிரந்தரமான கட்டடம், நிகழ்ச்சிகளை நடத்தவும், குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள் கல்விகற்க வசதியாக அமைந்துவிட்டது.

பார்வை குறைபாடு உள்ளவர்கள் முன்னேற்றத்துக்காக தொடங்கப்பட்ட மித்ரஜோதியில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடப்பதால், இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், அண்டை நாடுகளில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் இங்கு பயிற்சி பெற வருகின்றனர். கல்வி ஆதார மையம் மூலமாக உதவுவதற்கு பல சமூக ஆர்வலர்கள் தங்கள் குரலைப் பதிவு செய்து தர முன்வந்துள்ளனர். கர்நாடக பாடப்புத்தக வாரியமும் டிஜிட்டல் முறையில் இணையதளத்தில் பதிவேற்ற வசதிகள் செய்துள்ளது. இதனால் மாணவர்களுக்கு வேகமாக வாசிக்கும் திறன் அதிகரித்துள்ளது.

இன்றைய தலைமுறையினர் கல்வி கற்க நவீன தகவல் தொடர்பு தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ளதால், 2005 - ஆம் ஆண்டில் மாணவர்கள் வசதிக்காக கணினி பயிற்சி மையமொன்றையும் தொடங்கினேன். இது பிற மாணவர்களைப் போல் பார்வை குறைபாடு உள்ளவர்களும் சரிசமமாக படிக்கவும் முன்னேறவும் உதவுகிறது. இதன் மூலம் பல்வேறு மென்பொருள் பிரிவுகளையும் ஆறே மாதத்தில் கற்கமுடியும்.

தற்போது பொதுமுடக்கம் காரணமாக சில மாதங்களாக மித்ரஜோதி அமைப்பு மூட வேண்டியிருந்தாலும், இணையதளம் மூலம் பயில விரும்பும் மாணவர்கள் வசதிக்காக தொடர்ந்து பாடங்களை நடத்துகிறோம். உடல் நலன் பாதுகாப்பு கருதி மாணவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இங்கு பயின்ற மாணவர்கள் வெவ்வேறு துறைகளில் பணியாற்றுவதையும், வாழ்க்கையில் தன்னம்பிக்கையுடன் முன்னேறுவதையும் கேட்கும்போது, நான் உருவாக்கிய மித்ரஜோதி எனக்கு மனநிறைவை அளிக்கிறது. உடன் ஒத்துழைப்பு தருபவர்களுக்கும் நன்றி கூற கடமைபட்டுள்ளேன்'' என்கிறார் மதுசிங்கல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

SCROLL FOR NEXT