வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த தாழ்ந்த காற்றழுத்த மண்டலம் புயலாக உருக்கொண்டு, பிறகு சூறாவளிக் காற்றாக மாறி தமிழகத்தின் கடலோரப் பகுதிகளைத் தன் கோரப்பிடிக்குள் சிக்கவைத்து சின்னாபின்னமாக்கிக் கொண்டிருந்தது. "அசுரா' என்று அதற்கு வானிலை மையத்தவர் பெயர் வைத்ததற்குத் தகுந்தாற்போல, காற்றோடு கனமழையையும் கொண்டுவந்த புயல், ஏரிகளை உடைத்து, ஆறுகளை பெருக்கெடுக்கச் செய்து, குடியிருப்புகளை நீருக்குள் மூழ்கடித்தது.
சென்னையின் தாழ்வான பகுதிகளில் எல்லாம் நீர் சூழ்ந்துகொள்ள, நடுத்தர மக்களும், குடிசைவாசிகளும் நிலைகுலைந்து போயினர். சிறு படகுகளையும், கட்டுமரங்களையும் கடலின் கரையில் பார்த்துப் பழகிய சென்னை மக்கள், அவைகள் தெருக்களில் ஓடும் தண்ணீரில் செலுத்தப்பட்டு மக்களை, கூரைகளிலிருந்தும், வீட்டின் மொட்டை மாடிகளிலிருந்தும் காப்பாற்றியதை நேரிலும், தொலைக்காட்சிகளிலும் கண்டு கலங்கிப் போயினர்.
மழையின் தாக்கம் சிறிது குறையவே மூன்று நாள்களானது. சர, சரவென்று மீட்புப் பணிகள் அரங்கேறத் தொடங்கின. பல இளைஞர்கள் குழுவாகச் சேர்ந்து பொதுச்சேவையில் ஈடுபட்டனர். தங்களால் முடிந்தவரை உணவுப் பொருட்கள், துணிமணிகள், மருந்துகள், குடிதண்ணீர் பாட்டில்களைச் சேகரித்து, தேவையான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
அமைச்சர்களும், தொகுதி எம்.எல்.ஏக்கள், ஐ.ஏ.எஸ் ஆபிஸர்கள் என்று அனைவரும், முட்டி அளவு தண்ணீரில் நடந்து மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டனர். உயிர்பலி இருநூறுக்கும் அதிகமாக இருந்தது.
எதிர்க்கட்சியினரும் இதுதான் சமயம் என்று சரியாக முன்னேற்பாடுகளை செய்யத் தவறிய ஆளும் கட்சியினரை தொலைக்காட்சிகளில் விவாத மேடை வைத்து வறுத்து எடுத்துக் கொண்டிருந்தனர். அடுத்த தேர்தலில் ஜெயிக்க இந்த இயற்கைப் பேரழிவைப் பகடைக் காய்களாக்கி, ஆளும் கட்சித் தலைவர்களின் தலையை உருட்டிக் கொண்டிருந்தனர்.
""இன்னும் கொஞ்சம் நெய்யை ஊத்து'' என்று தன் உள்ளங்கையைக் குவித்தார் அருணாச்சலம்.
"பெயர்தான் அருணாச்சலம், கொஞ்சம் கூட கருணையில்லாத ஜடம்.' கமலத்தின் உதடுகள் முணுமுணுத்ததைக் கவனித்துவிட்ட அருணாச்சலம், ""என்னடி சொன்னே'' என்று ஓங்கி அதட்டினார்.
கதிகலங்கிப் போனாள் கமலம். இந்த ஆணவத்திற்கும், அதிகாரத்திற்கும் பயந்துதானே, பெட்டிப் பாம்பாய் அடங்கி நாற்பது வருடமாக குடும்பம் நடத்துகிறாள்.
கணவன் கேட்டபடி இன்னும் கொஞ்சம் உருக்கிய நெய்யைத் தாராளமாக ஊற்றி, கூட்டு, பொரியலை அள்ளி வைத்தாள். மூன்று அப்பளங்கள், கட்டித்தயிர் என்று திருப்தியாகச் சாப்பிட்டு எழுந்தார் அருணாச்சலம்.
பிறகு சாப்பிட உட்கார்ந்த கமலத்திற்கு, உணவு இறங்கவே இல்லை. ஊரே இப்படி அல்லோலகல்லோலப்படுது, இப்படி யாருக்கும் உதவ முன்வராத கணவனை நினைத்து மனம் வெதும்பினாள் கமலம்.
ஊரே பெரிய வக்கீல் என்று கொண்டாடுது. பல இயல், இசை, நாடக மன்றங்களுக்குத் தலைவர். பொது நிகழ்ச்சிகளில் மாலை, மரியாதைகளுடன் மேடையை அலங்கரிப்பவர். இரண்டே பெண்கள், திருமணமாகி வெளிநாடுகளில் செட்டில் ஆகிவிட்டனர். சொந்த ஊரான மாயவரத்தில் வயல், தோப்பு என்று ஏகப்பட்ட சொத்து. சென்னையில் மட்டும் என்ன இதோ மாளிகைபோல வீடு. இவ்வளவு மழையிலும், காற்றிலும், தண்ணீர் புகாத மேட்டு நிலத்தில் ஆர்க்கிடெக்டைக் கொண்டு கட்டின இந்த வீட்டைப் பார்த்தவர்கள் அசந்துபோகிறார்கள்.
இவ்வளவு இருந்தும் ஈகை குணம் இல்லையே. இரண்டு மாசத்திற்கு முன்தான் ஊரிலிருந்து ஐம்பது மூட்டை பச்சரிசி, விளைச்சலில் ஒரு பங்காக வீட்டுக்கு வந்தது. மீதியை எல்லாம் விற்று பணமாக்கியாச்சு. இரண்டு நபர்கள் அத்தனையையுமா வடித்து, கொட்டிக்கொள்ள முடியும்.
நேற்று, பத்து பேர் வெள்ள நிவராண நிதிக்கு என்று வந்தார்கள். இவரை உள்ளே கூப்பிட்டு, ""நம்மகிட்டதான் இவ்வளவு அரிசி மூட்டைகள் இருக்கே, இரண்டை எடுத்து அவர்களுக்கு கொடுக்கலாமே'' என்றேன்.
அவ்வளவுதான் சாமி வந்தாப்போல ஆடி, ""இன்னிக்கு இவனுக்குக் கொடு, நாளைக்கு ஒருத்தன் கோயிலுக்குன்னு வருவான், இன்னொருத்தன் அநாதை ஆஸ்ரமத்திற்குக் கொடுன்னு வருவான். வாயை மூடிக்கிட்டு சும்மா கிட. அவங்களை எப்படி சமாளிச்சு அனுப்பறதுன்னு எனக்குத் தெரியும். மளிகைக் கடை செட்டியார்கிட்ட பத்து மூட்டை அரிசிக்கு வேண்டிய பணத்தை வாங்கிட்டேன்''.
வாயடைத்துப்போனாள் கமலம்; வாழ்நாளில் பல சமயங்களில் அருணாச்சலம், இரட்டை வேடதாரியாக நடமாடுவதைக் கண்டு வெகுண்டு போயிருந்தாலும் முதல்முறையாக இன்று அவனுக்கு வாழ்க்கைப்பட்டதை நினைத்து, தனிமையில் கதறி அழுதாள்.
சென்னைவாசிகளின் அன்றாட வாழ்க்கை இப்படி அல்லோலகல்லோலப் பட்டாலும் நடுத்தர வகுப்பினர் சொந்த பந்தங்களின் வீட்டில் அடைக்கலம் புகுந்தனர். வசதி படைத்தவர்கள் வெள்ளம் வடியும்வரை ஹோட்டல்களில் தங்கினர். நொச்சிக்குப்பம், நடுக்குப்பம், புளியந்தோப்பு குடிசை வாசிகள் பள்ளிக்கூடங்களிலும், திருமண மண்டபங்களிலும் தஞ்சம் புகுந்தனர்.
""ஊம், வரிசையில் வாங்க'', என்று ஒருவர் நீண்டு செல்லும் கியூவைச் சரிசெய்து கொண்டிருந்தார். மழை அடங்கி, சாப்பாடு தயாரித்து வர இரண்டு நாட்கள் ஆகியிருந்தது. சுடச்சுட சாம்பார் சாதம், மந்தார இலைகளில் பெரிய, பெரிய பாத்திரங்களில் இருந்து இரண்டு கரண்டி அளவு அள்ளி வைத்து வழங்கப்பட்டது.
ஒட்டிய வயிறு, கண்களிலேயே தெரியும் பசி, களைப்படைந்த முகங்கள், வாழும் வீட்டைவிட்டு இப்படி பொது இடத்தில் வாழும் அவலம், சரியாகத் தூங்காதது என்ற வகையில் மக்களைக் கொண்ட அந்த வரிசை மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது.
""அண்ணா, இன்னும் ஒரு கரண்டி சோறு வையண்ணா. தங்கச்சி பாப்பாவுக்கு வேணும்'' என்று ஒரு சிறுவன் கெஞ்சிக் கொண்டிருந்தான்.
""போடா இப்படித்தான் எல்லோரும் கேக்கறாங்க, திரும்பிப்பாரு, எவ்வளவு பேர் இருக்காங்க, நகரு, நகரு''.
இரண்டு கரண்டி சோறுடன் மெதுவாக திரும்பி நடந்தான் முத்து என்கிற அந்த பன்னிரண்டு வயது சிறுவன். சரியாக நடக்கமுடியாத பாட்டி, இரண்டு வயது தங்கைக்கு இந்த சோறு போதுமா? தன்னைப்பற்றி அவன் ஏன் எண்ணவில்லை?
லொள்...லொள் என்று பழக்கப்பட்ட மணியின் குரலைக் கேட்டுத் திரும்பினான். அவன் குடிசைப் பகுதியில் சுற்றித் திரியும் தெருநாய் மணி வாலையாட்டியபடி நின்றுகொண்டிருந்தது.
உமிழ்நீரை வெளிப்படுத்தும் நாக்குகூட வறண்டு கிடந்தது. மக்களுக்கே இந்த கதி என்றால் நாயை யார் கண்டு கொள்வார்கள்? தட்டிலிருந்து ஒரு பிடி சாம்பார் சாதத்தை எடுத்து மணியின் முன் வைத்தான் முத்து. ஆவலாக அதை மணி சாப்பிட்டு முடிக்கும் முன், அந்த ஏரியா தெருநாய்கள் இரண்டு மணியோடு சேர்ந்துகொண்டு குரல் கொடுத்தன. தட்டிலிருந்து பிடி, பிடி சாதமாக முத்து, நாய்கள் முன் வைக்க அவை பசி யாறின.
முத்துவின் குடும்பத்தினரின் பசியாற சிலமணி நேரம் ஆகலாம். ஏன் ஒரு நாளும் ஆகலாம். முத்து சிறியவனா, பெரியவனா!
செயற்கரிய செய்வார் பெரியர்; சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (குறள்-26)
பொருள் : பிறர் செய்வதற்கு முடியாத செயல்களைச் செய்பவரே மேன்மக்கள், சிறுமையான செயல்களையன்றிப் பெருமைக்குரிய செயல்களை செய்யாதவர் சிறியவரே.
(தொடரும்)