மகளிர்மணி

தாய்லாந்தில்  கார்த்திகை தீபம் !

25th Nov 2020 06:00 AM | - டி.எம். இரத்தினவேல்

ADVERTISEMENT


காதலின் சின்னமாகவும், தேசிய திருநாளாகவும் தாய்லாந்தில் கார்த்திகைப் பௌர்ணமி நாள் கொண்டாட்டம் நடைபெறுகிறது. இந்தக் கார்த்திகை தீபத் திருவிழாவினை "லாய் கிரதாங்' என்று அழைக்கிறார்கள். அன்று இரவு முழுவதும் நாடெங்கும் தீப வரிசைகளாக அங்கிங்கெனாதபடி காணும் இடங்களில் எல்லாம் தீப ஒளிகள் நிறைந்து காணப்படும்.

நமக்கு தீபாவளித் திருநாள் எப்படி மகிழ்ச்சியை அளிக்கிறதோ அப்படி தாய்லாந்து மக்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் பண்டிகை இந்த கார்த்திகை தீபத்திருவிழாதான்.

பல நூறாண்டுகளுக்கு முன்பே தமிழகத்திலிருந்து நிறைய பழக்கவழக்கங்கள் தாய்லாந்துக்குச் சென்றன. அதில் கார்த்திகை தீபத் திருவிழாவும் ஒன்று.
கார்த்திகை விழா அங்கு சென்றதற்கு ஒரு வரலாறு உண்டு. சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் இது நடந்தது.

சுகத்தின் உதயம் என்ற பொருள் கொண்ட சுகோதயம் என்ற அரச வம்சாவளியில் ப்ருருவாஸ் சவோ என்பவர் தாய்லாந்தை ஆண்டு வந்தார். அந்த ராஜ பரம்பரையினர் தமிழகத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார்கள். தமிழ் நாட்டிலிருந்து ஏராளமான கலைஞர்களும், அறிஞர் பெருமக்களும் அங்கே சென்றார்கள். கலை, நாட்டியம், சங்கீதம், கைத்தொழில் எல்லாமே அங்கே சென்றன. அரசருக்கு நீதி நெறிகளைப் போதிக்க பல அந்தணர்களும் அங்கே சென்றிருந்தார்கள். இவர்களில் ப்ரஸ்ரீ மகாúஸாஸ் என்பவர் அந்தணர்களில் செல்வாக்காக திகழ்ந்தார். இவர்தான் ராஜபுரோகிதராகவும் விளங்கினார்.

ADVERTISEMENT

இந்த ராஜ புரோகிதருக்கு சர்வ லட்சணங்களும் நிறைந்த ஒரு மகள் இருந்தாள். ஓர் அபூர்வ அழகி அவள். நங் நோப்பமாஸ் என்பது அவள் பெயர். தாய்லாந்து மன்னன் ப்ரூருவாஸ் அவள் மீது அளவில்லாத காதல் கொண்டான். அடிக்கடி அவளைச் சந்தித்து தன் காதலை வளர்த்துக் கொண்டான். இருவரும் ஒருவரையொருவர் மனதார விரும்பினார்கள்.

பின்னர், திருமணமும் செய்து கொண்டார்கள். மன்னருக்கு மனைவியாக, பட்ட மகிஷியாக ஒரு பேரழகி வாய்த்ததை எண்ணி குடிமக்கள் மிகவும் சந்தோஷமடைந்தார்கள். இருவரும் மனம் ஒத்து வாழ, நாட்டு மக்கள் அனைவரும் அவர்கள் மீது மிகவும் அன்பு வைத்தார்கள்.

மன்னரும் மகிஷியும் கொஞ்ச காலமே மிகவும் மகிழச்சியோடு வாழ்ந்தார்கள். விதி விளையாடியது. மகாராணி நங் நோப்ப மாஸ் உடல் நலம் சிறிது சிறிதாக குன்ற ஆரம்பித்தது. மன்னர் எவ்வளவோ வைத்தியம் செய்து பார்த்தார். தமிழகத்திலிருந்து பல வைத்தியர்களை வரவழைத்துப் பார்த்தார்.

மகாராணியின் நோயைக் கண்டறியவும் முடியவில்லை. என்ன செய்தும் நோய் குணமாகவில்லை. குடிமக்கள் எல்லோரும் கண்களில் கண்ணீர் மல்க மகாராணியின் உடல் நலத்திற்காக வேண்டிப் பிரார்த்தித்துக் கொண்டார்கள். கோயில்கள் தோறும் சென்று மனமுருக வழிபட்டார்கள். யார் என்ன செய்தும் மகாராணியின் நோய் குணமாக வில்லை.

தன் முடிவு நெருங்கி வருவதை உணர்ந்த மகாராணி, அரசரை அழைத்து, ""அரசே என் வாழ்நாள் விரைவில் முடியப் போகிறது. நான் சீக்கிரம் மறைந்துவிடுவேன். என் நினைவாக நீங்கள் ஒன்று செய்ய வேண்டும். எனக்கு மிகவும் பிடித்த பண்டிகை கார்த்திகை தீபத் திருவிழாதான். எண்ணற்ற தீப வரிசைகளால் ஒளிரும் தீபங்கள் இரவைப் பகலாக்கிப் பிரகாசிக்கச் செய்யும்.

எங்கள் நாட்டில் நடக்கும் அற்புதமான கார்த்திகை தீபத் திருவிழாப் போல் இந்த நாடு முழுவதும், அனைத்து மக்களும் கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாட வேண்டும். தீபத் திருவிழா குறித்து பல பாடல்கள் இயற்றியுள்ளேன். இந்த நாட்டின் முக்கிய திருவிழாவாக கார்த்திகை தீபத்திருவிழா இருக்க வேண்டும். இருள் நீக்கி ஒளி பெருக்கும் விழா இது ஒன்றுதான். எனக்குப் பிடித்த திருவிழா இது ஒன்றுதான்'' என்று வேண்டுகோள் விடுத்தாள் மகாராணி நங் நோப்பமாஸ்.

மன்னரும் அவள் விருப்பத்தை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். அதற்கான உத்தரவுகளை அறிவித்தார். அதையறிந்த மகாராணி மிகவும் மன மகிழ்ச்சியோடு சில நாட்கள் மட்டுமே வாழ்ந்தவள், இறைவன் திருவடி அடைந்தாள். மன்னரும் மக்களும் அவளது பிரிவை எண்ணி கலங்கினார்கள்.
அதிலிருந்து, ஒவ்வொரு ஆண்டும் அவள் நினைவாக கார்த்திகை தீபத் திருவிழா இன்றும் தாய்லாந்து தேசம் முழுவதும் கோலாகலமாக, கொண்டாடப்பட்டு வருகிறது.

தாய்லாந்து மக்கள் பாரம்பரிய உடைகள் அணிந்து பாரம்பரிய இசைக்கருவிகளை வாசித்து உணர்வு பூர்வமாக தீபத் திருவிழாவைக் கொண்டாடுகிறார்கள்.

இளம் பெண்கள் சின்னச்சின்ன தாமரைகள் போல் பொம்மைப் படகுகள் செய்து அதை நதிகளிலும் கால்வாய்களிலும் மிதக்கவிடுவார்கள். அதில் விளக்குகள் ஏற்றி வைத்திருப்பார்கள்.

தாய்லாந்தில் வெகுசிறப்பாகக் கொண்டாடப்படும் இந்தக் கார்த்திகை தீபத் திருவிழாவை, பிரசித்தி பெற்ற பண்டிகைகளின் வரிசையில் ஒன்றாக "யுனெஸ்கோ' நிறுவனம் உலக பண்பாட்டு வரிசையில் குறித்துக் கொண்டுள்ளது.

Tags : மகளிர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT