மகளிர்மணி

செஞ்சு பாருங்க...

11th Nov 2020 06:00 AM

ADVERTISEMENT

 

அதிரசம் தேவையானவை:

பச்சரிசி -அரை கிலோ
வெல்லம் - அரை கிலோ
ஏலக்காய் (பொடித்தது) - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை : முதலில் பச்சரிசியை மூன்று மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு மெல்லிய வெண்ணிறத் துணியில் பரப்பி நிழல்பட காய வைக்கவும். ஈரம் காய்ந்த பிறகு நைஸாக அரைத்துக் கொள்ளவும். ஒரு அடி கனமாக உள்ள பாத்திரத்தில் வெல்லத்தைத் தூளாக்கிப் போட்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, பாகு காய்ச்சவும். பாகுப் பதமாக வரும்போது ஏலக்காய்ப் பொடி சேர்த்துப் பாகை அடுப்பில் இருந்து இறக்கி வைத்துவிட்டு, பச்சரிசி மாவை சிறிது, சிறிதாக கொட்டி கிளறவும். இந்த கலவை சிறிது ஆறியதும், சிறு சிறு உருண்டைகளாக எடுத்து, எண்ணெய் தடவியுள்ள வாழையிலை அல்லது பாலித்தீன் பேப்பரில் தட்டி கொள்ளவும்.

ADVERTISEMENT

வாணலியில், எண்ணெய் ஊற்றி சூடேறியதும், தட்டி வைத்துள்ள மாவைப் போட்டு பொரித்தெடுக்கவும். நன்றாக வெந்து, சிவந்த நிறமானதும் எண்ணெய்யை முழுமையாக வடித்து அதிரசத்தை எடுத்து, ஆறிய பின்பு பாத்திரத்தில் வைக்கவும். சுவையான அதிரசம் தயார்.

 

ரசகுல்லா


தேவையானவை :
பால் - 1 லிட்டர்
சர்க்கரை - அரை கிலோ
மைதா - 25 கிராம்
எலுமிச்சைச் சாறு - தேவையான அளவு
ரோஸ் எசன்ஸ் - இரண்டு சொட்டு
செய்முறை : முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் பாலை காய்ச்சி,
நன்றாகக் கொதி வரும்போது தேவையான அளவு எலுமிச்சைச் சாறு விட்டு நன்கு கலக்கவும். பால் திரிய ஆரம்பிக்கும். நன்றாகத் திரியும் வரை அடுப்பில் வைக்கவும்.

பிறகு, திரிந்த பாலை ஒரு மெல்லிய துணியில் கொட்டி, வடிகட்டவும். துணியின் மேல் சேர்ந்துள்ள திரிந்த பாலை நன்றாகப் பிழிந்து, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் மைதா மாவைக் கலந்து நன்றாக தேய்த்துப் பிசையவும்.

பின்னர், சிறு உருண்டைகளாக உருட்டும்போது ஒரு தட்டில் மைதா மாவை சிறிது தூவி, அதன் மேல் உருண்டைகளை வைக்கவும். பிறகு, ஒரு பாத்திரத்தில் அரை கிலோ சர்க்கரை போட்டு, தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். சர்க்கரை கொதித்து ஜீரா பதத்திற்கு வரும்போது தயாரித்து வைத்த உருண்டைகளை அதில் மெதுவாக ஒவ்வொன்றாக போட்டு பத்து நிமிடங்கள் வேக வைக்கவும். உருண்டைகள் வெந்து பந்து போல வெண்மையாக இருக்கும். இப்போது இறக்கி ஆற வைத்து ரோஸ் எசன்ஸ் சேர்த்து ஃப்ரிட்ஜில் குளிர வைத்து எடுத்தால் சுவையான ரசகுல்லா தயார்.

- ஏ.எஸ்.கோவிந்தராஜன்

 

மைசூர் பாகு


தேவையானவை :
கடலை மாவு - கால் கிலோ
சர்க்கரை - 750 கிராம்
டால்டா அல்லது நெய் - 750 கிராம்
சோடா உப்பு - 1 தேக்கரண்டி

செய்முறை: ஒரு அடிகனமானப் பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு மூழ்கும் வரை தண்ணீர் விட்டுப் பாகு காய்ச்சவும். பாகு கம்பிப் பதம் வந்தவுடன் கடலை மாவை ஒரு கையால் தூவிக் கொண்டே கட்டி சேராமல் கிளறி கொண்டே இருக்க வேண்டும். மற்றொரு வாணலியில் நெய்யை இளக வைத்து இடை இடையே கலவையில் ஊற்றி கை விடாமல் கிளறவும். நெய் கக்கி பொங்கி வரும் போது சிறிது சோடா உப்புச் சேர்த்து கிளறி நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டி கரண்டியால் நன்கு தேய்த்து விட்டால் மைசூர் பாகு ரெடியாகி விடும். ஆறுவதற்கு முன் வில்லைகள் போட வேண்டும்

 

சைனா லட்டு


தேவையானவை:
கடலை மாவு - கால் கிலோ
சர்க்கரை - அரை கிலோ
நெய் - 50 கிராம்
முந்திரி, திராட்சை - தலா 25 கிராம்
தேங்காய் - ஒரு மூடி
சீனா கற்கண்டு - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு

செய்முறை: சர்க்கரையை மிக்ஸியில் அடித்து வைத்து கொள்ளவும். தேங்காயைத் துருவி அதனுடன் முந்திரி, திராட்சை சேர்த்து நெய்யில் வறுத்து எடுக்க வேண்டும். பின்னர் வாணலியில் நெய்யை ஊற்றி நன்கு சூடானதும் கடலை மாவை கொட்டிப் பச்சை வாசனை நீங்கும் வரை வறுத்து அத்துடன் சர்க்கரை, வறுத்த முந்திரி, திராட்சை, தேங்காய்த் துருவல், ஏலப்பொடி, உப்பு, கல்கண்டு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கிளற வேண்டும். பின்னர் அதை கீழே இறக்கி சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து விட்டால் சைனா லட்டு ரெடியாகி விடும்.


- நாகை சத்யா பாபு
 

Tags : மகளிர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT