மகளிர்மணி

பெண்கள் உருவாக்கிய கருவி!

15th May 2020 04:22 PM | -ந.ஜீவா

ADVERTISEMENT

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மருத்துவம் செய்ய, போதுமான மருத்துவமனைகள் இல்லாத நிலை உருவாகியிருக்கிறது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அவர்களுக்கு மருத்துவம் செய்யும் மருத்துவர்கள், செவிலியர்களின் எண்ணிக்கை பற்றாக்குறையாகிவிட்டது. மருத்துவமனைகள் குறைவாக இருப்பது, நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள் குறைவாக இருப்பது ஆகியவை நிலைமையை மேலும் மோசமாக்குகின்றன.

இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலையைக் கண்காணித்துச் சொல்லக் கூடிய ஒரு கருவியை பெங்களூருவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் உருவாக்கியுள்ளது.

ரஞ்ஜனா நாயர், ஆருத்ரா கண்ணன் அம்பிலி, சாஞ்சி பூவையா என்ற மூன்று பெண்களின் குழு உருவாக்கியுள்ள அந்தக் கருவியின் மூலம் தொலைதூரத்தில் இருந்தே ஒரு நோயாளியின் உடல்நிலையை டாக்டர்கள், செவிலியர்கள் தெரிந்து கொள்ளலாம்.

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மூச்சுவிடத் திணறுவார்கள். மூச்சுவிடத் திணறுவதின் அளவைப் பொறுத்து வைரஸ் தொற்றால் ஏற்பட்ட அந்த நோய் குறைவாக இருக்கிறதா? நடுத்தர அளவில் இருக்கிறதா? அபாயநிலையில் இருக்கிறதா? என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். மூச்சுவிடுவதின் அளவைக் கண்டறியும் கருவியைத்தான் இந்த மகளிர் குழு உருவாக்கியுள்ளது.

ADVERTISEMENT

RIoT (Ray IoT) Solutions என்ற நிறுவனத்தைச் சேர்ந்த அந்த பெண்கள் 2015 - ஆம் ஆண்டிலிருந்தே மூச்சுவிடுதலின் தன்மையைக் கண்டறியும் கருவியை உருவாக்குவதில் ஈடுபட்டு வந்தனர். பிறந்த குழந்தைகளின் உடல்நிலையைக் கண்காணிக்கும் அந்தக் கருவியை உருவாக்கி சந்தைப்படுத்தி வந்தனர். தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தையைத் தொட்டுப் பார்க்காமல் குழந்தையின் உடல்நிலையைக் கண்காணிக்கும் கருவி அது. கரோனா வைரஸ் தொற்றால் மூச்சுவிடுவதில் ஏற்படும் பாதிப்புகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு - மூச்சுவிடுதலின் தன்மையைக் கண்டறியும்விதமாக, அந்தக் கருவியில் சில மாறுதல்களைச் செய்துள்ளனர். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செய்யப்பட்ட இந்தக் கருவி கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்விதமாக உள்ளது.

""கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்கள் மூச்சுவிடச் சிரமப்படுவார்கள். ஒவ்வொரு மணிநேரமும் அதைக் கண்காணிக்க வேண்டும். நாங்கள் உருவாக்கியுள்ள கருவியின் மூலமாக ஒரே சமயத்தில் ஒரு லட்சம் நோயாளிகளின் மூச்சுவிடும் நிலையைக் கண்டறிய முடியும். அந்தத் தகவல்கள் ஒரு மையமான தகவல்தளத்துக்கு அனுப்பப்படுகிறது. அதிலிருந்து எந்த ஒரு நோயாளியின் மூச்சுவிடும் நிலையையும் ஒரு மருத்துவப் பணியாளர் தெரிந்து கொள்ள முடியும். நோயின் தீவிரத்தைப் பொறுத்து தேவையான சிகிச்சையை அளிக்க முடியும்.

இந்தக் கருவி ஒரு "சிறிய அவசர சிகிச்சைப் பிரிவு' போலச் செயல்படுகிறது. நோயாளிகள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், அவர்களின் உடல்நிலையை டாக்டர்கள் இந்தக் கருவியின் உதவியினால் தெரிந்து கொள்ள முடியும்.

நோயாளி ஒருவரிடம் இருந்து 3 அடி தூரத்தில் இந்தக் கருவி பொருத்தப்படும். அது நோயாளியின் மூச்சுவிடும் திறன் குறித்த தகவல்களைக் கணக்கிட்டு, அது பற்றிய தகவல்களை இதற்கென உருவாக்கியுள்ள செயலிக்கு அனுப்பி வைத்துவிடும். அந்தச் செயலி மூச்சுவிடத் திணறுவது அதிகமாக உள்ளதா? குறைவாக உள்ளதா? எந்த விகிதத்தில் அது கூடுகிறது அல்லது குறைகிறது? இதயத் துடிப்பு எந்த அளவுக்கு உள்ளது? ரத்த அழுத்தம் எவ்வாறு உள்ளது? உடலின் வெப்பநிலை எவ்வளவு உள்ளது? என்பதையெல்லாம் கணக்கிட்டுக் கூறுகிறது. ஒரு டாக்டர் ஒரு நோயாளியின் உடல்நிலையைத் தனது செல்போன் அல்லது கணினியின் மூலம் ஒலியாகக் கேட்கலாம். வீடியோவாகப் பார்க்கலாம்.

நோயாளியின் உடல்நிலை ஆபத்தான நிலையில் இருந்தால், உடனே அவருக்குச் செய்ய வேண்டிய சிகிச்சைகளைச் செய்யும்படி தொலை தூரத்தில் இருந்தே மருத்துவப் பணியாளர்களுக்கு அவர் சொல்ல முடியும். நோயாளி அருகில் இருந்தால் உடனே அவர் நோயாளிக்கான சிகிச்சையை மேற்கொள்ள முடியும்.

இந்தக் கருவியை உருவாக்கி பலவிதமான மருத்துவ பரிசோதனைகளுக்கு நாங்கள் உட்படுத்தினோம். 500 மணி நேரத்துக்கும் மேலாக மருத்துவ சோதனைகள் செய்தோம். மூச்சுத் திணறல், ஆஸ்துமா, காய்ச்சல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் 70 லட்சத்துக்கும் மேலான மூச்சுவிடுதல்களை இந்தக் கருவியின் மூலம் சோதனை செய்து பார்த்தோம்.

இந்தக் கருவியின் மூலம் நோயாளியின் உடல்நிலையைக் கண்டறிய நோயாளியின் உடலில் எதையும் பொருத்த வேண்டிய தேவையில்லை. எனவே வழக்கமாகச் செய்யப்படும் மருத்துவப் பணிகளுக்கு எந்தவிதமான இடையூறும் இந்தக் கருவியினால் ஏற்படுவதில்லை.

கரோனா நோயாளிகளை நேரடியாகக் கண்காணித்து மருத்துவம் செய்யும் மருத்துவப் பணியாளர்கள் மிகவும் கவனமாகப் பணி செய்ய வேண்டிய தேவையுள்ளது. இந்தக் கருவியின் மூலம் பாதிக்கப்பட்ட நோயாளியை அடிக்கடி சென்று பார்க்க வேண்டிய அவசியம் ஒரு மருத்துவருக்கு இல்லாமல் போகிறது. அதுமட்டுமல்ல, எல்லா நோயாளிகளையும் எப்போதும் கவனித்துக் கொண்டிருக்காமல், அபாயகரமான நிலையில் உள்ள நோயாளிகளிடம் அதிக கவனம் செலுத்தவும் ஒரு டாக்டருக்கு இந்தக் கருவி உதவுகிறது.

கரோனா தொற்று ஏற்பட்டால் 14 நாட்களுக்கு ஒரு நோயாளியைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மருத்துவமனைகள் நிரம்பி வழிந்து இடமில்லாமல் போகும் இச்சூழ்நிலையில் தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் வீட்டில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு, இந்தக் கருவியின் உதவியுடன் தங்களுடைய உடல்நிலையை மருத்துவருக்குத் தெரிவிக்கலாம். அதற்காக இந்தக் கருவியை எல்லாரும் வாங்க வேண்டும் என்பதில்லை. வாடகைக்கு எடுத்தும் இந்தக் கருவியை ஒரு நோயாளி பயன்படுத்தலாம். இதை இயக்குவது மிகவும் எளிது'' என்கிறார் ரஞ்ஜனா நாயர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT