மகளிர்மணி

இந்திய கிரிக்கெட்டின் புதிய இளம் பெண் நடுவர்கள்!

15th May 2020 04:54 PM | - பா.சுஜித்

ADVERTISEMENT


இந்திய கிரிக்கெட்டின் புதிய இளம் பெண் நடுவர்களாக ஜனனி நாராயணன், விருந்தா ரதி ஆகியோர் அவதாரம் எடுத்துள்ளனர். ஆடவருக்கு இணையாக மகளிரும் பல்வேறு துறைகளில் கோலோச்சி வரும் நிலையில், விளையாட்டிலும் அவர்களது செயல்பாடுகள் பரந்து விரிந்து வருகின்றன. டென்னிஸ், கால்பந்து, வாலிபால், ஹாக்கி, குத்துச்சண்டை, கூடைப்பந்து என பல்வேறு விளையாட்டுகளில் ஆண் நடுவர்களுக்கு இணையாக பெண் நடுவர்களும் திறம்பட செயல்பட்டு வருகின்றனர்.

ஆண் நடுவர்கள் ஆதிக்கம்: உலகளவில் பிரபலமான மற்றொரு விளையாட்டான கிரிக்கெட்டில் ஆடவர் ஆதிக்கமே நீடித்து வருகிறது. ஆடவர் கிரிக்கெட் போட்டிகளுக்கு காணப்படும் வரவேற்பு பெண்கள் கிரிக்கெட்டுக்கு இல்லை. எனினும் கடந்த சில ஆண்டுகளாக பெண்கள் கிரிக்கெட் போட்டிகளும் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. ஐசிசி சார்பில் நடத்தப்படும் மகளிர் ஒருநாள், டி20 போட்டிகளுக்கு அதிக பார்வையாளர்கள் வரத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக சர்வதேச மகளிர் தினமான கடந்த மார்ச் 8-ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற்ற மகளிர் டி20 இறுதி ஆட்டத்தைக் காண 80 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் திரண்டிருந்தனர்.

கிரிக்கெட் போட்டிகளில் நடுவர்கள் பணி என்பது மிகவும் சிக்கலான ஒன்றாகும். ரன் அவுட், எல்பிடபிள்யு, வைட், நோ-பால் போன்றவற்றை கவனமுடன் கணித்து முடிவை தெரிவிக்க வேண்டும். இந்நிலையில் தற்போது நடுவர்களுக்கு உதவியாக மூன்றாம் நடுவர், விடியோ மூலம் கண்காணித்து முடிவுகளை அறிவிக்கிறார். ஆண் நடுவர்களில் டேவிட் ஷெப்பர்ட், டிக்கி பேர்ட், ரிச்சர்ட் இல்லிங்வொர்த், ஆலம் தர், வெங்கட்ராகவன், இயான் கெளட், குமார் தர்மசேனா, ஸ்டீவ் பக்னர், டேரல்ஹேர் ஆகியோர் பிரபலமானவர்கள். இந்தியாவின் வெங்கட்ராகவன், தனது 11 ஆண்டுகள் நடுவர் பணியில் 73 டெஸ்ட்கள், 52 ஒருநாள் ஆட்டங்களில் மேற்பார்வையிட்டார்.

பெருகி வரும் பெண் நடுவர்கள்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அதிகளவில் பெண் நடுவர்களை பணியில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளது.

ADVERTISEMENT

ஐசிசி நடுவர் மேம்பாட்டுக் குழுவில் முதல் பெண் நடுவராக கேத்தி கிராஸ் சேர்க்கப்பட்டார். அதன்பின் கிம் காட்டன், லாரன் அகென்பக், ஷிவானி மிஸ்ரா, சூ ரெட்பெர்ன், மேரி வால்ட்ரான், ஜாக்குலின் வில்லியம்ஸ் ஆகியோர் இடம் பெற்றனர்.

ஆட்ட நடுவர் ஜி.எஸ். லட்சுமி: அதைத் தொடர்ந்து சர்வதேச ஆட்ட நடுவர் குழுவில் முதல் பெண் நடுவராக இந்தியாவின் ஜி.எஸ். லட்சுமி சேர்க்கப்பட்டார். அவருடன் ஆஸி..யின் எலோய்ஸ் ஷெரிடனும் இடம் பெற்றார். ஜி.எஸ்.லட்சுமி கடந்த 2008-09-இல் உள்ளூர் போட்டி ஒன்றில் முதன்முதலாக நடுவராக செயல்பட்டார். அதன்பின் 3 மகளிர் ஒருநாள், டி20 சர்வதேச ஆட்டங்களில் நடுவராக திகழ்ந்தார்.

ஜனனி நாராயணன், விருந்தா ரதி: இந்நிலையில் ஐசிசி நடுவர்கள் வளர்ச்சிக் குழுவில் இந்தியாவின் ஜனனி நாராயணன் (34), விருந்தா ரதி (31) ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர், இதன் மூலம் ஐசிசி நடுவர்கள் குழுக்களில் மொத்தம் பெண் நடுவர்கள் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. தற்போது இருவரும் இந்திய உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் நடுவர்களாக திறம்பட செயல்பட்டு வருகின்றனர்.

ஜனனி நாராயணன்: ""இது எனக்கு மிகப்பெரிய கெளரவமாகும். இங்கிலாந்தின் டேவிட் ஷெப்பர்ட், ஸ்ரீனிவாஸ் வெங்கட்ராகவன் ஆகியோரை முன்னோடிகளாக கருதுகிறேன். நடுவர் வளர்ச்சிக் குழுவில் சேர்க்கப்பட்டது, மேலும் மூத்த நடுவர்களிடம் கற்க உதவும். கிரிக்கெட் எனது தினசரி வாழ்க்கையில் அங்கமாகி விட்டது. எனது பெற்றோர் டிவியில் கிரிக்கெட் பார்ப்பதை தடுக்காமல் அனுமதித்தனர். இதனால் நடுவராக ஆக வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. ஆடவர் சர்வதேச போட்டிகளிலும் பணிபுரிய வேண்டும் என்பதே எனது ஆவல்'' என்றார். மூன்றாவது நடுவர் செயல்பாடுகள் குறித்து முழுமையாக அறிந்து கொண்டோம்.

விருந்தா ரதி: ""முன்னாள் பல்கலைக்கழக வீராங்கனையான எனக்கு சர்வதேச போட்டிகளில் ஆடிய அனுபவம் உள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் உள்ளூர் ஆட்டங்களில் நடுவராக உள்ளேன். நியூஸிலாந்தின் கேத்திகிராஸ் கடந்த 2013-மகளிர் உலகக் கோப்பை போட்டியில் நடுவராக செயல்பட்டதைக் கண்டு எனக்கும் நடுவராக விருப்பம் ஏற்பட்டது. வீராங்கனை, ஸ்கோரராக இருந்துள்ளதால் நடுவர் பணி எளிதாக உள்ளது. பிசிசிஐ,ஐசிசி-க்கு இதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

இருவருக்கும் நடுவர்களாக செயல்படுவது குறித்து ஐசிசி நடுவர் பயிற்சியாளர் டெனிஸ் பர்ன்ஸ் விடியோ சிமுலேட்டர் கருவி மூலம் பிசிசிஐ சார்பில் தீவிர பயிற்சி தருகிறார். பவுண்டரி கேட்ச், நோபால், டிஆர்எஸ் முறை, டிவி குழுவினருடன் இணக்கம் குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

டெனிஸ் பர்ன்ஸ் கூறியது: நடுவர்களை உருவாக்குவதில் பிசிசிஐ அதிக முதலீடு செய்துள்ளது. இந்தியாவில் நடுவர் பணி முழுநேர தொழிலாக மாறிவிட்டது. இதனால் அவர்களின் அந்தஸ்தும் உயர்ந்துள்ளது என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT