மகளிர்மணி

ஊரடங்கு: அதிகரிக்கிறதா குடும்ப வன்முறை?

14th May 2020 10:11 PM | - ஸ்ரீதேவி குமரேசன்

ADVERTISEMENT


அனைவரது வாழ்க்கையையும் புரட்டிப் போட்டிருக்கும் கரோனா நோய்த்தோற்று பெரும்பிரச்னையாக பார்த்து வரும் இந்த வேளையில், மற்றொரு பிரச்னையும் மக்களிடையே கிளம்பி உள்ளது. அதாவது மாதக்கணக்காக, வாரக்கணக்காக அறிவிக்கப்பட்டு வரும் ஊரடங்கினால், பல குடும்பங்களில் கணவன்-மனைவி உறவுக்குள் விரிசல் ஏற்பட்டு பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகரித்திருப்பதாகவும், 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியிருப்பதாகவும் மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து மனோ தத்துவ நிபுணர், மருத்துவர் லட்சுமி விஜயகுமார், வழக்குரைஞர்கள் சாமி. தமிழ்ப் பூங்குயில்மொழி மற்றும் கே. சுமதி கூறியிருப்பதாவது:

வன்முறை எதற்கும் தீர்வு ஆகாது

லட்சுமி விஜயகுமார்: மருத்துவர்

ஊரடங்கினால் குடும்ப வன்முறைகள் அதிகரித்து வருவது உண்மைதான். போதுமான இடை வெளியில்லாத குறுகிய வீடுகளாக இருப்பது, வெளியில் போக முடியாமல் இருப்பது, உணர்ச்சிகள் அதிகமாவது, வருமான பற்றாகுறை, கரோனாவினால் பயத்தை கொடுக்கக் கூடிய நிலைமை. இவையெல்லாம்தான் தற்போது குடும்ப வன்முறைகள் ஏற்பட காரணமாக பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

அதில் முதல் காரணமாக நாங்கள் பார்ப்பது. ஊரடங்கினால் மது கடைகள் மூடப்பட்டிருந்தது. மது குடித்து பழகியவர்களுக்கு, அதற்கு அடிமையாக இருந்தவர்களுக்கு அது கிடைக்காதபோது என்ன செய்வது என்று தெரியாமல் ஒருவித எரிச்சலும், கோப உணர்வும் அதிகரிக்கிறது. அந்த சமயத்தில் மனைவி ஏதாவது சொன்னால் அவர் மீது எரிந்து விழுவது, அடிப்பது, திட்டுவது போன்று செய்கிறார்கள்.

பொதுவாகவே, எந்த வீட்டில் கணவன் அதிகமாக குடிக்கிறாரோ அந்த வீட்டில் மனைவியை அடிப்பதும் அதிகமாக இருக்கும். எனவே, மது கிடைக்காத சூழலை சமாளிக்க முடியாமல், மனைவியை அடிப்பதனால் குடும்பத்தில் தகராறு, பிரச்னை ஏற்படுகிறது.

அடுத்த வகை, கணவன், மனைவிக்குள் முன்பிருந்தே ஏதோ ஒரு விதத்தில் சிறு சிறு பிரச்னைகள், மனஸ்தாபங்கள் இருந்திருக்கலாம். ஆனால் இதுவரை அவர்கள் தினமும் அவரவருக்கு உண்டான வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால், இப்போது வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதால் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்க முடியாமல், இருவருக்குள்ளும் வாக்குவாதம் அதிகமாகி ஒரு கட்டத்தில் அது வன்முறையாக மாறிவிடுகிறது.

மூன்றாவது, இந்த ஊரடங்கினால், பெண்களுக்கு வேலை பளு அதிகரித்திருக்கிறது. கணவன், பிள்ளைகள் வீட்டிலிருப்பதால் அவ்வப்போது பசிக்கிறது என்று சொல்லி எதையாவது செய்துதரும்படி கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். மேலும், வீட்டு வேலை செய்பவர்களும் இப்போது வருவதில்லை. இதனால், எல்லாவிதமான பொறுப்புகளையும் கவனிக்க வேண்டியதாகி விட்டது.

எனவே பெண்கள் அதிகப்படியான உடல் உழைப்பினால் மனதளவில் சோர்ந்து போகிறார்கள். இந்த சமயத்தில் கணவன் டிவி முன் அமர்ந்து கொண்டு, அதைத் செய் இதைச் செய் என்று சொல்லும்போது அவர்களுக்கு எரிச்சலும், கோபமும் அதிகமாக வருகிறது. கோபத்தில் ஏதாவது பேசி விடுகிறார்கள்.

கணவருக்கோ, இத்தனை நாள் எதுவும் பேசாதிருந்தவள், இப்போது குழந்தைகள் முன்னால் இப்படி பேசுகிறாளே என்று கோபம் வருகிறது. இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், நம்ம ஊரைப் பொருத்தவரை, கணவன் மனைவியை அடித்தாலோ, திட்டினாலோ அது பெரிதாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. ஏனென்றால் காலங்காலமாக மனைவியை அடிப்பதும், திட்டுவதும் கணவனின் உரிமையாக நமது கலாசாரத்திலேயே ஊறிபோய் விட்டது. முதலில் இந்த சமூக மனப்பான்மை மாற வேண்டும். ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் உடல் ரீதியான தாக்குதல் என்பது தவறு என்ற எண்ணம் அனைவருக்கும் வரவேண்டும். இப்படி ஒரு கலாசார திருப்புமுனை ஏற்பட்டால் குடும்ப வன்முறைகள் பெரும்பாலும் குறைந்துவிடும்.

குடும்ப வன்முறைகளில் இருந்து தற்காத்து கொள்ள...

தற்போது குடும்ப வன்முறைகள் என்பதைத் தாண்டி, பொதுவாகவே எல்லாருக்குமே மனதளவில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. காரணம், எல்லாருடைய அன்றாட வேலைகளை புரட்டிப் போட்டுவிட்டதால் ஏற்பட்ட பயம்.

எல்லாருக்குமே தங்களுக்கு கரோனா வந்து விடுமோ என்கிற பயம், அடுத்தது குழந்தைகளுக்கு வந்துவிடுமோ என்ற பயம். பொருளாதார நெருக்கடி, எதிர்காலத்தைப் பற்றிய பயம் எல்லாமுமாக சேர்ந்து மனதளவில் பெரிய பயத்தை உண்டாக்கிவிட்டது.

இதிலிருந்து தற்காத்துக் கொள்ள, முதலில் அனைவருமே மனதளவில் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த சூழல் சீக்கிரமே மாறிவிடும். விரைவில் நாம் பழைய வாழ்க்கைக்கு திரும்பி விடுவோம் என்று நம்ப வேண்டும்.

வீட்டைப் பொருத்தவரை, ஆண், பெண் இருவருமே ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, ஒத்துழைக்கவேண்டும்.

ஆண் எரிச்சலாகவோ, கோபமாகவோ இருக்கிறார் என்றால், அந்த சூழ்நிலையைப் பெண் புரிந்து கொண்டு இந்த சமயத்தில் நாம் சண்டை போடக் கூடாது என்று அமைதியாக இருக்க வேண்டும்.

இரண்டாவது, ஆண்களும் , இவள் இவ்வளவு வேலை செய்கிறாள். நம்ம குடும்பத்துக்காகத்தானே உழைக்கிறாள் என்பதை புரிந்து கொண்டு அவளுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்து தரவேண்டும் என்று நினைக்க வேண்டும்.

இன்னொரு விஷயம் பார்த்தீர்கள் என்றால் இந்த ஊரடங்கினால் நமது ஊரில் மட்டும்தான் இதுபோன்ற குடும்ப வன்முறைகள் ஏற்பட்டிருக்கிறது என்பதில்லை. உலக நாடுகள் பலவற்றிலும் ஊரடங்கினால் குடும்ப வன்முறைகள் அதிகரித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

அதேசமயம் ஊரடங்கினால், பெரும்பாலான வீடுகளில் நல்ல ஒற்றுமையாக இருக்கும் கணவன் மனைவிக்குள் புரிதலும், நெருக்கமும், அன்னியோன்யமும் அதிகரித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. எனவே, சகிப்புத்தன்மையை வளர்த்துக்கணும், பொறுமையாக இருக்கணும், மற்றவர்கள் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள வேண்டும். எப்போதுமே வன்முறை எதற்கும் தீர்வு ஆகாது.

சமூக நோயாக பார்க்கப்படுகிறது

கே. சுமதி, வழக்குரைஞர்.

எனக்கு தெரிந்த வரையில் வீட்டிலேயே இருப்பதால் அனைவரும் ஒரு விதமான எரிச்சலுடன் கூடிய மனநிலையில் தான் இருக்கிறோம். இந்த ஊரடங்கு காலத்தில் மதுவுக்கு அடிமையான ஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் அதிகம். அவற்றை வெளியே சொன்னவர்களும் இருக்கிறார்கள். சொல்லாமல் எப்போதும் போல் சஜகமாக மறைக்கும் பெண்களும் இருக்கிறார்கள். பொதுவாக குடும்ப வன்முறை பொருத்தவரை மூன்றாகப் பிரிக்கலாம்.

கிரைம், கிரைம் ரிப்போர்ட், கிரைம் ரிஜிஸ்டர் என்பதாகும். ஊரடங்கு காலத்தில் குடும்ப வன்முறைக்கு ஆளான பெண்கள் காவல் நிலையமோ, பெண்கள் பாதுகாப்பு அலுவலரையோ, நீதிமன்றத்தையோ அணுக முடியாத நிலை இருந்தது. இன்று அந்த விதிகளை தளர்த்தியிருக்கிறார்கள். எனவே பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்தையோ, நீதிமன்றத்தையோ அணுகி தீர்வு தேடும் முயற்சியில் இறங்கலாம்.

சமீபத்தில் நான் ஹிந்தி திரைப்படம் பார்த்தேன். அந்தப் படத்தின் பெயர் "பட்ஹல்ல்ஹக்'. ஒரு அறை என்பது தான் இந்தப் படத்தின் கதை. கணவன் மனைவியை அடிக்கும் ஒரு அடி என்ன மாற்றத்தை ஏற்படுத்துகிறது. நான் ஏன் அடி வாங்க வேண்டும் என்ற எதிர் கேள்வி கேட்கும் பெண்ணின் கதைதான் படம்.

பொதுவாக குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடுத்தால் இருபாலரையும் அழைத்து கவுன்சிலிங் செய்வதுண்டு. கவுன்சிலிங் செய்பவர் என்ன பிரச்னை என்று கேட்டால் என்னை அடிக்கிறார் என்று பெண் கூறுவார். ஏன் அடிக்கிறீர்கள்? என்று ஆணிடம் கேட்டால், கோபத்தில் ஒரு அடி அடித்துவிட்டேன். மன்னித்து விடுங்கள் என்று கூறுவார்கள்.

உடனே கவுன்சிலர், பாதிக்கப்பட்ட பெண்ணை பார்த்து, ஏம்மா அவரே மன்னிப்பு கேட்டு விட்டார். பொறுத்து போக கூடாதா என்று கேட்கிறாரே தவிர ஆணிடம் ஏன் அடித்தாய் என்று கேட்பதில்லை. ஒரு பெண் அடித்தால் ஆண் ஏற்றுக் கொள்ளுவனா என்பது சந்தேகமே?

கணவனிடம் அடி வாங்கிய பெண்கள் காவல் நிலையம் சென்றால் அவ்வளவு தான். கணவன் அடித்ததை மறந்துவிட்டு, "நீ காவல் நிலையம் சென்றதால், இனி உன்னுடன் வாழ முடியாது' என்று சொல்லும் ஆண்கள் தான் அதிகம்.
இப்போதுள்ள சூழ்நிலையைப் பொருத்தவரை குடும்ப வன்முறை என்பது சமூக நோயாக பார்க்கப்படுகிறது.

- வனராஜன்

மாயை என்றே தோன்றுகிறது

சாமி. தமிழ்ப்பூங்குயில்மொழி, வழக்குரைஞர்.

தமிழகத்தில் சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டது. குடும்ப வன்முறைப் புகார்களைப் பதிவு செய்ய ஊரடங்கு காலத்தில் காவல் நிலையங்கள் பலவற்றில் அலுவலர்களோ, அதிகாரிகளோ இல்லை என்றும் புகார்களைப் பதிவு செய்யவும், விசாரித்து நடவடிக்கை எடுக்கவும் காவல்துறைக்கு உத்தரவிட வேண்டுமென பிரார்த்திக்கும் அளவிற்கு பெரிய விஷயமாயிற்று. கரோனா ஊரடங்கு மாதக்கணக்கில் நீடிக்கிறது. விருந்தும், மருந்தும் மூன்று நாட்கள் என்பார்களே, அது உண்மைதானோ?! என்ற சந்தேகம் எனக்குள்ளும் தோன்றி மறைகிறது.

கடந்த ஊரடங்கு நாட்களில் சொந்தங்களும், பந்தங்களும் சுமைகளாகிப் போயினவோ? குடும்பப் பெண்களுக்கெதிராக கொடுமைகள் வன்முறையாகிப் போகுமளவிற்கு வசைகளும், விரோதங்களும், வளர்ந்து விட்டனவோ?

இதற்கு விடை தேட முனைகையில், காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறினார்:

"குடும்ப வன்முறை எண்ணிக்கையில் அதிகரித்திருக்கிறதா, குறைந்திருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள ஒரு "சிம்பிள் பார்முலா'வை அவர் துறை சார்ந்த மொழியில் சொன்னார்.

"குடும்ப வன்முறையால் ஒரு பெண் தன்னையே அழித்துக் கொண்டதாகவோ அல்லது குடும்ப உறுப்பினர்களை அழிக்க முயற்சி செய்ததாகவோ செய்திகள் எதுவும் வராத நிலையில், பெண்களுக்கெதிரான குடும்ப வன்முறைகள் குறைந்திருப்பதாகவே எடுத்துக் கொள்ளவேண்டும். இவை இரண்டு பற்றிய பதிவுகள் அதிகம் இருந்தால் குடும்ப வன்முறைக் குற்றங்கள் அதிகரித்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது'.

அப்படிப் பதிவுகள் ஏதும் இல்லாத நிலையில் குடும்ப வன்முறைகள் குறைந்திருப்பதாகவே எடுத்துக் கொள்ளவேண்டும் என்பது பதிவான, பதிவாகும் புள்ளி விவரங்களின் அடிப்படை சாராம்சம்.

குடும்ப வன்முறை புகார்கள் முன்பெல்லாம் மாதந்தோறும் சுமார் பதினைந்து முதல் இருபது புகார்கள் வரை பதிவாகும். ஆனால், தற்போது ஒன்றிரண்டு புகார்கள் மட்டுமே அதுவும் அரிதாகவே பதிவாகிறதென்பது உண்மை.

முன்பு, பதிவாகும் பதினைந்து இருபது புகார்களிலும் உண்மைத் தன்மை என்பது கேள்விக்குறியே. அவற்றில் சுமார் இருபது சதவிகித வழக்குகளைத் தவிர்த்து எண்பது சதவீத வழக்குகள், குடும்ப உறுப்பினர்களை மிரட்டும் நோக்கில் மிகைப்படுத்தப்பட்ட புகார்களாகவே அமைந்திருந்தது என்பதே கரோனா ஊரடங்கு காலத்திற்கு முற்பட்ட நிலைமை என்பதனை நீதிமன்றங்கள், விசாரணை அதிகாரிகள் மட்டுமன்றி சம்பந்தப்பட்ட புகார்தாரர்களும் நன்கு அறிவார்கள். பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் மற்றும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கான புகார்களை பதிவு செய்ய பிரத்யேகமாக அவசர உதவி எண்: 181 மற்றும் குழந்தைகளுக்கான அவசர உதவி எண்: 1098 ஆகியவற்றை அரசு வழங்கியுள்ளது'' என்றார்.

குடும்ப வன்முறை குறைந்திருக்கிறது என்பதனை ஏற்றுக்கொள்ள இயலாதவர்கள், பாதிப்புக்குள்ளாகும் எல்லாப் பெண்களுக்கும் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளத் தெரியுமா? - என்றொரு கேள்வி எழுப்பலாம்.

ஆக, நிஐத்தில் குடும்ப உறுப்பினர்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையம் சென்றுதான் புகார் தர வேண்டும் என்ற நிலை கரோனா ஊரடங்கு காலத்தில் கட்டாயம் இல்லை என்றே கூறலாம்.

இப்படி ஏராளமான வாய்ப்புகள் முன்னெப்போதும் இல்லாத அளவில் தற்போது இருக்கின்றன. நிஜத்தில், புதிதாக குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுபவர்கள் இருந்த இடத்தில் இருந்தபடியே புகார்களை ஆன்லைனில் மட்டுமன்றி கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்களிடமே கூட தங்கள் புகார்களைப் பதிவு செய்ய, செய்திருக்க முடியும்.

ஊரடங்கு காலத்திற்கு முன்பாக பதிவு செய்யப்பட்டு, ஏற்கெனவே நிலுவையிலுள்ள புகார்கள் சம்பந்தப்பட்டவர்களிடையே குடும்ப வன்முறைக் குற்றங்கள் கூடுதலாக இருக்க வாய்ப்புகளிருப்பதை மறுக்க முடியாது.

எனக்குத் தெரிந்த ஒரு பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் சில ஆண்டுகளாகவே தீர்க்க இயலாத அளவிற்கு பிரச்னைகள். அந்தப் பெண் எண்ணிலடங்காத சொல்லில் வடிக்க இயலாத துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருந்தார். விளைவு கணவனும் மனைவியும் தனித்தனியாக வெவ்வேறு வீடுகளில் வசித்தனர்.

அதன் பின்பும், மனைவியின் வீட்டிற்கு அடிக்கடி வந்து மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் வன்முறை நிகழ்த்திய கணவனுக்கெதிராக பல புகார்கள் காவல் துறையிலும், விவாகரத்து வழக்கு நீதிமன்றத்திலும் நிலுவையிலிருக்கும்போது வேறொரு வழக்கில் கணவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து விசாரணைக் கைதிகள் ஜாமீனில் விடுதலையான வகையில் அந்தக் கணவனும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

விடுதலை செய்யப்பட்டவுடன் நேரடியாக மனைவி வசித்த வீட்டைத் தேடி வந்த கணவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காரணம் இடைப்பட்ட காலத்தில் மனைவி, தான் ஏற்கெனவே வசித்து வந்த வீட்டினைக் காலி செய்துவிட்டு வேறொரு வீட்டிற்கு குடிபெயர்ந்திருந்தார்.

கணவன் வந்த அந்த நேரத்தில் மனைவி மட்டும் அங்கு இருந்திருந்தால் கண்டிப்பாக அந்தக் கணவன் மனைவி மீதான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டிருப்பான். நல்லவேளையாக வேறு வீட்டிற்கு இடம்பெயர்ந்ததன் மூலம் தன்னைக் காப்பாற்றிக் கொண்டிருந்தாள்.

ஒருவேளை கணவனின் வன்முறைக்கு அவள் ஆளாகியிருந்தால் அதனைப் பழைய வழக்கின் தொடர்ச்சியாகத் தான் பார்க்க வேண்டுமே தவிர அதனைப் பெருகிய புகாரில் ஒன்றாகக் கொள்ள வேண்டியதில்லை.

கணவன்-மனைவி இடையே பிரச்னைகள் இருக்கலாம்... அதெல்லாம் குடும்ப வன்முறை என்றாகி விடாது. அதே நேரம், குடும்ப வன்முறை குறித்தான சட்ட வரையறைகளை உற்று நோக்கும் முறையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவே எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது. விளைவு பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகரித்திருப்பதாய்த் தெரிவது ஒரு மாயை என்றே தோன்றுகிறது.

- ரவிவர்மா

ADVERTISEMENT
ADVERTISEMENT