அரிசி உப்புமா செய்யும்போது அதில் கொஞ்சம் வேகவைத்த காராமணியை கலந்து அடையாக தட்டி, இட்லி தட்டில் வேக வைத்தும் சாப்பிடலாம்.
வெங்காய அடை செய்யும்போது, சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, ஒரு தேக்கரண்டி எண்ணெய்விட்டு, வதக்கி மாவில் கலந்து அடை வார்த்தால், கம்மென்று மணம் மூக்கைத் துளைக்கும். சுவையும், ருசியும் நாவில் நீரூற வைக்கும்.
பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.
இட்லி பொடிக்கு நல்லெண்ணெய்யை லேசாகக் காய்ச்சி சிறிது கடுகு, பெருங்காயம் தாளித்து உபயோகப்படுத்தினால் இன்னும் சுவை கூடுதலாக இருக்கும்.
பாகற்காயை சிறுசிறு வில்லைகளாக நறுக்கி, சிறிது உப்புச் சேர்த்து, எலுமிச்சைச் சாறில் ஊற வைக்கவும். ஒரு வாரத்தில் நன்றாக ஊறிப் பக்குவப்படும். தினமும் நன்கு குலுக்கி வெயிலில் வைக்க வேண்டும். கசப்பு துளியும் இராது. நீண்டநாள் கெடாமல் இருக்கும். பாகற்காய் வத்தலாக பயன்படுத்தலாம்.
இட்லியை குக்கரில் வேகவிடும்போது குக்கர் தண்ணீரில் கொத்துமல்லி தழை, எலுமிச்சைப் பழத்தோல் இவற்றைப் போட்டால் இட்லி வாசனையாக இருக்கும்.
பெருங்காயம் கல்போல் இருந்தால் உடைப்பது கஷ்டம். இரும்புச் சட்டியை அடுப்பில் வைத்துக் காய்ந்தவுடன் பெருங்காயத்தை அதில் போட்டால் இளகும். அதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிய்த்து தனித்தனியாகப் போட்டுவிட்டால் ஆறியவுடன் டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளலாம்.
இட்லிக்கு அரைக்கும்போது, உளுந்தைக் குறைத்து, கெட்டியாக அரைத்து வார்க்கும்போது சிறிது நல்லெண்ணெய் விட்டுக் கொண்டால், இட்லி மிருதுவாக இருக்கும். இரண்டு தினங்களுக்குக் கெடாமல் இருக்கும். பிரயாணங்களுக்கு உகந்தது.
காய்கறிகளில் சில காய்கள் கசப்பு சுவையுள்ளவை அவற்றை நறுக்கி அரிசி களைந்த நீரில் சற்று நேரம் போட்டு வைத்தால் கசப்பு நீங்கிவிடும்.
காபி, தேநீர் போன்ற பானங்கள் சுவையும் மணமும் கொண்டதாக இருக்க, அவ்வப்போது புதிதாக இறக்கிய டிகாஷனையே பயன்படுத்த வேண்டும்.
கிரேவி வகையறாக்கள் செய்யும்போது பிடி வேர்க்கடலையை எடுத்து தோல் நீக்கி, அரைமணி நேரம் நீரில் ஊறவைத்து நைஸாக அரைத்து சேர்த்தால் கிரேவி ரிச்சாக, டேஸ்ட் அபாரமாக இருக்கும்.
சமையலறையில் வைத்திருக்கும் உப்பில் குளிர்காலத்தில் ஈரக்கசிவு ஏற்படும். அப்படி ஆகாமல் இருக்க, சிறிது அரிசியைக் கலந்து வைக்கலாம்.
வாழைக்காய் நறுக்கும்போது கையில் ஏற்படும் பிசுக்கு நீங்க சிறிது தயிரால் கையைக் கழுவலாம்.