மகளிர்மணி

கரோனா  என்னை எழுத வைத்தது!

17th Jun 2020 10:00 AM | - பாரதி

ADVERTISEMENT


மும்பையைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் ஷோபா டே. தன்னுடைய 72 வயதிலும், அவர் எழுத்து  உலகில் ஒரு குறிப்பிடத்தக்கவராக இருந்து வருகிரார். ஆரம்ப காலத்தில் ஒரு மாடலாக வலம் வந்த ஷோபா டே, பின்னர் பத்திரிகையாளராக மாறினார். ஸ்டார் டஸ்ட், சொசைட்டி, செலிபிரிட்டி போன்ற பத்திரிகைகளுக்கு ஆசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார். அவர் ஏராளமான  ஆங்கில நாவல்களும் எழுதி இருக்கிறார். 

அவரது சில நாவல்கள் சர்ச்சைக்குள்ளாகி, பரபரப்பூட்டியதும் உண்டு. கடந்த பல்லாண்டுகளாக, நாவல்கள் மட்டுமின்றி பிரபல ஆங்கில தினசரி பத்திரிகைகளில் சமூக வாழ்க்கை மற்றும் நாட்டு நடப்பு குறித்த விஷயங்களை தனது பத்திகள் மூலமாக  எழுதி வருகிறார். பல்வேறு கலாசாரங்கள் சங்கமிக்கும் சர்வதேச நகரமான மும்பையை  மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தனியாகப் பிரித்துவிடலாம்' என்று சில வருடங்களுக்கு முன்பு அவர் தெரிவித்த கருத்து சிவசேனா வட்டாரத்தில் பெரும் எதிர்ப்பினைத் தோற்றுவித்தது. 

தற்போதைய கரோனா காலத்தில் ஷோபா டே சும்மா இருக்கவில்லை. கரோனாவின் தாக்கத்தை தளமாகக் கொண்டு ஆங்கிலத்தில் ஒரு புத்தகத்தை எழுதி இருக்கிறார். தலைப்பு: "லாக்டௌன் லயேசன்ஸ்'. கரோனா அச்சுறுத்தல் காரணமாக அமலான பொது முடக்கம், அதன் மூலமாக பல்வேறு தரப்பு மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தபோது, குடும்பங்களில் உறவுகளில் ஏற்பட்ட தாக்கங்கள் என்று ஊரடங்கின் பாதிப்புகளைப் பல்வேறு கோணங்களிலும் அலசும் சிறுகதைகளின் தொகுப்புதான் இந்தப் புத்தகம். இதன் இரண்டாவது பாகத்தையும் எழுதி முடித்து விட்டார் ஷோபா டே. அதுவும் ஜூன் மாதத் துவக்கத்தில் வெளியாகிவிட்டது.  அடுத்து மூன்றாம், நான்காம், ஐந்தாம் பாகங்களும் வரவிருக்கின்றனவாம்.

"உலகத்தையே பயங்கரமாக அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கரோனா என் தலைக்குள்ளே உட்கார்ந்து கொண்டு, குடைந்து எடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த உலகம் அதன் பாதிப்புகளை, தாக்கங்களை எப்படி எதிர்கொள்கிறது என்பதை நான் உற்று கவனித்துக் கொண்டிருக்கிறேன். வரலாறு காணாத பாதிப்புகளை சந்தித்துக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்ட நிகழ்வுகளை பதிவு செய்தே ஆகவேண்டும் என்று என் மனம் சொல்கிறது. அதுதான், என்னை எழுதத் தூண்டுகிறது; இந்த திடீர் தொற்று, மரணங்கள் இவை எல்லாம் பல குடும்பங்களை புரட்டிப் போட்டுவிட்டன. 

ADVERTISEMENT

எத்தனை பேர் வாழ்க்கையில் ஒரு நிச்சயமற்ற தன்மையும், பயமும், குழப்பமும் ஏற்பட்டிருக்கிறது? மனிதம் ஒரு சமூக பிராணி. அவனது வாழ்க்கையில் தொடுதல், உணர்தல், அணைத்தல், தழுவுதல், முத்தம் கொடுத்தல் எல்லாம் சமூக வாழ்க்கையின், உறவுகளின் வெளிப்பாடுகள். சமூக இடைவெளி என்ற ஒன்று, எப்படி இன்றைய வாழ்க்கையை அன்னியப்படுத்திவிட்டது? எமோஷனலாகப் பார்த்தால், சமூக இடைவெளி என்பது மனித குலத்துக்கே எதிரானது. ஆனால் அது இன்று கட்டாயமாகிவிட்டது. இந்த சூழ்நிலைதான், சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம்தான் என்னை எழுதத் தூண்டியது! கரோனா ஒரு வகையில் என்னை நானே உள்நோக்கிப் பார்க்க, என் உணர்வுகளை, தாக்கங்களை பதிவு செய்ய, என்னை எழுத வைத்தது!' என்கிறார் ஷோபா டே.

ADVERTISEMENT
ADVERTISEMENT