மகளிர்மணி

நெசவுத் தொழிலை சிறப்பிக்க  மியூசியம்!

10th Jun 2020 10:45 PM | - பூர்ணிமா

ADVERTISEMENT

நெசவுத் தொழிலாளர்களின் உழைப்பையும், கைவண்ணத்தையும் அவர்கள் நெய்யும் துணிகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம். சாதாரண மனிதர்கள் நவீன தொழில் நுட்பங்கள் மற்றும் பேஷன் டெக்னாலஜி போன்றவை தோன்றுவதற்கு முன்னரே தங்கள் கற்பனையை பயன்படுத்தி விதவிதமான வண்ணங்களில் கலைநயத்துடன் சேலைகளை உருவாக்கியதை பாராட்டாமல் இருக்க முடியாது. நெசவுத் தொழிலையே வாழ்க்கையின் மூலதனமாக கொண்டுள்ள அவர்களை கௌரவிப்பதற்காகவே பெங்களூரைச் சேர்ந்த டிசைனர் பவித்ரா முத்தய்யா என்பவர், விக்டோரியா லே- அவுட்டில் "விமோர் மியூசியம்' ஒன்றை தொடங்கியுள்ளார். இங்கு பழங்கால சேலைகளுடன் இன்றைய நவீன சேலைகளும் இடம் பெற்றுள்ளன. இப்படியொரு மியூசியத்தை அமைக்க வேண்டுமென்ற எண்ணம் எப்படி தோன்றியது என்று கூறுகிறார்:

""என்னுடைய அம்மாவும், டிசைனருமான சிமி நஞ்சப்பா, முதன்முதலாக அவர் சேகரித்து வைத்திருந்த கலைநயத்துடன் நெய்யப்பட்டிருந்த சேலைகளையும், ஆடைகளையும் எனக்கு கொடுத்தார். அவைகளை பார்த்தபோது இன்றைய ஃபேஷன் டிசைனர்கள் கூட கற்பனை செய்திராத வகையில், விதவிதமான வண்ணங்களுடன் சேலைகளை உருவாக்கியிருந்தது வியப்பை அளித்தது. இவைகள் மூலம் நம்முடைய நாட்டின் பாரம்பரிய நெசவுத் தொழிலின் மேன்மையை இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில் மியூசியம் ஒன்றை அமைக்கலாமே என்ற யோசனை தோன்றியது.

இந்த மியூசியம் அமைப்பதற்காக நாங்கள் யாரிடமும் விசேஷமான சேலைகளையோ, ஆடைகளையோ கொடுத்துதவும்படி கேட்கவில்லை. மியூசியம் அமைப்பதை பற்றி கேள்விபட்ட பலர், அவர்களாகவே முன் வந்து தங்களிடமிருந்த பல அரிய சேலைகளையும், ஆடைகளையும் கொடுத்துதவினர். இந்த மியூசியத்தில் இடம் பெற்றுள்ள பொருள்கள் அனைத்தும் எங்களைப் போல் பாரம்பரிய நினைவுப் பொருட்களாக பலர் சேகரித்து வைத்தவைகளாகும். இதுபோன்ற சேலைகளை இப்போது காண்பது மிகவும் அரிது, இந்த சேலைகள் ஏற்கெனவே பயன்படுத்தியவை என்றாலும் பாதுகாத்து வைத்திருந்தது ஆச்சரியமாக இருந்தது. அன்றைய நெசவாளர்களின் கைத் திறனை பாராட்டுவதுடன், இன்றைய தலைமுறையினர் உணர்ந்து அதைவிட நேர்த்தியாக உருவாக்க வேண்டுமென்பது இந்த மியூசியம் அமைக்கப்பட்டதன் நோக்கமாகும்.

நம்முடைய நாட்டில் சேலைகள், ஆடைகள் அணிவது ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபட்டிருந்தாலும், மக்களின் கலாசாரத்தை பிரதிபலிப்பதாக உள்ளன. இதன்மூலம் நாட்டின் பல பகுதிகளில் உள்ள நெசவாளர்களின் கைத்திறனை அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு சேலை மற்றும் ஆடைகளின் பின்னணியில் பல கதைகள் உள்ளன. பல மாநிலங்களிலிருந்தும் பாரம்பரிய சேலைகள், ஆடைகள் மட்டுமின்றி கைவினைப் பொருள்களும் இங்கு இடம் பெற்றுள்ளன. நெசவுத் தொழிலின் மேன்மையை வெளிப்படுத்தும் வகையில், மியூசியத்தின் மையப் பகுதியில் தறி ஒன்றையும் நிறுவியுள்ளேன்'' என்றார் பவித்ரா முத்தய்யா.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT