பெண்களின் ஆசை என்பது எப்போதுமே தங்களுக்கானதாக இருந்ததில்லை. குறிப்பாக குடும்ப உறவுகளுக்கு அதிகம் மதிப்பு கொடுக்கும் இந்தியப் பெண்களின் கனவுகள் எல்லாம் தங்களின் பிள்ளைகள், கணவர், பெற்றோர், உறவினர்கள் என்று அவர்களின் ஆசைகளை நிறைவேற்றுவதாகவே நகர்கிறது பெண்களின் உலகம். சுயநலமற்ற இந்த கனவுகளுக்கு களம் அமைத்துத் தரும் வகையில் "கலர்ஸ்' தொலைக்காட்சி முற்றிலும் பெண்களுக்காக "கோடீஸ்வரி' நிகழச்சியை உருவாக்கியுள்ளது.
திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு நடிகை ராதிகா தொகுப்பாளராகியிருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது: ""வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் நடிப்பு, டைரக்ஷன், தயாரிப்பாளர், கிரியேட்டிவ் ஹெட் என 40 ஆண்டுகளாக பல வேலைகளைச் செய்துள்ளேன். ஆனால் டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளராக களம் இறங்கியிருப்பது இதுவே முதல்முறை. பல வேலைகளுக்கு நடுவில்தான் இந்த வாய்ப்பு வந்தது... இருந்தாலும் பெண்களுக்கான முதல் நிகழ்ச்சி என்பதாலும், பெண்களின் கனவுகளை நிறைவேற்ற உதவும் களமாகவும் இந்நிகழ்ச்சி இருப்பதால் இந்த தொகுப்பாளர் வாய்ப்பை ஏற்றுக் கொண்டேன்' என்கிறார் ராதிகா.