மகளிர்மணி

பரதத்தில் ஆர்வம் காட்டும் லண்டன் மாணவி!

8th Jan 2020 03:59 PM

ADVERTISEMENT

தமிழர்கள் பணி நிமித்தமாகக் கடல் கடந்து சென்றாலும், நம்முடைய கலையையும், பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் கைவிடுவதில்லை. குடியேறும் நாடுகளில் மேற்கத்திய கலைகளின் ஆதிக்கம் இருந்தாலும்கூட, நம்முடைய கலை எங்குக் கற்றுத் தரப்படுகிறது என்பதை அறிந்து, தேடிச் சென்று கற்கும் ஆர்வம் மேலோங்கியே இருக்கிறது.
 இங்கிலாந்து தலைநகர் லண்டன் அருகேயுள்ள எஸ்ùஸக்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சு மஹாலக்ஷ்மி செருமடார். இவர் தஞ்சாவூரை பூர்வீகமாகக் கொண்ட குழந்தைகள் நல மருத்துவர் ஜெகதீசனின் மகள் வழிப் பேத்தி. இவரது சிறிய தாத்தா முன்னாள் மத்திய அமைச்சர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன்.
 மன்னார்குடியைச் சேர்ந்த இவரது தந்தை பிரபு செருமடார் லண்டனில் வர்த்தகம் செய்து வருகிறார். தாய் சங்கரி செருமடார் லண்டனிலேயே மருத்துவராகப் பணியாற்றுகிறார்.
 தற்போது பதினான்கு வயதாகும் அஞ்சு மஹாலக்ஷ்மி செருமடார் அங்குள்ள பள்ளியில் 10 - ஆம் வகுப்புப் படித்து வருகிறார். இவருக்குச் சிறு வயது முதல் நடனத்தின் மீது ஆர்வம். தனது ஐந்து வயதில் பாலே நடனத்தைக் கற்கத் தொடங்கினார்.
 இதையடுத்து, மேலை நாட்டுக் கலைகளான ஜாஸ், டேப் டான்ûஸ கற்றார். என்றாலும், நம்முடைய பாரம்பரிய கலையான பரதத்தின் மீதே இவருக்கு ஆர்வம் அதிகமாக இருந்ததால், பரதநாட்டியத்தை ஏழாவது வயதில் கற்க ஆரம்பித்தார். தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக இடைவிடாத பயிற்சி மேற்கொண்ட அஞ்சு மஹாலக்ஷ்மி செருமடார் அண்மையில் தஞ்சாவூரில் பரதநாட்டிய அரங்கேற்றம் செய்தார்.
 இதுகுறித்து அவர் கூறுகையில்:
 "நடனம் என் வாழ்க்கையின் அடித்தளம். பத்து வயது வரை பாலே, ஜாஸ், டேப் போன்ற நடனங்களையே கற்று வந்தேன். அப்போது, அம்மா, அப்பாவுடன் லண்டனில் மஹாலஷ்மி கோயிலுக்கு அடிக்கடி செல்வேன். அங்கு நவராத்திரி விழாவின்போது நாள்தோறும் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெறும். அதைப் பார்க்க, பார்க்க அதுபோல நாமும் ஆட வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்தது.
 அடுத்த ஆறு ஆண்டுகள், லண்டனில் வசித்து வரும் புகழ்பெற்ற பரதநாட்டியக் கலைஞர்களான புஷ்கலா கோபால், ஸ்ருதி ஸ்ரீராம் ஆகியோரிடம் மாணவியாகச் சேர்ந்து பரதநாட்டியத்தைக் கற்றேன்.
 நாங்கள் வசிக்கும் பகுதியிலிருந்து பரதநாட்டியப் பயிற்சி கற்கும் இடம் ஏறத்தாழ 45 கி.மீ. இருக்கும். காரில் கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் பயணம் செய்ய வேண்டும். என்றாலும், வாரத்தில் மூன்று நாட்களுக்குச் சென்று பயிற்சி எடுத்து கொண்டேன்.
 பயிற்சி காலத்தில் நான் கற்ற ஒவ்வொரு பரதநாட்டியத் தொகுப்பும் ஒரு பாரம்பரியம் சார்ந்த கதையைக் கொண்டது என்பதை அறிந்து கொண்டேன். இதன் மூலம், நம் கலாசாரம் பற்றிய ஆர்வம் அதிகரித்து, நிறைய கற்றுக் கொண்டேன். மேலும், பரதத்தைக் கற்றுக் கொண்டால் மற்ற வகை நடனமும் கற்பது எளிது என்பது புரிந்தது.
 எனவே, எனது பள்ளிப் பாடங்களில் நாடகம், வரலாறு, வணிகவியலுடன் பரதக் கலையையும் தேர்வு செய்தேன். கடந்த ஆண்டில் இங்கிலாந்து நாட்டில் உள்ள கேட் என்கிற (இங்ய்ற்ழ்ங் ச்ர்ழ் அக்ஸ்ஹய்ஸ்ரீங்க் பழ்ஹண்ய்ண்ய்ஞ்) பயிற்சித் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு, மேம்பட்ட பயிற்சியை மேற்கொண்டு வருகிறேன்.
 படிப்புடன் பரதக் கலையையும் தொடர்ந்து மேற்கொள்வேன். எதிர்காலத்தில் நானும் பரதநாட்டியத்தைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியராக உருவாக வேண்டும் என்பதே எனது லட்சியம்'' என்றார் அஞ்சு மகாலக்ஷ்மி.
 - வி.என்.ராகவன்
 படம் : தேனாரமுதன்
 

ADVERTISEMENT
ADVERTISEMENT