மறைந்த பெண் எழுத்தாளர் லட்சுமி எழுதியது.
டாக்டர் படிப்பில் பாஸ் செய்து.. கிளினிக் துவங்கி.. வாசலில் போர்டை மாட்டி உட்கார்ந்து விட்டேன். ஆனால், துவக்கத்தில் என்னிடம் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. சில சமயம் நோயாளிகள் யாராவது அகப்படமாட்டார்களா என்று ஏங்கியதும் உண்டு.
என் சிகிச்சை திறமையில் நம்பிக்கை வைத்து ஒருநாள் இளம் கர்ப்பிணி பெண் ஒருத்தி என்னை நாடி வந்தாள். அவளை நன்கு பரிசோதித்துப் பார்த்தேன். அப்பெண்ணின் விருப்பத்தின் பேரில் பேறு காலம் முழுவதும் அவளைக் கவனித்துக் கொள்வதாகவும், பிரசவ சமயத்தில் வைத்திய உதவி செய்யவும் ஆவலுடன் ஒப்புக் கொண்டேன்.
வைத்தியத்தின் கட்டணத்தைப் பற்றி முன் கூட்டியே பேசி அப்பெண் என்னுடன் ஒரு முடிவும் செய்து கொண்டாள். அவளுக்கு பிரசவ வேதனை ஆரம்பமானவுடன் உற்சாகமாக என் மருந்துப் பெட்டியை தூக்கியபடி அவள் வீட்டிற்கு விரைந்தேன்.
மருத்துவமனையில் எந்தவிதமான கஷ்டப் பிரசவங்களையும் கையாள எனக்கு சிரமம் ஏற்பட்டது இல்லை. உதவி செய்ய நர்சுகளும், டாக்டர்களும் , தக்க ஆலோசனை கொடுத்து உதவ பெரிய ஸ்பெஷலிஸ்டுகளும் அருகில் இருக்கும்போது தைரியம் தானாகவே ஏற்பட்டுவிடுகிறது.
ஆனால், தன்னந்தனியே சிகிச்சை செய்ய வேண்டி வரும்போது நிலைமை வேறு. பொறுப்பு முழுவதையும் நாமே ஏற்க வேண்டி வந்தால் தைரியம் குறைந்து விடுகிறது. ஆரம்ப காலத்தில் வைத்தியர் பலருக்கு ஏற்படும் அனுபவம்தான் இது.
நான் அன்று ஏற்றுக் கொண்ட பிரசவகேஸ் ஆரம்பத்தில் சுலபமாக தென்பட்ட போதிலும் முடிவில் மிகவும் கஷ்டமான பிரசவ கேஸாக மாறிவிட்டது.
நேரம் செல்ல செல்ல பெற்றோர் முகத்தில் கவலை திரையிட்டது. எனக்கோ என் திறமையைப் பற்றி சந்தேகம் வலுக்கத் தொடங்கியது. என் உடம்பெல்லாம் வியர்க்கத் துவங்கியது.
என் இஷ்ட தெய்வங்களையெல்லாம் பிரார்த்தித்துக் கொண்டேன். முடிவில் பிரசவம் சுகமாக நடந்தேறியது.
"குவா.. குவா..' என்று குழந்தை அலறியதும், கேட்ட எனக்கு நானும் பிழைத்தேன் என்று எண்ணி நிம்மதி பெருமூச்சு விட்டேன்.
(எழுத்தாளர் லட்சுமியின் சுயசரிதையான "கதாசிரியையின் கதையிலிருந்து')
- மா.சந்திரசேகர்