மகளிர்மணி

கலக்கிய கல்லூரி மாணவிகள்..! முத்திரைப் பதித்த மூதாட்டிகள்..!

8th Jan 2020 04:01 PM

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் உள்ளாட்சியில் காலியாகவுள்ள 91 ஆயிரத்து 975 பதவிகளுக்குத் தேர்தல் நடந்தது. மூன்று ஆண்டுகள் தேர்வு நடைபெறாததால் இந்தத் தேர்தல் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சித் தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியிடங்களுக்காக நடைபெற்ற தேர்தலில் இம்முறை பெண்கள் பலர் வெற்றி வாகை சூடியுள்ளனர். அவற்றில் அனைவர் கவனத்தையும் ஈர்த்தவர்கள் இவர்கள்...
 கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம் காட்டிநாயக்கன்தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சாரதி. இவருடைய மகள் சந்தியா ராணி. 21 வயதாகும் இவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். பஞ்சாயத்து தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களை விட 210 வாக்குகள் அதிகம் பெற்று அவர் வெற்றிப் பெற்றுள்ளார். இதன்மூலம் தற்போதைய உள்ளாட்சித் தேர்தலில் மிக இளம் வயதில் பஞ்சாயத்து தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். சந்தியா ராணி பேசுகையில்:-
 ""வாக்கு சேகரிக்கும்போது எல்லாரும் என்னை அதிசயமாகப் பார்த்தார்கள். அப்பா நிறையப் பேரின் பிரச்னைகளுக்கு உதவி செய்துள்ளார். அவர்களுடைய தேவைகளுக்கு நான் உதவுவேன் என்று நம்பியதால் எனக்கு வாக்களித்தார்கள்.
 என்னுடைய வெற்றிக்கு என் அப்பா, அம்மா தான் முதல் காரணம். மிகவும் இளம் வயதில் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைத்தது. இது என்னுடைய அதிர்ஷ்டம்.
 எங்களுடைய கிராமத்தில் பலர் குடிசை வீட்டில் தான் வசிக்கிறார்கள். அவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க முயற்சி மேற்கொள்வது கட்டாயம், சாலை மற்றும் குடிநீர் தேவைகளைப் பூர்த்திச் செய்ய முயற்சி மேற்கொள்வேன். தற்போது இளங்கலை இறுதி ஆண்டுப் படிக்கிறேன். அடுத்து மக்கள் பணி செய்ய ஏதுவாகத் தொலைதூரக்கல்வி எனது முதுகலை படிப்பை தொடருவேன். என்னுடைய கிராமத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச்செல்வேன்'' என்றார்.
 சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்தில் சுக்கம்பட்டி, பூவனூர் கிராம ஊராட்சிகளுக்கு உட்பட்ட 3- வது வார்டில் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்குப் பிரீத்தி மோகன் என்பவர் போட்டியிட்டார். 22 வயதே ஆன பிரீத்தி, தொலைதூரக் கல்வித்திட்டம் மூலம் எம்.ஏ. ஆங்கிலம் படித்து வருகிறார். பிரீத்திக்கு உள்ளாட்சித் தேர்தலில் பேட்டியிடுவது முதல்முறை.
 வார்டு, சுழற்சி முறையில் இந்த முறை பெண்களுக்கு (பொது) ஒதுக்கப்பட்டதால், தேர்தலில் போட்டியிடும் கனவில் இருந்த மோகன், தனது மனைவி பிரீத்தியை போட்டியிட வைத்தார். இறுதியாகத் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பூங்கோதையை விட 1050 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் பிரீத்தி.
 "எனக்குத் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை.அயோத்தியாப்பட்டணம் 3- வது வார்டு, பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் நான் போட்டியிட வேண்டும் என்று கணவர் மோகன் கூறியதால் தான் தேர்தல் களத்தில் இறங்கினேன். இதுதான் எனக்கு முதல் தேர்தல்.
 சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றிப் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. என் மாமனார், தீவிர திமுக தொண்டர். கட்சி ஆரம்பித்த நாளில் இருந்தே அவர் திமுகவில் இருக்கிறார். கணவரும் தீவிர விசுவாசி. அவர்களுக்கு உள்ளூரில் உள்ள செல்வாக்கும், உதயசூரியன் சின்னமும்தான் வெற்றியை எளிதாக்கியது.
 நாங்கள் பிரசாரத்திற்கு சென்ற சுக்கம்பட்டி, பூவனூர் கிராமங்களில் இன்னும் திறந்தவெளி கழிப்பிடங்கள் ஏராளமாக இருக்கின்றன. எங்களிடமும் பொதுமக்கள் கழிப்பறை வசதி செய்து தரும்படிதான் கேட்டனர்.
 எங்கள் பகுதிகளில் கழிப்பறை, சாக்கடை கால்வாய் வசதிகளைக்கூட முறையாகச் செய்யவில்லை. என் கவனமெல்லாம் எங்கள் கிராம மக்களுக்கு பொதுக்கழிப்பறை மட்டுமின்றி, வீடுகள்தோறும் தனிநபர் கழிப்பறை கட்டிக் கொடுப்பதில் கவனம் செலுத்துவேன்'' என்றார் பிரீத்தி.
 இவரையடுத்து திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பூசலாங்குடி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 22 வயது பிபிஏ பட்டதாரி ஆர்.சுபிதா என்பவர் போட்டியிட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவ அமைப்பான அஐநஊ யிலும் உறுப்பினராக இருக்கிறார் சுபிதா. 499 வாக்குகள் பெற்று பஞ்சாயத்துத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தமிழகத்தின் 2 ஊராட்சிகளை இளம் பெண்கள் தலைவர்களாக வழிநடத்த இருக்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது.
 நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய தேர்தலில் போட்டியிட்ட திருநங்கை ரியா என்பவர் 2701 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளார். தொடர்ந்து மக்கள் பிரச்னைகள் தீர்க்க பணி செய்ய உள்ளதாகவும், முழு நேர அரசியல்வாதியாக இருந்து மக்களுக்கு உதவுவேன் என்கிறார் ரியா.
 கல்லூரி மாணவிகள் அரசியலுக்கு வந்து வெற்றி பெற்று மக்கள் பணியை ஏற்பது ஆரோக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

முத்திரைப் பதித்த மூதாட்டிகள்
 திருப்பூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் ஊராட்சி தலைவர் பதவிக்கு 82 வயதான விசாலாட்சி என்ற மூதாட்டி போட்டியிட்டார். தம்மை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் விட அதிக வாக்கு பெற்று வெற்றிக்கனியைப் பறித்துள்ளார்.
 மேலும் மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த அரிட்டாப்பட்டியை சேர்ந்த 79 வயதான வீரம்மாள், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். அவருடன் 7 பேர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். இந்நிலையில் 195 வாக்குகள் வித்தியாசத்தில் வீரம்மாள் வெற்றி பெற்றார். ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஏற்கெனவே 2 முறை போட்டியிட்ட வீரம்மாள், இந்த முறை வெற்றி பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
 இதே போன்று ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியத்துக்கு உட்பட்ட தரைக்குடி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட, க.தங்கவேலு என்ற 73 வயது மூதாட்டி வெற்றி பெற்றார். மக்கள் பயன்பெறும் வகையில் சேவை செய்வேன் என்று உறுதி அளித்துள்ளார்.
 ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த கான்சாபுரம் ஊராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றியவர் சரஸ்வதி. தனது அரசு வேலையை ராஜினாமா செய்து விட்டு அதே ஊராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வென்றுள்ளார்.
 கடந்த முறை தேர்தல் அறிவிக்கப்பட்டபோதே அரசுப் பணியான துப்புரவு வேலையை ராஜினாமா செய்தார் சரஸ்வதி. ஆனால், தேர்தல் நடைபெறாத நிலையில் வேறுவழியின்றி அதே ஊராட்சியில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்தார்.
 -வனராஜன்
 

ADVERTISEMENT
ADVERTISEMENT