மகளிர்மணி

ஆடல் - பாடல் - சைகை: வாழ்க்கையைப் படிக்கலாம்

8th Jan 2020 03:31 PM

ADVERTISEMENT

"வாசி" வானதி சிறப்பு குழந்தைகளுக்காகத் தன்னை அர்ப்பணம் செய்து கொண்டிருப்பவர். இதுவரை சுமார் இருநூறு சிறப்புக் குழந்தைகளுக்கு பயிற்சி கொடுத்திருக்கும் வானதி, சிறப்புக் குழந்தைகளுக்கென்று "சிறப்பு பள்ளி' ஒன்றை கட்டி முடித்திருக்கிறார். சிறப்புக் குழந்தைகள் என்றால் ஏதாவது ஒருவிதத்தில் அல்லது பல வகைகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகள். எல்லாவற்றிற்கும் பெற்றோரை அல்லது பிறரைச் சார்ந்திருக்கும் குழந்தைகள். "வாசி' வானதி விளக்குகிறார்:
 "எனக்கு சொந்த ஊர் தஞ்சாவூர் பக்கமுள்ள ஒரத்தநாடு. "அக்குபஞ்சர்' சிகிச்சை முறையை படித்து முடித்ததும், திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் "புனர்வாழ்வியல்' துறையில் சொல்லித்தரப்படும் சிறப்புக் குழந்தைகளுக்கான "சிறப்புக் கல்விமுறையைப் பயின்றேன். நாம் செய்யும் பணி, சேவை மனப்பான்மை உள்ளதாக இருக்க வேண்டும். அதே சமயம் மன நிறைவு தருவதாகவும், சமூகத்திற்கு உதவி செய்வதாகவும், அமைய வேண்டுமென்று நான் தீர்மானித்திருந்தேன். சிறப்புக் குழந்தைகளுக்கு நான் செய்யும் சேவை இந்த நோக்கங்களை நிறைவு செய்யும் என்று முடிவெடுத்து அடுத்தக் கட்டம் நோக்கி நகர்ந்தேன்.
 திருச்சி தஞ்சாவூர் பகுதிகளில் சிறப்பு ஆசிரியராகக் பணிபுரிய ஆரம்பித்தேன். அப்போதுதான் சிறப்புக் குழந்தைகளுடன் பழகும் நேரடி அனுபவம் கிடைத்தது. உண்மையைச் சொன்னால் சிறப்புக் குழந்தைகளைப் படிக்க ஆரம்பித்தேன். அவர்களுக்கு வாழ்க்கைப் பாதை நீண்டு கிடக்கிறது. அதை அவர்கள் பயணித்து முடித்தாக வேண்டும். தனக்கு பசிக்கிறது... அடி பட்டால் வலிக்கிறது... பாத்ரூம் போக வேண்டும் என்று முதலில் சொல்லத் தெரியணும். குறைந்தபட்சம் சைகை காட்டவாவது தெரியணும். அவற்றை சிறப்புக் குழந்தைகளுக்குப் படிப்பிக்க வேண்டும் என்பதுதான் எனக்கு முக்கியமாகத் தோன்றியது.
 திருநெல்வேலி அம்பாசமுத்திரத்துக்கு அருகில் இருக்கும் சிவசைலத்திலுள்ள அவ்வை ஆசிரமத்து ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படி வந்ததில் இந்தப் பகுதி எனக்கு மிகவும் பிடித்துப் போனது.
 மேற்கு தொடர்ச்சி மலையின் குட்டி மலைகள், அவ்வப்போது பெய்யும் மழை... பசுமை நிறைந்த சூழல்... சுத்தமான காற்று...சிறப்புக் குழந்தைகளுக்கான பொருத்தமான இடம் என்று தோன்றியது.
 மேலாம்பூர் பகுதியில் சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளி ஒன்றைத் துவங்க தீர்மானித்தேன். தென்காசி மாவட்டம் மேலாம்பூர் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடி வாரத்தில் ஐந்து ஏக்கர் நிலம் வாங்கி பள்ளியைக் கட்ட ஆரம்பித்தேன். தன்னிறைவு பெற்ற பள்ளியாக இருக்க வேண்டும் என்பதற்காக காய்கறி தோட்டம் அமைத்து, பழம் தரும் மரங்களையும் நட்டேன். சுமார் ஐநூறு மரங்கள் இருக்கின்றன. மூலிகைச் செடிகளும் உண்டு. அரிசி மட்டும் வாங்கினால் போதும். வேறு தேவைகளுக்கு வெளியூர் போக வேண்டாம்.
 இந்தப் பகுதியில் மற்ற கிராமப்புறங்கள் மாதிரி "சிறப்பு குழந்தைகள்' பராமரிப்பு குறித்த புரிதல் பெற்றோருக்கு குறைவாகவே இருக்கிறது. பெற்றோர் எத்தனை காலம் அந்தக் குழந்தையைப் பாத்துக் கொள்ளமுடியும். அவர்களுக்குப் பின் அந்தக் குழந்தையைப் யார் பாத்துக்குவாங்க... அந்தக் குழந்தையால் பெத்தவங்க இல்லாம தனியாக தனது தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டு வாழமுடியுமா? இந்தக் கேள்வி அலைக்கழித்துக் கொண்டே இருந்தது. அதற்கு விடையைக் கண்டுபிடிக்க எனது தேடலும் தொடர்ந்தது. அந்தத் தேடலின் இறுதி புள்ளிதான் இந்தச் சிறப்புப் பள்ளி.
 சிறப்புக் குழந்தைகளுக்கு இப்போது செயல்படும் பள்ளிகளிலிருந்து வேறுபட்டது. இந்தப் பள்ளிக்கு "வாசி' சிறப்பு மையம் என்று பெயர் சூட்டியிருக்கிறேன். "வாசி' என்றால் காற்று என்று பொருள். அந்தக் காலத்தில் சித்தர்கள் மூச்சுப் பயிற்சி செய்து வந்தார்கள். "வாசி' வசப்பட்டால் எல்லாமே வசப்படும்' என்று சித்தர்கள் அனுபவபூர்வமாகக் கண்ட உண்மை. இந்தக் குழந்தைகளுக்கு எல்லாமே வசப்படணும் என்பதுதான் எனது ஆசை. விருப்பம்.
 இங்கே குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோரிடம் தெளிவாகச் சொல்லிவிடுவேன். "இங்கே வரும் குழந்தைகளுக்கு எடுத்த எடுப்பிலேயே எழுத்துகளைச் சொல்லித் தர மாட்டேன். அதற்குப் பதிலாக விதைகளைக் கொடுத்து மண்ணில் விதைக்கச் சொல்வேன். சில நாட்களில் மண்ணிலிருந்து கிளம்பும் முளையை அடையாளம் காணச் சொல்வேன். செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றச் சொல்வேன். செடி வளர்ந்து பெரிதாகி காய் உருவாகும்போது காய்களைப் பறிக்கச் சொல்வேன். குன்னிமுத்துகளை, புளியங்கொட்டைகளை ஒண்ணு- ரெண்டு- மூணு என்று சொல்லிக் கொண்டு அவற்றை களி மண்ணில் ஒட்டி தொட்டுப்பார்க்கச் சொல்வேன். அதுபோன்று தொடக்கத்தில் குழந்தையுடன் அப்பா அல்லது அம்மா இங்கே வர வேண்டும். அவர்களும் குழந்தையை எப்படி பழக்குவது என்பது குறித்து அறிந்து கொள்ள வேண்டும்.

அடுத்தது சமையல் எப்படிச் செய்வது என்பதை பழக்குவேன். அடுப்பை பற்ற வைப்பதிலிருந்து மசாலா தயார் செய்வது வரை அறிமுகப்படுத்துவேன். இந்தப் பகுதியில் பனை மரங்கள் அதிகம். அதனால் பனை ஓலையிலிருந்து கைவினைப் பொருட்கள் செய்வதைச் சொல்லிக் கொடுப்போம். அதை விற்பது குறித்தும் வழிகாட்டுவோம். இந்தப் பள்ளியில் டிவி, கணினி, வீடியோக்கள் என்று எதுவும் இல்லை. இவை எந்த விதத்திலும் குறையில்லாத குழந்தைகளுக்கே பல பிரச்னைகளை உருவாக்கும்போது, சிறப்பு குழந்தைகளுக்கு பிரச்னைகளை தராமல் இருக்குமா? இந்தக் கருவிகளை பயன்படுத்தும் சிறப்புக் குழந்தைகள் பேசுவது மிகவும் அரிதாகிவிடும். ஆடல் பாடல் சைகைகளுடன் வாழ்க்கையைப் படிக்கலாம் என்பதை சொல்லிக் கொடுப்பதுதான் "வாசி' பள்ளியின் நோக்கம்.
 - பிஸ்மி பரிணாமன்
 
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT