மகளிர்மணி

பாத்திரங்கள் பளிச்சிட..

1st Jan 2020 11:45 AM

ADVERTISEMENT

• கறுத்துப்போன வெள்ளிப் பாத்திரங்களை சிறிது பற்பசையை வைத்து தேய்த்தால் போதும் பளிச்சென்று மின்னும்.
• பித்தளை, தாமிரப் பாத்திரங்கள் பளிச்சிட புளித்த தயிரில் அந்தப் பாத்திரங்களை சிறிது நேரம் ஊறவைத்து, சபீனாவில் அழுத்தி தேய்த்து நல்ல தண்ணீரில் கழுவி எடுத்தால் பளிச்சென்றாகிவிடும். 
• எலுமிச்சம் பழ சர்பத் தயாரித்தப்பின் அதன் மூடிகளை தூக்கி எறியாமல் குக்கரில் சிறிது தண்ணீர்விட்டு போட்டு வைத்தால் குக்கரின் உள்பக்கம் பளிச்சென்று இருக்கும்.
• தண்ணீரைக் கொதிக்க வைத்து சில ஸ்டீல் பாத்திரங்களில் வெள்ளையாகக் கறை படிந்திருக்கும். அது எளிதில் போக, அந்தப் பாத்திரத்தில் இரண்டு நாட்களுக்கு அரிசியை ஊற வைத்திருந்தால் கறை போய்விடும்.
• பழைய நைலான் சாக்ஸ்களைப் பாத்திரம் தேய்க்க உபயோகித்தால் பாத்திரங்கள் கீறல் விழாமல் இருப்பதோடு பளிச்சென்று இருக்கும். 
• அரிசி களைந்த தண்ணீரில் துரு பிடித்துவிட்ட ஜாரிணி, இடியாப்ப அச்சு, அரிவாள் மனை, சுத்தி போன்ற பொருள்களை நான்கு மணி நேரம் ஊறவைத்து எடுத்து துணியால் துடைக்க துரு போய்விடும்.
• பித்தளை மற்றும் வெள்ளிப் பாத்திரங்கள் கறுத்துக் காணப்பட்டால் அதற்கு சாதம் வடித்த கஞ்சியில் சிறிது நேரம் பாத்திரத்தை ஊற வைத்து, பின் எடுத்து துலக்கினால் கறை நீங்கி, பளிச்சென்று ஆகிவிடும்.
• உப்புத் தண்ணீர் காரணமாக பாத்திரங்களில் வெள்ளையாக கொர கொரப்புடன் இருக்கிறதா? அதில் மோர் ஊற்றிவைத்து நான்கு அல்லது ஐந்து மணி நேரம் கழித்துப் பாத்திரத்தைக் கழுவினால், பாத்திரம் கரைகள் மறைந்து பளிச் சென்று இருக்கும்.
• வெள்ளிப் பாத்திரங்களை தனித்தனியாக அட்டைப்பெட்டிகளில் போடுவதை விட அவற்றை சீராக அடுக்குங்கள். கற்பூரத்தைப் பொடி செய்து வெள்ளிப் பாத்திரங்களின் மீது தூவிய பிறகு, துணிப்பையில் கட்டி வைத்தால் அவை கறுத்துப் போகாமல் இருக்கும்.
• உபயோகப் படுத்தாமல் இருக்கும் பித்தளைப் பாத்திரங்களின் மேல் படிந்திருக்கும் பச்சை நிறத்தைப் போக்க விநிகரையும் உப்பையும் கலந்து நன்றாக தேய்த்தால் பித்தளைப் பாத்திரம் பளபளக்கும்.
• எண்ணெய்ப் பிசுக்குப் பிடித்த பாத்திரங்களை கழுவுவதற்கு முன் வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு மற்றும் கடுகுத்தூளைப் போட்டு கழுவினால் எண்ணெய்ப் பிசுக்கு அறவே நீங்கிவிடும். பாத்திரங்களில் துர்நாற்றமும், வாடையும் இருக்காது.
• வெள்ளிப் பாத்திரங்கள் பளிச்சென்றிருக்க கடலைமாவில் சிறிதளவு எலுமிச்சைச் சாறு கலந்து தேய்த்தால் போதும்.
• கண்ணாடிப் பாத்திரங்களில் உள்ள கறைகளைப் போக்க உப்பும், விநிகரும் உபயோகித்துக் கழுவி எடுத்தால் போதும்.
• கறுத்துப்போன வெள்ளிச்சாமான்களை தாம்பூல சுண்ணாம்பு கொண்டு தேய்த்தால் பளபளவென்று ஆகிவிடும்.
- சி.ஆர். ஹரிஹரன்

ADVERTISEMENT
ADVERTISEMENT