மகளிர்மணி

மும்முறை தாண்டுதலில் வெள்ளி மங்கை!

26th Feb 2020 11:51 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சத்திரப்பட்டியைச் சேர்ந்த சீனிவாசன் மாலா தம்பதியரின் மகள் இமயத்தரசி(17). மூன்று தேசிய அளவிலான மும்முறை தாண்டுதல் போட்டியில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்றார், அந்த 3 போட்டிகளிலும் வெள்ளிப் பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். வெள்ளி மங்கையாக வலம் வரும் இவர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திண்டுக்கல் விளையாட்டு விடுதி மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. 
திண்டுக்கல் அங்குவிலாஸ் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வரும் இமயத்தரசி, 3 வெள்ளிப் பதக்கங்களை வென்றது, அவரது கடின பயிற்சிக்கு மேலும் வலு சேர்த்துள்ளது. 3 தேசிய அளவிலான போட்டியில், 2 போட்டிகள் இந்திய விளையாட்டுக் குழுமம் மற்றும் இந்திய பள்ளிகள் விளையாட்டுக் குழுமத்தின் சார்பில் நடைபெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், இந்த 2 போட்டிகளில் கிடைத்த வெற்றி இமயத்தரசிக்கு தமிழக அரசின் பரிசுத் தொகையாக தலா ரூ.1.50 லட்சம் வீதம் மொத்தம் ரூ.3 லட்சத்தையும் பெற்றுக் கொடுத்துள்ளது. தேசிய அளவிலான 3 வெற்றிகள் மூலம், 12-ஆம் வகுப்பு பயின்று வரும் இமயத்தரசிக்கு உயர்கல்வி பயில இடம் அளிக்க பல தனியார் கல்லூரிகள் இப்போதே போட்டி போடத் தொடங்கிவிட்டன. 
இதுதொடர்பாக அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டது: 
"7ஆம் வகுப்பு வரையிலும் பழனி அடுத்துள்ள தனியார் பள்ளியில் பயின்று வந்தேன். அப்போது தடகளப் பிரிவில் சிறப்பாக செயல்பட்ட எனக்கு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திண்டுக்கல் விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி பெறுவதோடு, எனது படிப்பையும் அங்குவிலாஸ் மேல்நிலைப் பள்ளியில் தொடர்கிறேன். 
தடகளப் பிரிவுக்கு நான் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், நீளம் தாண்டுதல் மற்றும் மும்முறை தாண்டுதல் பிரிவில் கூடுதலாக சாதிக்க முடியும் என்பதை சுட்டிக் காட்டி எனது பயிற்சியாளர் க.ரோகா வழிகாட்டினார். அதன் பின்னர் நீளம் தாண்டுதலுக்கு முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கினேன். மாவட்ட அளவிலான போட்டிகள் மட்டுமின்றி, விளையாட்டு விடுதிகளுக்கு இடையிலான போட்டியிலும், பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெறும் குடியரசு தின விளையாட்டுப் போட்டியிலும் தொடர்ந்து பங்கேற்று வந்தேன். 
கடந்த ஆண்டு திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் நடைபெற்ற குடியரசுத் தின விளையாட்டுப் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றது, எனக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதன் மூலம் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தமிழகத்தின் சார்பில் நான் தேர்வு செய்யப்பட்டேன். 
இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமத்தின் சார்பில் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் மும்முறை தாண்டுதல் பிரிவில் பங்கேற்று 11.84 மீட்டர் தாண்டியதன் மூலம் வெள்ளிப் பதக்கம் வென்றேன். அதனைத் தொடர்ந்து இந்திய விளையாட்டுக் குழுமத்தின் சார்பில் அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெற்ற கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் 11.80 மீட்டர் தாண்டி மீண்டும் வெள்ளிப் பதக்கம் வென்றேன். ரிலையன்ஸ் நிறுவனத்தின் சார்பில் மும்பையில் நடைபெற்ற அகில இந்திய பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியில் 11.54 மீட்டர் தூரம் தாண்டி 3ஆவது தேசிய அளவிலான வெள்ளிப் பதக்கத்தை வென்றேன். 
இந்த வெற்றியின் மூலம் சர்வதேச போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாட முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதற்காக மேலும் தீவிரமாக பயிற்சி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்'' என்றார் நம்பிக்கையாக.
- ஆ.நங்கையார் மணி
படம்: த.சுப்பாராஜ்


 

ADVERTISEMENT
ADVERTISEMENT