மகளிர்மணி

தொழில் முனைவோர் பயிற்சியில் ஐ.ஐ.டி

26th Feb 2020 11:53 AM

ADVERTISEMENT

பெண் சுய தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், மெட்ராஸ் ஐ.ஐ.டி நிறுவனம் அவ்வப்போது, நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி தொழில் மேம்பாட்டு திறனை வளர்த்துக் கொள்ள பல ஊர்களில் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் சென்னை கே.கே.நகரில் உள்ள "சுகா' தொண்டு நிறுவனத்தின் மூலம் சுய தொழில் செய்யும் பெண்களுக்கு பயிற்சி அளிக்கும் "விதை 2020' (சமூக வலைத்தளமும் - வணிக வளர்ச்சியும்) என்ற நிகழ்ச்சியை நடத்தியது. இது முற்றிலும் சுயதொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியாகும். 
ஐந்தாண்டு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை நடத்த உதவியவர்கள் (TNPL) தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்தினர். சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அவர்கள் இந்த நிகழ்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளனர். 
இந்நிகழ்ச்சியில் ஊறுகாய் தயாரிப்பு, அப்பளம் தயாரிப்பு, சணல் பை தயாரிப்பு, அழகுக்கலை பயிற்சி பெற்றவர்கள், கேட்டரிங் துறை பயற்சி பெற்றவர்கள், கைவினை நகை தயாரிப்பு என பலதரப்பட்ட பெண் தொழில் முனைவோர், விழாக் கால தொழில் முனைவோர், வளர்ந்து வரும் இளம் தொழில் முனைவோர் என 40- க்கும் மேற்பட்ட சுயதொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர். ஐ.ஐ.டி நிறுவனத்தின் மேலாண்மை படிப்புத்துறை சேர்ந்த பேராசிரியைகள் ரூபஸ்ரீ, விஜயலட்சுமி ஆகிய இருவரும் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து இவர்களை வழி நடத்தினர்.
இன்றைய நவீன தொழில் நுட்பங்களான இணையதள சேவையான வாட்ஸ் -ஆப், பேஸ் புக், யூ-டியூப் போன்றவற்றை நமது தொழில் வளர்ச்சிக்கு எவ்வாறு பயன்படுத்த வேண்டும். புதிதாக தொழில் தொடங்க நினைப்போர் வியாபாரத்தை எப்படி பதிவு செய்வது, ஏற்கெனவே தொழில் தொடங்கியவர்கள் எப்படி வியாபாரத்தை லாபகரமாக மாற்ற வேண்டும். 
குறிப்பாக நாம் தயாரிக்கும் பொருட்களை யாருடைய உதவியும் இல்லாமல் ஆன்லைன் மூலம் எப்படி விற்பனை செய்வது போன்ற யோசனைகளை ஐ.ஐ.டியின் திட்ட ஆலோசகரான ஐஸ்வர்யா முருகன் மற்றும் ஜேம்ஸ் ராஜநாயகம் ஆகியோர் விளக்கினர்.
இந்த விதை 2020 பயிற்சி பட்டறை, பெண் சுயதொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையிலும், சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் இருந்தது என்கின்றனர் பயிற்சி கலந்து கொண்ட பெண்கள். 
இது போன்ற சுய தொழில் குறித்த ஆலோசனையையும், விழிப்புணர்வு பயிற்சியையும் பெற விரும்பும் பெண்கள். ஒரு குழுவாக சேர்ந்து ஐ.ஐ.டி நிறுவனத்தை அணுகினால், அவர்களது தொழில் வளர்ச்சிக்கான ஆலோசனைகளை வழங்கவும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார் அதன் நிர்வாகியான ரூபஸ்ரீ. 
- ஸ்ரீதேவி

ADVERTISEMENT
ADVERTISEMENT