மகளிர்மணி

சென்னை வருகிறார் வீரப்பெண்மணி

26th Feb 2020 11:49 AM

ADVERTISEMENT

நிகிதா கௌல் தெளண்டியால். தற்போது குறுகிய கால பணி திட்டத்தின் (நநஇ) கீழ் தேர்வு பெற்று ராணுவ அதிகாரியாக உள்ளார். இந்த வீரப்பெண்மணி ராணுவ பயிற்சி பெறுவதற்காக சென்னை வரவுள்ளார். 
யார் இந்த நிகிதா கௌல்?
கடந்தாண்டு, பிப்ரவரி 17-இல், ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவில், பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு வீர மரணம் அடைந்தவர் ராணுவ மேஜர் விபூதி தெளண்டியால். அவரது மனைவி தான் நிகிதா கௌல். 
திருமணமான 9 மாதங்களிலே கணவரை இழந்த துக்கம் ஒரு புறம் இருந்தாலும், கணவரின் இறுதிசடங்கின் போது அவருக்கு "சல்யூட்' செய்து மரியாதை செய்தார். அனைவர் முன்னிலையில் சடலமாக வைக்கப்பட்டிருந்த கணவரின் காதருகே சென்று "ஐ லவ் யூ' என்று சொல்லி அனைவரின் கண்களிலும் கண்ணீர் சிந்த வைத்தவர். 
எம்.பி.ஏ பட்டதாரியான இவர் கணவரின் மறைவுக்கு பின் நொய்டாவிலுள்ள எம்.என்.சி கம்பெனியில் பணியாற்றி வந்தார். ஆனாலும் நாமும் ராணுவத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது தான் நிகிதாவின் நோக்கமாக இருந்தது. கணவர் போரில் உயிரிழந்ததால் விதவை என்ற அடிப்படையில், குறுகிய கால பணி திட்டத்தின் (SSC) தேர்வு எழுத நிகிதாவுக்கு வயது வரம்பு மட்டும் தளர்த்தப்பட்டது. ஆனால் மற்ற எந்த விதிகளும் நிகிதாவுக்காக வளைந்து கொடுக்கவில்லை. 

இனி நிகிதா பேசுகிறார்:
"எனது கணவர் இறந்த ஆறு மாதத்தில் தேர்வு எழுத விண்ணப்பம் செய்தேன். பரீட்சை எழுதி பாஸாகி நேர்முகத் தேர்விலும் வெற்றி பெற்றேன். என்னுடைய கணவர் சாகவில்லை என்னுடன் கூட இருந்து வழி நடத்துகிறார் என்பதை உணர்ந்தேன். 
இன்றும் அவருடைய ராணுவ சீருடை, அவர் பயன்படுத்திய டூத் பிரஷ் எனது வீட்டில் வைத்து பாதுகாத்து வருகிறேன். அவரை நினைத்து கண்கலங்காத நாட்களே கிடையாது. அவர் வாழ்ந்தது சில காலம் தான். ஆனால் அவருடைய நினைவுகள் எத்தனை காலம் ஆனாலும் என்னை விட்டு அகலாது. 
இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற நான் மிகவும் கடினமாக உழைத்தேன். பகலில் வேலைக்கு செல்ல வேண்டி இருப்பதால், இரவில் கண்விழித்து படிப்பேன். அப்போது தைரியம் அளித்தது தெளண்டியால் வார்த்தைகள் தான். ஓர் ஆண்டு பயிற்சிக்காக சென்னை செல்ல இருக்கிறேன். நான் எப்போது ராணுவ அதிகாரி உடை அணிகிறேனோ அன்று தான் என்னுடைய கணவரின் ஆத்மா சாந்தி அடையும் என நம்புகிறேன்'' என்கிறார் வீரப்பெண்மணியான நிகிதா கௌல். 
-வனராஜன்

ADVERTISEMENT
ADVERTISEMENT