மகளிர்மணி

கேரட் ஸ்பெஷல்...

26th Feb 2020 11:36 AM

ADVERTISEMENT

சமையல்! சமையல்!
கேரட் குருமா 

தேவையான பொருள்கள்:
கேரட் - அரை கிலோ
தேங்காய் - 1 மூடி
பச்சைமிளகாய் - 5
கசகசா - 2 மேசைக் கரண்டி
இஞ்சி - ஒரு சிறியதுண்டு
பூண்டு - 10 பல்
வெங்காயம் - 2
தக்காளி - 100 கிராம்
சோம்பு - 1 மேசைக் கரண்டி
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 3
ஏலக்காய் - 3
மஞ்சள் பொடி - சிறிதளவு
பிரிஞ்சி இலை - 1
எண்ணெய் - 4 மேசைக் கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை: கேரட்டை நீளவாக்கில் துண்டுகளாக்கிக் கொள்ளவும். வெங்காயம் பச்சைமிளகாயையும் நீளநீளமாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சிப்பூண்டு தோல் நீக்கி விழுதாக அரைத்துக் கொள்ளவும் தக்காளியை பெரிய துண்டுகளாக நறுக்கவும். தேங்காயைத் தூவி சோம்போடு அரைக்கவும். பட்டை கிராம்பு ஏலக்காய் ஆகியவற்றை லேசாகத் தட்டிக் கொள்ளவும். பேனில் எண்ணெய் விட்டு முதலில் பிரிஞ்சி இலையை இரண்டாகப் பிய்த்துப் போடவும். அடுத்து தட்டி வைத்துள்ள மசாலாப் பொடியைப் போடவும். அவை சிவந்து வரும்போது வெங்காயம் சேர்த்து வதக்கவும். இது சிவந்ததும் கீறிய பச்சைமிளகாய், தக்காளி, மஞ்சள் பொடி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். அடுத்து கேரட்டைப் போட்டு மேலும் வதக்கி தேங்காய் மசாலா சேர்த்து நன்றாக வதக்கி உப்பு சேர்த்து அரை கிண்ணம் தண்ணீர்விட்டு வேகவிடவும். ஐந்து நிமிடம் கழித்து கிளறி விடவும். கடைசியாக இதனோடு கறிவேப்பிலை கொத்துமல்லி சேர்த்துக் கிளறிவிட்டு இறக்கவும். இதை சாதம், சப்பாத்தி, பரோட்டா, பூரி, இடியாப்பம், தோசை, நூடுல்ஸ் ஆகியவற்றோடு பரிமாறவும்.

கேரட் கேப்சிகம் காரக் கறி 

ADVERTISEMENT

தேவையானவை
கேரட் - அரை கிலோ
கேப்சிகம் (குடமிளகாய்) -100 கிராம்
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி சாஸ் - அரை கிண்ணம்
சோம்பு பொடி - 1 தேக்கரண்டி
பூண்டு - 1 முழுதாக
மிளகாய்ப் பொடி - அரை தேக்கரண்டி
மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை: குடமிளகாயை நீளவாக்கில் நான்காக நறுக்கி விதை நீக்கிக் கொள்ளவும். இதையும் கேரட்டையும் நீளவாக்கில் விரல் நீளத்திற்கு நறுக்கிக்கொள்ளவும். வெங்காயம் பூண்டு இரண்டையும் தோல் நீக்கி பொடிப்பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் சீரகம் சேர்த்து தாளிக்கவும். பின்னர், வெங்காயம் பூண்டை சேர்த்து வதக்கவும். நறுக்கி வைத்திருக்கும் கேரட், குடமிளகாயும் சேர்த்து மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து வதக்கவும். மேலும் சிறிது வதங்கியதும் தக்காளி சாஸ் மிளகாய்ப் பொடி சேர்க்கவும். இவை எல்லாம் நன்றாகக் கலந்து கொதித்ததும் சோம்பு பொடி கலந்து நறுக்கிய கொத்தமல்லி கலந்து மேலே வெண்ணெய்யை பரவலாக சேர்க்கவும்.
இதை எல்லா வகை சாதத்துடனும் குறிப்பாக பிரிஞ்சி, பிரியாணி, புலாவ் , சப்பாத்தி, பரோட்டா, நாண் போன்ற
வற்றோடும் பரிமாறலாம். 

கேரட் பிரைஸ் 

தேவையானவை:
கேரட் - 5
கார்ன் பிளார் - 1 தேக்கரண்டி
எலுமிச்சைச் சாறு - அரை மேசைக்கரண்டி
மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி 
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 5 பல் 
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை: கேரட்டை விரல் நீளத் துண்டுகளாக நறுக்கி வேக வைத்துக் கொள்ளவும். ( கேரட் முழுதாக வெந்து குழையாமல், அரை வேக்காட்டில் எடுத்துக் கொள்ளவும்) அதனுடன் இஞ்சி- பூண்டு விழுது, மிளகுத் தூள், உப்பு, கார்ன் பிளார் மாவு சேர்த்து நன்கு பிசைந்துக் கொள்ளவும். பின்னர், வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், தயார் செய்து வைத்து கேரட் துண்டுகளை எண்ணெய்யிலிட்டு பொரித்து எடுத்து ஒரு தட்டில் இடவும். பின்னர், எலுமிச்சைச் சாறு விட்டு, நறுக்கிய கொத்துமல்லி தூவி பரிமாறவும். சுவையான கேரட் பிரைஸ் தயார். தக்காளி சாஸ், மயோனிஸுடன் தொட்டு சாப்பிட சுவை கூடுதலாக இருக்கும். 

கேரட் சீஸ் தோசை 

தேவையானவை:
தோசை மாவு - 1கிண்ணம்
கேரட் - 5
சீஸ் துருவியது - அரை கிண்ணம்
குட மிளகாய் - 1
இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மிளகு பொடி - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
சீரகப் பொடி - அரை கிண்ணம்
செய்முறை: கேரட்டைத் துருவிக் கொள்ளவும். குடமிளகாயைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டுக் சூடானதும் , இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து அடி பிடிக்காமல் வதக்கவும். நன்றாக வதங்கி வந்ததும் இதோடு துருவிய கேரட், நறுக்கிய குடமிளகாய் சேர்த்து பச்சை வாசனைப் போக லேசாக வதக்கி இறக்கிக் கொள்ளவும். பின்னர், தோசை தவா வைத்து, தோசை வார்த்து அதன் மீது துருவிய சீஸ் சிறிது, கேரட் கலவை, மிளகு பொடி தூவி தோசை வார்க்கவும். சுவையான கேரட் சீஸ் தோசை தயார்.
- லோ.சித்ரா, கிருஷ்ணகிரி.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT