பையை முதுகில் வைத்து சுமந்து செல்வது சிறுவர் முதல் பெரியவர் வரை செய்வதுதான். பெட்டிக்குள் செயற்கை இதயத்தை வைத்து சதா சுமந்து கொண்டு இருப்பவர் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா ?
செல்வா ஹுசைன் 41 வயதுப் பெண்மணி. இங்கிலாந்தில் வாழ்கிறார். இரண்டு குழந்தைகளுக்குத் தாய். இதயத்தில் ஏற்பட்ட கோளாறுகளை மருத்துவ ரீதியாகக் குணப்படுத்த முடியாமல், செயற்கை இதயத்தின் உதவியால் வாழ்ந்து வருகிறார்.
இதயம் செய்யும் வேலைகளைச் செய்யும் கருவிதான் செயற்கை இதயம் என்று அழைக்கப்படுகிறது. அந்த கருவியை ஒரு பெட்டியில் வைத்து சதா நேரமும் முதுகில் சுமக்கிறார் செல்வா ஹுசைன். செயற்கை இதயத்தால் வாழ்ந்து கொண்டிருக்கும் இரண்டாவது நபர் இந்த செல்வா.
செல்வாவுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் சுவாசிக்க சிரமம் ஏற்பட்டதால், சிகிச்சை பெற மருத்துவமனைக்குச் செல்ல,.. அங்கு அவரது இதயம் பல கோளாறுகளைக் கொண்டுள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. பிறகுதான் செல்வாவுக்கு செயற்கை இதயத்தின் உதவியால் உயிர் வாழலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது. இந்த செயற்கை இதயத்தின் இன்றைய விலை சுமார் ரூபாய் 86 லட்சம். செயற்கை இதயம் இருக்கும் பெட்டியின் எடை ஏழரை கிலோ.