மகளிர்மணி

இந்தியப் பெண் விமானிகளுக்கு முன்னோடி

2nd Dec 2020 06:00 AM | - பூர்ணிமா

ADVERTISEMENT

 

1946-ஆம் ஆண்டு சென்னையை சேர்ந்த சுந்தரம் மற்றும் உஷா தம்பதியினர் பெங்களூரு வந்து தங்கள் வாழ்க்கையைத் தொடங்கினர். விமானியாக பயிற்சிப் பெற்றிருந்த சுந்தரம், மன்னர் ஆட்சியில் இருந்த மைசூர் மாகாணத்தில் சிவில் ஏவியேஷன் இயக்குநராக பணியில் அமர்ந்தார். சில ஆண்டுகளுக்குள் 1948- ஆம் ஆண்டு பெங்களூரு ஜக்கூரில் நிறுவப்பட்ட அரசு ப்ளையிங் டிரெயினிங் பள்ளி இயக்குநர் பொறுப்பேற்றார். அப்போதெல்லாம் பயிற்சி விமானத்தை ஓட்டும்போது, விமான ஓட்டி அறைக்குள் சக விமானியை அழைத்துச் செல்ல உரிமம் ஏதும் பெறத் தேவையில்லை என்பதால், சுந்தரம் தன் மனைவி உஷாவை உடன் அழைத்துச் செல்வதுண்டு. அந்த வகையில் பெங்களூரில் சக விமானியாக விமான ஓட்டி அறைக்குள் பயணம் செய்த முதல் பெண் என்ற பெருமை உஷாவுக்குக் கிடைத்தது.

ஏற்கெனவே 1941- ஆம் ஆண்டில் மெட்ராஸ் ப்ளையிங் கிளப்பில் விமானியாக பயிற்சிப் பெற்ற சுந்தரம். திருமணமான புதிதில் மனைவி உஷாவை சக விமானி என்ற முறையில் அடிக்கடி உரிமம் இல்லாமலேயே அழைத்துச் சென்றதுண்டு. அவர் பெங்களூர் வருவதற்கு முன் மெட்ராஸ் - சிலோனுக்கிடையே ஏர்மெயில் கடிதங்களை கொண்டு செல்லும் பணியில் இருந்தார்.

பெங்களூரு வந்த பின்னர் 1949- ஆம் ஆண்டு ஜக்கூரில் உள்ள அரசு விமான பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து முறைப்படி பயிற்சிப் பெற்று விமானி உரிமம் பெற்றார் உஷா. கூடவே இந்தியா சுதந்திரமடைந்த பின்னர் விமானத் துறையில் பெண்கள் சேருவதே அரிதாக இருந்த அந்த நேரத்தில் விமான ஓட்டியாக உரிமம் பெற்ற முதல் பெண் விமானி என்ற சிறப்பையும் பெற்றார். பயிற்சி காலத்தில் ஜக்கூரிலிருந்து மைசூருக்கு அன்றைய மைசூர் மன்னரையும், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு மற்றும் மன்னராட்சியில் இருந்த சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து ஏகபாரதத்தை உருவாக்கப் போராடிய சர்தார் பட்டேல் ஆகியோரை விமானத்தில் அழைத்துச் சென்ற வகையில் உஷாவுக்கு பாராட்டுகள் குவிந்தன.

ADVERTISEMENT

பின்னர், மைசூர் மகாராஜா ஜெய சாம ராஜேந்திர உடையார் விருப்பத்திற்கேற்ப ஆக்ரா சென்ற சுந்தரம், "டகோடா டிசி3' என்ற விமானத்தை வாங்கி வந்து, பெங்களூரு எச் ஏ எல் விமான நிலையத்தில் நிறுத்திவைத்தார். மைசூர் மன்னருக்குச் சொந்தமான இந்த விமானத்தை அவருக்குத் தேவையான சந்தர்ப்பங்களில் இயக்கும் வாய்ப்பை சுந்தரமும் அவரது மனைவி உஷாவும் பெற்றிருந்தனர். மற்ற இந்திய விமானங்களை பெரும்பாலும் அமெரிக்கா, பிரிட்டனைச் சேர்ந்த விமானிகளே ஓட்டி வந்த நிலையில் நேரு, பட்டேல் போன்றோர் இவர்களிருவரும் இயக்கும் விமானங்களிலேயே பயணம் செய்ய விரும்பினர்.

1945 முதல் 1951-ஆம் ஆண்டு வரை இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், மௌலானா அப்துல் கலாம் ஆசாத் போன்ற பல முக்கிய பிரமுகர்களை விமானத்தில் அழைத்துச் செல்லும் வாய்ப்பைப் பெற்ற சுந்தரம் - உஷா தம்பதியினரில் உஷா இந்தியாவின் முதல் பெண் விமானி என்ற வகையில் "பெங்களூரு தர்ஷணா' என்ற கலைக் களஞ்சியம் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். பாகிஸ்தான் பிரிவினையின்போது அங்கு சிக்கித் தவித்த இந்திய அகதிகளை அழைத்து வரும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு உஷா, பலமுறை பாகிஸ்தானுக்குச் சென்று விமானத்தில் இந்தியர்களை அழைத்து வந்து பாராட்டினைப் பெற்றுள்ளார்.

1950-ஆம் ஆண்டு அன்றைய மெட்ராஸ் அரசு, தங்கள் சொந்த பயன்பாட்டிற்காக விமானமொன்றை வாங்க விரும்பியது. அதற்காக சுந்தரம் - உஷா தம்பதியினரை அழைத்து, இங்கிலாந்து சென்று விமானம் வாங்கி வர அனுப்பியது. கப்பலில் புறப்பட்டுச் சென்ற இருவரும், அப்போது உலகிலேயே பிரபலமாக இருந்த புத்தம்புதிய "டி வடிவில் லேண்ட் டோல்' என்ற விமானத்தை வாங்கியவுடன், அந்த விமானத்தை லண்டனிலிருந்து பாரிஸ், கராச்சி, பாக்தாத் வழியாக 27 மணி நேரத்தில் ஓட்டி வந்து பம்பாய் விமான நிலையத்திற்குக் கொண்டு வந்து நிறுத்தினர். அப்போது, இது இந்திய விமானத்துறையில் சாதனையாக கருதப்பட்டது.

22 வயதிலேயே விமானம் இயக்கப் பயிற்சிப் பெற்று, இந்தியாவின் முதல் பெண் விமானி என்ற சிறப்பைப் பெற்ற உஷாவை, டிசம்பர் 13, 2001-ஆம் ஆண்டு பெங்களூரில் உள்ள நேஷனல் எரோ ஸ்பேஸ் லேபாரட்டரி பாராட்டி கௌர வித்தது.

1952- ஆம் ஆண்டிலேயே தன்னுடைய மூன்று குழந்தைகளையும் வளர்க்கும் பொருட்டு விமானி பணியிலிருந்து விலகிய உஷா, பின்னர், சென்னையில் குடியேறி தன்னுடைய மகன் சின்னி கிருஷ்ணன் உதவியுடன் "ப்ளுகிராஸ் ஆஃப் இந்தியா' என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தி வந்தார். விமானத் துறையில் பாலின வேறுபாடின்றி துணிந்து பயிற்சிப் பெற்று இந்தியாவின் முதல் பெண் விமானி என்ற சிறப்பைப் பெற்று, தனக்குப் பின்னர் விமானியாக பயிற்சிப் பெற வந்த பெண்களுக்கு முன்னோடியாக விளங்கிய உஷா, தன்னுடைய 86-ஆவது வயதில் ஏப்ரல் 5, 2010- ஆம் ஆண்டு காலமானார்.

Tags : மகளிர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT