மகளிர்மணி

காணாமல் போன குழந்தைகள்... கண்டுபிடித்த பெண் காவலர்!

அ. சர்ஃப்ராஸ்

மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும். அதிலும், 10 மாதம் குழந்தையைச் சுமந்து தாய் என்ற உயர்ந்த இடத்தை அடைய அவள் படும் கஷ்டம் சொல்லிமாளாது.

அப்படி கடும் வலியைப் பொறுத்துக் கொண்டு பெற்ற தனது குழந்தை கண்முன் வளரும்போது அவளது மகிழ்ச்சி சொல்லில் அடங்காது. 

அந்தக் குழந்தை காணாமல் போனால், அவளது உடலில் கடைசி மூச்சு இருக்கும் வரை மறக்க முடியாத கொடூரச் சம்பவமாக அது அமைந்துவிடும். உலகில் எந்த ஒரு தாய், தந்தைக்கும் இதுபோன்ற சோக சம்பவம் நிகழவே கூடாது. 

குழந்தையைக் காணாமல் தவித்த  72 பெற்றோர்களின் குழந்தைகளைக் கண்டுபிடித்து அவர்களின்  கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியுள்ளார் தில்லி காவல் துறையில் பணியாற்றும் சிங்கப் பெண் சீமா டாக்கா.

பொதுமுடக்க காலத்தில் கரோனாவைக் கண்டு வீட்டை விட்டு வெளியே செல்ல அனைவரும் அச்சப்பட்ட நேரத்தில், மூன்று மாதங்கள் உத்தரபிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்கம், பிகார் என பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று காணாமல் போன 72 குழந்தைகளை மீட்டு அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்து சாதனை படைத்துள்ளார்.  இதில் 56 பேர் 14 வயதுக்கும், 15 பேர் 8 வயதுக்கும் குறைவான இளம் பிஞ்சுகள்.  

சினிமாக்களில் மட்டுமே காணும் இதுபோன்ற காட்சிகளை, தில்லி காவலர் சீமா டாக்கா நிஜ வாழ்க்கையில் பல்வேறு தடைகளைத் தாண்டி தைரியமாக நிகழ்த்தி காணாமல்போன குழந்தைகளின் பெற்றோர்களின் கண்களில்  சிங்கப் பெண்ணாகக் காட்சியளிக்கிறார். 

உத்தர பிரதேச மாநிலம் ஷாம்லி கிராமத்தைச் சேர்ந்த விவசாயியின் மகள் சீமா டாக்கா. தில்லி சமய்பூர் பாத்லி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருகிறார் சீமா. அவருடைய கணவரும் தில்லி போலீஸில் தலைமைக் காவலராக உள்ளார்.  

காணாமல் போன 14 வயதுக்குள்ளான 50 சிறார்களை ஓராண்டில் கண்டுபிடித்தால், அவருக்கு சிறப்புப் பணி உயர்வு அளிக்கப்படும் என்று தில்லி காவல் ஆணையர் ஸ்ரீவாஸ்தவா புதிய திட்டத்தை அண்மையில் அறிவித்தார். 2006-இல் காவலராக சேர்ந்து 2014-இல் தேர்வு எழுதி தலைமைக் காவலரான சீமா, இந்த சிறப்புத் திட்டத்தின் மூலம் முதல் முறையாக உதவி ஆய்வாளராகப் பணி உயர்வுப் பெற்று சாதனை  படைத்துள்ளார்.

குழந்தைகள் மீட்பு அனுபவம் குறித்து சீமா டாக்கா பகிர்ந்து கொண்டது:

""தில்லி அலிபூரில் 8 -ஆம் வகுப்பு சிறுமி கடத்தப்பட்டு மீரட்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளார். நான்கு ஆண்டுகள் கழித்து அந்தச் சிறுமியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாக அவரது பெற்றோர் தெரிவித்தனர். தொலைபேசி எண்ணை வைத்து அந்தச் சிறுமியை மீட்டபோது அவர் இரண்டு குழந்தைகளின் தாயாக இருந்தார். பின்னர் பெற்றோரிடம் ஒப்படைத்தோம்.

இதேபோல், ஒரு சவாலான மீட்பு பணி மேற்கு வங்கத்தில் அக்டோபர் மாதம் நடைபெற்றது.   காணாமல்போன ஒரு 15 வயது சிறுவன் மேற்கு வங்கத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது. கரோனா பொது முடக்கத்தால் ரயில் சேவையும் சரியாக இல்லை. சிறிதும் தாமதிக்காமல் தேப்ராவுக்குச் சென்றேன். இதற்காக இரண்டு ஆறுகளைக் கடக்க நேரிட்டது. கடைசியில் அந்தச் சிறுவனை மீட்டு முதலில் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று நல்ல உணவை வாங்கிக் கொடுத்தேன். "தனது தாயை இரண்டாம் திருமணம் செய்து கொண்ட நபர் தன்னை கடுமையாக தாக்கி வந்ததால் வீட்டை விட்டு வெறியேறினேன்' என அந்த சிறுவன் தெரிவித்தான். பின்னர் அறிவுரை கூறி தாயிடம் அந்தச் சிறுவனை ஒப்படைத்தோம். இது மறக்க முடியாத நினைவாக இருந்தது. 

பெரும்பாலான சிறார்களை ரயில்வே, பேருந்து நிலையங்களில் இருந்து மீட்டுள்ளோம். அவர்களிடம் சென்று பேச்சு கொடுத்து தாய், தந்தை குறித்து பேசி மீட்போம். சிறு சண்டைகளுக்காக வீட்டை விட்டு வெளியேறும் பெரும்பாலான சிறுவர்கள், நீண்ட நாள் குடும்பத்தை விட்டுப் பிரிந்து விடுகிறார்கள். அவர்களை மீண்டும் பெற்றோருடன் இணைப்பது என்பது சவாலானது. காணாமல் போன சிறுவர்களின் பெற்றோர்கள் வசிக்கும் மாநிலத்தில் காவல் நிலையங்களுக்குத் தகவல்களை அனுப்பி தேடுதலில் ஈடுபடுவோம். 

நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்கள் குழந்தைகளை அவர்களின் பெற்றோருடன் இணைக்க பெரும் உதவி செய்துள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் எனக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு மூன்று வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்டேன். பின்னர் மீண்டும் பணியில் சேர்ந்தவுடன் தேடுதலைத் தொடங்கி விட்டேன். எட்டு வயது மகனின் தாயான நான், மீட்கப்படும் குழந்தைகளுடன் பாசமாகப் பழகிவிடுவேன். அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும்போது சில குழந்தைகள் என்னை விட்டுப் பிரியாமல் அழவும் செய்துள்ளனர். பெற்றோரிடம் காணாமல் போன குழந்தைகளை ஒப்படைக்கும்போது அவர்களிடம் காணும் மகிழ்ச்சி என்னை மேலும் குழந்தைகளை மீட்க ஊக்குவிக்கிறது'' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT