மகளிர்மணி

சினிமாவுக்கு பெண்கள் நிறைய வர வேண்டும்!

2nd Dec 2020 06:00 AM |  - ஜி.அசோக்

ADVERTISEMENT

 

மகிழ்ச்சியின் ரேகை முகமெல்லாம் படர வரவேற்கிறார் இயக்குநர் சுதா கொங்கரா."இறுதிச் சுற்றி'ல் அதிரடி வெற்றி காட்டியவர். "சூரரைப் போற்று' திருப்தியாக வந்ததில் இரட்டிப்பு  சந்தோஷத்தில் இருக்கிறார்.  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் குட் புக்கில் எப்போதும் இருக்கிற ஆச்சர்ய மனுஷி. தற்போது இந்திய சினிமாவின் முக்கியமான பெண் இயக்குநர். 

சூர்யா நீங்கள் நினைத்ததை கொண்டு வந்து விட்டாரா... எப்படி இருந்தது அந்த பயணம்...

"மிடில் கிளாஸ் பையன். இருபது வருஷத்துக்கு முன்பு இருந்த சூர்யாவா மாற வேண்டும். இதுதான் இந்தப் படத்தில் உங்களுக்கான முதல் விதி' என்றேன். கேட்டதுமே..  "என்னால பண்ண முடியுமா'...? என்றார்.  "முடியும். 25 வருஷத்துக்கு முன்னாடி 65 கிலோ மீட்டர் வண்டி ஓட்டிக் கொண்டு போன சூப்பர்வைசர் வேலை பார்த்த சரவணனாக மாறணும்' என்று சொன்னேன். ஆச்சரிய பார்வைகள் வீசினார். 

ADVERTISEMENT

அந்த நிமிடத்திலிருந்து அதே முடி, ஸ்டைல் என்று வாழ ஆரம்பித்தார். அந்த அறுபது நாட்களிலும் கேரக்டரை விட்டு வெளியே வரவே இல்லை. தன் மனதின் எந்தப் பகுதியின் ஆழத்துக்குப்போய் இந்த நடிப்பை எடுத்துக் கொண்டு வந்தார் என்று   தெரியவில்லை. அவன் தோற்றுப் போகிற மாதிரி ஒரு சமயம் ஒரு இடத்தில் நடக்கும். உலகத்தில் உள்ள  சோகத்தையெல்லாம் வாரியெடுத்து முகத்தில் கொண்டு வந்து சேர்த்த மாதிரி செய்தார். ஒரே டேக்கில் அந்தக் காட்சி  ஓகே.  படத்துக்காக இல்லை நிஜத்திலும் நெடுமாறன் ராஜாங்கமாக வாழ்ந்தார். சூர்யா நிஜத்திலும் ஹீரோ. அவரோடு இன்னும் சில படங்களில் வேலை பார்க்க வேண்டும். 

அந்தப் பொண்ணு அபர்ணா முரளி... எல்லாரையும் பேச வைத்து விட்டாரே...

அவர் வேறு லெவல். இந்தப் படத்தில் ஓர் இடம் இருக்கிறது. நீங்கள் எல்லாம் ரசித்த இடம்தான். பெண் பார்க்கும் அந்த இடம். அந்த இடத்தை சரியாக செய்தால் போதும், படத்துக்குள்  அவரை கொண்டு வந்து விடலாம் என நினைத்தோம்.  ஆனால், அவர் நினைத்ததை எல்லாம் மாற்றி வேறு உயரத்துக்கு வந்து விட்டார்.  டப்பிங்கில் மதுரைத் தமிழ் பேசி அசத்தி விட்டார். இப்போது  என்னிடம் உலகத்துலேயே எந்த ஆர்ட்டிஸ்ட் உங்களுக்கு பிடிக்கும்.... என கேட்டால்,  அபர்ணா பக்கம்தான் கையைக் காட்டுவேன், எனக்கே நடிப்பை பற்றி சொல்லிக் கொடுத்து விட்டார். இன்னும் பெரிய உயரத்துக்கு அவர் வர வேண்டும். வாழ்த்துகள்!  அது போல் மோகன்பாபு, பரேஷ் ராவல், ஊர்வசி, காளி வெங்கட் இப்படி எல்லோருக்கும் என் நன்றிகள்.  ஜி.வி.பிரகாஷ்,  ஒளிப்பதிவாளர் நிக்கத் இருவரும் எனக்கு பெரும் பலம்.

பெண் இயக்குநர்கள் ரொம்பக் குறைவாக இருப்பதாக எப்போதுமே ஒரு கவலை உண்டு... தமிழ் சினிமா தொடக்க காலத்தில் இருந்தே இது பெரும் கவலை...

பெண்கள் நிறைய வர வேண்டும். அதுதான் என் ஆசையும். கல்யாணத்துக்கு பின் எல்லா பெண்களுக்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறது. குடும்ப பொறுப்பு கூடுதலாக கைக்கு வந்து சேர்கிறது. அதையெல்லாம் பார்த்துவிட்டு திரும்பிப் பார்த்தால் பெண்களுக்கு எதுவுமே இல்லை.  குடும்பம், மக்கள் என சமூகச் சூழல்களின் துரத்தல் ஒரு புறம். சிதைந்து விடாத சினிமா கனவு ஒரு புறம். இந்த இரண்டுக்குமான போராட்டங்களை  வார்த்தைகளில் சொல்லி விட முடியாது. அதை வாழ்ந்துப் பார்த்தால்தான் தெரியும். நினைத்ததில் விடாப்பிடியாக இருந்தால்தான் இங்கே நிலைத்து நிற்க முடியும். முதலில் காசு பணத்தை எல்லாம் மறந்து விட வேண்டும். 

 என்னுடைய முதல் படம் சரியாக போகவில்லை. எதிர்மறை விமர்சனங்களும் அதிகம். சரியான நேரத்துக்கு காத்திருந்தேன். 

ஆறு வருடங்களுக்கு பிறகு "இறுதிச் சுற்று'. அதற்கு பட்ஜெட் ஐந்து கோடி போட்டு வைத்திருந்தேன். யாரு ஐந்து கோடி கொடுப்பார்கள் என்று சொன்னவர்கள்தான் அதிகம்.

அந்த நேரத்தில்தான் மணிரத்னம் சாரை பார்த்தேன்.  அவரிடம் இயலாமையை சொல்லி புலம்பினேன்.  அவர்தான் "உன்னால் முடியும், செய்' என்று  ஊக்கம் கொடுத்தார். நேரடியாக குறிக்கோள் மட்டும் வைத்துக் கொண்டு வந்தேன். அதன் பின் எல்லாமே வெற்றிதான். 

பெரும் பட்ஜெட்... களம்... தனித்து களத்தில் கேப்டனாக இருப்பது பெரும் சவால் அல்லவா...

கொஞ்சம் கொஞ்சமாக துணை இயக்குநர், தயாரிப்புப் பணி என நிறைய வேலைகளைச்  செய்யவேண்டிய சூழல். இப்படித்தான் சினிமாவுக்குள் வந்தேன்.  சினிமாவின் கூட்டுமனமும், கூட்டு உழைப்பும் என்னை பிரமிக்க வைத்தன. பேய் போல் வேலை பார்ப்பார்கள்.  கேமராவுக்குள் ஒரு காட்சி போய்ச் சேருவதற்குள் லைட்மேனிலிருந்து இயக்குநர் வரை ஒரே புள்ளியில் இணைந்து வேலை செய்யும் விதம்  நான் வேறெங்குமே பார்க்காதது. எழுத்து என்பது காட்சியாக மாறும் வித்தையை அருகில் இருந்து காணும்போதுதான், எழுத்து வழியாக நான் எதையெதைப் பார்க்காமல்  விட்டிருக்கிறேன் என்பது புரிய வந்தது. காட்சிக்கு  சில இடங்களை அழுத்தமாகச் சொல்ல வேண்டியிருக்கும். ஆனால், எழுத்தில் அதை  வேகமாகக் கடந்துவிட முடியும். இன்னொன்றும் சினிமாவைப் பற்றிச் சொல்லலாம்... நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களோடு மிக இயல்பாக  வேலை செய்ய முடிந்தது. எல்லாமே புதிதுதான். அனுபவங்கள்தான்.

Tags : மகளிர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT