செல்போனே கதி என தஞ்சம் புகுந்திருக்கும் இளசுகளுக்கு மத்தியில் கிடைத்த நேரத்தை பயனுள்ளதாக்கிக் கொள்ள விரும்பும் மாணவ மாணவிகள் ஒரு சிலரே.. அதில் ஒருவர்தான் சென்னை தரமணியிலுள்ள சீர்மிகு சட்டப்பள்ளியில் இறுதியாண்டில் படிக்கும் மாணவி சௌஜனி ராஜன். சமீபத்தில் தான் தொடங்கிய யூடியூப் சேனல் மூலம் குழந்தைகள், இளம் பெண்களின் உள்ளத்தை கொள்ளைக் கொண்ட இவரை பல்துறை வித்தகி எனலாம். ஆம், சௌஜனி ஃபேஷன் டிசைனரும் கூட, இவரது "பிங்க் இஸ் நாட் அவர் கலர் எனும் ஆங்கில கவிதைத் தொகுப்பும் இவருக்குப் பெயரைக் கொடுத்திருக்கிறது. ஓவியம் வரைவதிலும் கைதேர்ந்தவர் குறிப்பாக, மண்டலா ஓவியங்கள் ஃபேமஸ்.
பல முகங்களை தன்னுள் பொதிந்து வைத்திருக்கும் சௌஜனி கூறுகிறார்:
""சட்டப் படிப்பு எனது வாழ்க்கை. ஃபேஷன் டிசைன் எனது ஆசை, எழுத்து கடவுள் கொடுத்த வரம். சட்டக்கல்லூரியில் தற்போது இறுதியாண்டில் இருக்கிறேன். கல்லூரியில் சேர்ந்தபோதே ஃபேஷன் டிசைனிங் வகுப்பிலும் சேர்ந்தேன். கல்லூரியில் முடிந்ததும், ஃபேஷன் டிசைனிங் வகுப்பிற்கு சென்று விடுவேன். கவிதை எழுதுவது பள்ளிப் பருவத்திலேயே தொடங்கிவிட்டது. இதற்கிடையே நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஓவியம் வரைவதுமாக இருப்பேன்.
பொதுமுடக்கம் அறிவித்ததும் இனி கொஞ்ச காலத்திற்கு ஓய்வாகத்தான் இருக்கப்போகிறோம். அதனால் கிடைத்திருக்கும் நேரத்தை பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அதற்காக யூ டியூப்சேனல் ஒன்றைத் தொடங்கினேன். அந்த சமயத்தில், நான் அறிந்த வரையில் பலரும் பொதுமுடக்கத்தில் ஒருவித மன இறுக்கத்துடனேயே இருப்பதாக உணர்ந்தேன். இதனால் எல்லாரும் மனதை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ளும் வகையில் ஜாலியான யூ டியூப் வீடியோக்களைப் பதிவிட்டு வந்தேன்.
இதில், பொதுமுடக்கத்தில் என்னென்ன செய்யலாம் என முதலில் 15 விஷயங்களை வெளியிட்டேன். அடுத்தபடியாக, அலைபேசி நமது நாள் முழுவதையும் ஆக்கிரமித்திருப்பதை உணர்ந்தேன். இதனால், ஒருநாள் முழுக்க என் மொபைல் போனை தொடாமல் இருந்து பார்த்து, அதன் ப்ளஸ், மைனûஸ பதிவிட்டிருந்தேன்.
அதுபோன்று முகக் கவசத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டபோது, வீட்டில் உள்ள பொருள்களை கொண்டே முகக்கவசம் எப்படி தயாரிப்பது என்பதைப் பதிவிட்டிருந்தேன். இதற்கு "அங்கிள்ஸ் கர்சீப்' என்று பெயரிட்டிருந்தேன். இதற்கு குழந்தைகளிடம் நல்ல வரவேற்பு கிடைக்கத் தொடங்கியது. வெளியே எங்காவது செல்ல நேர்ந்தால், என்னை பார்க்கும் குட்டீஸ் "அங்கிள்ஸ் கர்சீப்' என்று எடுத்து காட்டுகிறார்கள்.
அதுபோன்று ஒரு நாள் அம்மாவை அலுவலகத்தில் விட்டுவிட்டு வருவதற்கு சென்றபோது வனாந்திரமாக காட்சியளித்த சென்னை நகரின் வெறிச்சோடிய சாலைகளைக் கண்டு அதிசயித்து, அதனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வீடியோவைப் பகிர்ந்திருந்தேன். சில நேரங்களில் என் கவிதைகளை வாசித்து வெளியிட்டேன். அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஃபேஷன் குறித்து வெளியிட்ட காணொலியில், அம்மாவின் புடவையை கோட் வடிவில் மாற்றி நவீன உடையாக எப்படி வடிவமைப்பது என்பதைப் பதிவேற்றியிருந்தேன்.
ஃபேஷன் உலகத்தைப் பொருத்தவரை பொதுவாக மெல்லிய உடல் வாகு கொண்டவர்கள்தான் ஃபேஷனாக உடுத்த முடியும், அவர்களுக்குத்தான் நவீன உடைகள் பொருத்தமாக இருக்கும் என்பதெல்லாம் உண்மையில்லை. எப்படிப்பட்ட உடல்வாகு கொண்டவர்களும் பேஷனாக உடையணியலாம் கொஞ்சம் துணிவும், தன்னம்பிக்கையும் இருந்தால் என்பதை உணர்த்தியிருந்தேன். இது இளம்பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை எற்படுத்தியுள்ளது.
முதல் கவிதை புத்தகத்தில் நான் உலகத்தைப் பார்த்து எதையெல்லாம் ரசித்தேனோ, எதற்கெல்லாம் பயந்தேனோ, எதையெல்லாம் பார்த்து ஆச்சரியப்பட்டேனோ அதையெல்லாம் எனது டைரியில் எழுதி வந்தேன்.
இப்படி இரண்டு நாளுக்கு ஒருமுறையாவது ஒரு கவிதையை எழுதிவிடுவேன். அந்த ஆண்டு டைரி முடியும் தறுவாயில் பக்கங்களை புரட்டியபோது நிறைய கவிதைகள் இருந்தன. அப்போதுதான் அந்த கவிதைகளை எல்லாம் புத்தகமாக்க வேண்டும் என்று எண்ணம் வந்து "கலர்லெஸ் பியூட்டி' என்ற தலைப்பில் புத்தகமாக்கினேன்.
அடுத்ததாக "பிங்க் இஸ் நாட் அவர் கலர்' என்னும் தலைப்பில் வெளியிட்டிருந்தேன். இதன் உள்ளடக்கம், பெண்களுக்கு பிங்க் சாயம் பூசப்பட்டு அவர்களுடைய உண்மையான உறுதியும் வலிமையும் மறைக்கப்படுகின்றன. இந்தப் பூசப்பட்ட சாயத்திலிருந்து பெண்கள் முதலில் வெளியே வர வேண்டும். இதில் வருத்தம் என்னவென்றால், பெண்ணியம் பேசும் பெண்களை ஆண்களுக்கு எதிரானவர்களாக சித்திரிக்கப்படுவதுதான். ஆனால் உண்மையில் பெண்ணியம் என்பது ஆண்களுக்கு எதிரானதல்ல, சமுதாயத்தில் ஆணும், பெண்ணும் சமம் என்பதை வலியுறுத்துவதுதான் என்பதைக் கூறியிருந்தேன்.
மண்டலா ஓவியத்தை சுமார் ஆறு ஆண்டுகளாக வரைந்து வருகிறேன். மண்டலா கலை என்பது ஒருவகையான தியானம் போன்றது. ஒரு கருப்பொருளை மனதில் நினைத்துக் கொண்டு இந்த ஓவியத்தை வரையத் தொடங்கினால் நாம் எத்தனை சோகத்தில் இருந்தாலும், வரைந்து முடிக்கும்போது மனது சாந்தமாகவும், உற்சாகமாகவும் ஆகிவிடும்.
நான் பொதுவாக இரண்டு நாள்களுக்கு ஓர் ஓவியத்தை வரைவேன். இதைப் பெரும்பாலும் காலை பொழுதில்தான் வரைவேன். இதனால் அந்த நாள் முழுக்க நான் உற்சாகமாக இருப்பதாக உணர்ந்தேன். இதனால், இந்த ஓவியத்தை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுத்தால் மனச் சோர்வாக, வருத்தமாக இருப்பவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று தோன்றியது. எனவே, மண்டலா ஓவியம் வரைவது பற்றியும் வீடியோவாகப் பகிர்ந்திருந்தேன். அதற்கு நல்ல வரவேற்பிருந்தது.
பலரும் ஓவியத்தை முறையாக வரைய கற்றுத் தரும்படி கேட்டிருந்தனர். எனவே, இதற்காகவே, ஆன் லைன் வகுப்பு தொடங்கியுள்ளேன். இதில் இரண்டு நிலைகள் உள்ளன. பேஸிக் தெரிந்து வைத்திருப்பவர்கள் நேரடியாக 2-ஆவது நிலைக்குச் செல்லலாம். அல்லது இரண்டு நிலையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினாலும் கற்றுக் கொள்ளலாம். கற்றுக் கொண்டு முடித்தாலும், அதோடு விட்டுவிடாமல், எங்களுக்கென்று குரூப் ஒன்றும் தொடங்கியிருக்கிறோம். அதில் அவர்கள் தொடர்பில் இருந்து பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பும் ஏற்படுத்தியுள்ளோம்'' எனும் சௌஜனிக்கு சமூகத்திற்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்பதே லட்சியமாம்.