உத்தரகண்ட் மாநிலத்தின் ராம்பூர் கிராமத்தில் வீடுகளுக்கு மின்சார வசதி இல்லை. இரவு நேரங்களில் வீடுகளில் மண்ணெண்ணெய் விளக்குதான் கண்சிமிட்டும். போக்குவரத்து சாலை வசதிகள் ஒன்றும் இல்லாத ஊர். அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட கிராமத்திற்கு வர முடியாது.
பிரியங்கா காலையில் பள்ளி சென்று வீடு திரும்பியதும் , புத்தகப் பையை வீட்டில் வைத்துவிட்டு வயலில் வேலை பார்க்கும் அப்பாவுக்கு உதவியாக வேலை செய்ய போய்விடுவார். பத்து வரை பிரியங்கா படித்தது மண்ணெண்ணெய் விளக்கின் வெளிச்சத்தில். நல்ல மதிப்பெண்கள் வாங்கியதால் "பிரியங்காவை மேலே படிக்க வை' என்று ஆசிரியர்கள் நிர்பந்தம் செய்ததால் உயர்நிலைப் படிப்பிற்காக பக்கத்துப் பெரிய ஊரான கோபேஸ்வருக்குச் சென்றதும் தனது படிப்புச் செலவுக்காக மாலை வேளைகளில் குழந்தைகளுக்கு பிரியங்கா பாடம் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார்.
""கோபேஸ்வருக்குச் சென்ற பிறகுதான் மின் விளக்கின் வெளிச்சத்தில் பாட நூல்களை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்கே பி ஏ வரை படித்தேன். அதிலும் நல்ல மதிப்பெண்கள் பெற்றதால் டெஹ்ராடூனுக்குச் சென்றேன். அங்கே சட்டக் கல்லூரியில் சேர்ந்தேன். சட்டப்படிப்பை முடித்து சொந்த ஊர் திரும்பியதும் மாணவிகளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்தேன். அப்பாவுக்கு உதவியாக வயலிலும் வேலை பார்ப்பேன். வீடும் களிமண்ணால் கட்டப்பட்ட வீடுதான். வீட்டில் ஏழு பேர் வசிக்கிறோம். எனக்கு 28 வயதாகிறது. ஐஏஎஸ் தேர்வில் முதல் முயற்சியில் தேர்வு பெற்றுள்ளேன். எனக்கு ஐஏஎஸ் தரப்பட்டியலில் 257 -ஆவது இடம் கிடைத்துள்ளது.
கிராமத்தின் வசதிக் குறைவுதான் எனக்கு பலமாக உரமாக அமைந்தது. போக்குவரத்து வசதி இல்லாமல் எனது கிராம மக்கள் கஷ்டப்படுகிறார்கள். பஸ் பிடிக்க கால் நடையாக பல கி.மீ. நடக்க வேண்டும். மருத்துவ வசதி இல்லாமல்... ஆம்புலன்ஸ் கிடைக்காமல் பலர் கிராமத்தில் இறந்துள்ளனர். நோயாளியைப் பல கி.மீ. தூரம் தூக்கிச் செல்லும் போதே இறந்து விடுவார்கள். இவற்றை நேரில் பல முறை பார்த்திருக்கிறேன். அழுதிருக்கிறேன். சில சிக்கலான, துயரமான தருணங்களில் தோல்வியை ஒப்புக் கொண்டு அப்படியே விட்டு விடுவோமா என்று தோன்றும். என்றாலும் வென்றே தீர வேண்டும் என்று மனம் சோகம், விரக்தியின் பக்கம் போவதில் இருந்து மீட்பேன். தலைவிதியை மாற்ற, ஐஏஎஸ் தேர்வுக்குத் தயாரானேன். இப்போது ஐஏஎஸ் தேர்வு பெற்றிருப்பதால் எனது கிராம மக்களுக்கு எல்லா வசதிகளும் கிடைக்க என்னால் ஆன நடவடிக்கைகளை எடுப்பேன்.. உதவுவேன்'' என்கிறார் பிரியங்கா.