பெண்களால் முடியாதது எதுவுமில்லை!

பெரும் அரசியல் தலைவரின் மகளாகப் பிறந்து மாற்று சிந்தனையைஏற்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து படிப்படியாகத் தனது முயற்சியால் முன்னேறி மாநிலத் தலைவராகப் பரிணமித்தவர் தமிழிசை செளந்தரராஜன்
பெண்களால் முடியாதது எதுவுமில்லை!

பெரும் அரசியல் தலைவரின் மகளாகப் பிறந்து மாற்று சிந்தனையைஏற்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து படிப்படியாகத் தனது முயற்சியால் முன்னேறி மாநிலத் தலைவராகப் பரிணமித்தவர் தமிழிசை செளந்தரராஜன். இன்று தெலங்கானாவின் மேதகு ஆளுநராக உயர்ந்திருக்கிறார். முன்வைக்கும் அத்தனை கேள்விகளுக்கும் சிரிப்பு முலாம் பூசிய சொற்களால் பதில் தருகிறார்...
ஒரு பெண் ஆளுநராக எப்படி உணர்கிறீர்கள் ?
மகிழ்ச்சி, நெகிழ்ச்சி இரண்டுமே ஒன்று கலந்திருக்கிறது. பெண் ஆளுமைத் தன்மை நிறைந்தவள் என்பதை ஒவ்வொரு வீட்டில் இருக்கும் பெண்ணும் நிரூபித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அது அம்மா, அக்கா, தங்கை, அத்தை, பாட்டி, மனைவி என எந்த உறவாய் இருந்தாலும் அவள் குடும்பத்தை ஆள்பவளாக இருக்கிறாள். பாரதிதாசன் சொல்லுவாரே "எங்கள் வீட்டில் பிணி இல்லை பசி இல்லை ஏனெனில் பெண்கள் எங்கள் இல்லத்தை ஆளுகிறார்கள்' என்று. இல்லத்தைப் பெண் ஆளும் பொழுது இல்லம் எப்படி பசியின்றி பிணியின்றி மகிழ்ச்சியோடு உயர்கிறதோ அப்படி பெண் மாநிலத்தை ஆளும் பொழுது தேசமும் அத்தகைய உயர்வை அடையும் என்பார். அதைத்தான் சொல்ல விரும்புகிறேன். ஆளும் பண்பு கொண்டவள்தான் பெண்.

மகள் உச்சம் தொடுவதில் கிருஷ்ணகுமாரி என்ற எளிய அன்னையின் பங்கு என்ன? 
அறிவை அப்பா குமரி அனந்தனிடம் பெற்றேன்; அன்பை அம்மாவிடம் பெற்றேன் என்பார்களே அது தான் நிஜம். பேச்சாற்றல் அரசியலில் எதையும் எதிர்கொள்ளும் தன்மை இவற்றையெல்லாம் என்னுடைய தந்தையிடமிருந்து நான் பெற்றிருக்கிறேன். கண்ணியமாக உடுத்திக் கொள்வது கட்டுப்பாட்டோடு பெண்மையை விட்டுக் கொடுக்காமல் இருப்பது குடும்பப் பாங்கான இயல்புகளை எப்போதும் பின்பற்றுவது ஒழுக்கத்தோடு வாழ்வது கட்டுப் பெட்டித்தனமாக இல்லாமல் கட்டற்றும் போய்விடாமல் நேர்கொண்ட பார்வையோடு வாழ்வதற்கான அம்சங்களை கற்றுக்கொண்டது என்னுடைய தாயாரிடம் இருந்துதான். தமிழிசை என்னும் சாதாரண பெண் இந்த இடத்தை அடைவதற்கு இந்த இயல்புகள் மிகப்பெரும் காரணம்.
என்னுடைய அம்மா கண்டிப்போடு அன்பும் நிறைந்தவர். தியாகமே வடிவானவர். ஐந்து குழந்தைகளை வளர்ப்பதே தன் வாழ்வின் லட்சியமாக கொண்டவர். அவரது உலகம் குடும்பமும் குழந்தைகளும் அவர்களின் வளர்ச்சியும் மட்டுமே. மிகப்பெரும் குடும்பத்தில் பிறந்து ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும் ஒரு முறை பாராளுமன்ற உறுப்பினராகவும் அரசியல் கட்சியின் போற்றத்தக்க ஆளுமைகளில் ஒருவராக வாழ்ந்தவரின் மனைவி என்ற எந்த அடையாளத்தையும் தன் தோள்களில் எடுத்துக் கொள்ளாமல் மிக எளிமையாகத் தன் வாழ்வை அமைத்துக் கொண்டவர். இப்படித்தான் வாழவேண்டும் என்ற கொள்கைப் பிடிப்போடு சற்றும் தளராத மனவுறுதியும் கொண்டவர். என்னுடைய தாயார் கிருஷ்ணகுமாரி பிள்ளைகள் எல்லோரையும் நன்கு படிக்க வைத்து நல்ல நிலையில் வாழ வைத்திருப்பவர். ஒரு குடும்பத் தலைவி ஒரு நாட்டிற்கு, அரசியல் கட்சிக்குத் தலைவியாகப் பரிணமிக்க முடியும் என்பதையே நான் என்னுடைய தாயாரிடம் இருந்துதான் கற்றுக் கொண்டேன். அத்தகைய உயர் பண்புகள் மிக்கவர்.

20 ஆண்டுகால அரசியல்வாதியாக அரசியலில் பெண்கள் பற்றி? 
நாட்டிலே 50% பெண்கள் இருக்கிறோம். ஆனால் இந்த விகிதத்திற்கு சமமாக அரசியல் களத்தில் பெண்கள் இருக்கிறார்களா என்று பார்த்தால் இல்லை. சிலர் ஆர்வத்தோடு வருகிறார்கள். கடினமான பணி என்பதால் இறுதிவரை போராட முடியாமல் தளர்ந்து பின்வாங்கி விடுகிறார்கள். அப்படியில்லாமல் தொடர்ந்து மன உறுதியோடு பெண்கள் அரசியல் களத்தில் பணியாற்ற முன்வர வேண்டும். அப்படி வரும்பொழுது தேசத்தின் வளர்ச்சி இன்னமும் மேம்படும். பெண்கள் பொது வாழ்க்கையில் இருப்பது சாதாரணமானதல்ல அதற்காக சாத்தியமற்றதுமல்ல. குடும்பப் பொறுப்புகள் நிச்சயமாக மந்திரி முதல் மனைவி வரை அனைவருக்கும் இருக்கத்தான் செய்கின்றன. அதைத் தாண்டியும் பொது வாழ்க்கையில் நம்மால் தடம் பதிக்க முடியும்.
பொது வாழ்க்கைக்கான முழுமையான அர்ப்பணிப்புக்கு நீங்கள் தந்த விலை என்ன?
19 ஆண்டுகால போராட்டம். இது இருபதாவது ஆண்டு. அரசியல் வாழ்க்கை என்பது எளிதானதாக இருக்கவில்லை. குடும்பம் முதல் பல நிலைகளிலும் தொடர்ந்து மன வருத்தங்களை எதிர் கொண்டிருக்கிறேன். தர்ம சங்கடங்களைக் கடந்திருக்கிறேன். எதிர்ப்பைத் தாங்கி காயப்பட்டு பின் காய்த்துப் போன நிலையில் எல்லாவற்றையும் ஏற்கும் மனப் பக்குவத்தை பொது வாழ்க்கை எனக்கு கற்றுக்கொடுத்திருக்கிறது.

தனிநபர் தாக்குதல்களை எதிர்கொள்வதில் இவ்வளவு பொறுமையை எப்படி கடைப்பிடிக்கிறீர்கள்? 
இயல்பிலேயே நான் பொறுமை மிக்கவள் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. ஆனால் தொடர்ந்து என்னை என் உயரம், நிறம், தலைமுடி வரை எல்லாவற்றையும் விமர்சித்துக் கொண்டே இருந்தார்கள். அநாகரிக தாக்குதல்கள் என் மீது தொடர்ந்து தொடுக்கப்பட்டு வந்தன. எதற்காக இப்படிச் செய்கிறார்கள்? முன் நாள்களில் அநாகரிக தனிநபர் தாக்குதலுக்குப் பொதுக் கூட்டங்களைப் பயன்படுத்துவார்கள். அடிதடி இன்னும் ஏதேதோ செயல்கள் நடந்தேறும். ஆனால் இப்போது அறிவியல் யுகத்தில் சமூக வலைத்தளங்களில் அநாகரிகமாக நடந்து கொள்கிறார்கள். கல் எறிவதைப் போல இப்போது சொல் எறிவது. இவர்களின் நோக்கம் என்ன? ஒரு பெண் வளர்வதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஒரு பெண் முடங்கிப்போய் விடுவதற்கான அத்தனை செயல்களையும் சொற்களையும் முன்னெடுக்கிறார்கள். நான் முடங்கிப் போய் விட்டால் அவர்கள் ஜெயித்தவர்கள் ஆகிவிடுவார்கள். நான் தோல்வி கண்டவள் ஆகிவிடுவேன். அதை ஒருபோதும் நான் அனுமதிக்க முடியாது. இப்போதும் சொல்கிறேன் எனக்கெதிராக "மீம்ஸ்' போட்டவர்கள் தோற்றே போய்விட்டார்கள். நான் அவற்றைக் கடந்து வேறு ஒரு தளத்திற்கு முன்னேறி விட்டேன். எனது தன்னம்பிக்கையைக் குலைத்து என்னை முடங்கிப் போகச் செய்யும் எந்த செயலையும் நான் அனுமதிப்பதில்லை. இந்தப் புரிதல்தான் என் பொறுமைக்குக் காரணம்.

போராட்டம் நிறைந்த அரசியல் உலகில் ஒரு பெண் தலைவராக உங்களை நீங்கள் எப்படி வடிவமைத்துக் கொண்டீர்கள்? 
எனக்குக் கொடுத்த வேலையை முழு ஈடுபாட்டோடு செய்து கொண்டே இருந்தேன். மிகச் சாதாரணமான பெண் மனதில் எந்த கிரீடத்தையும் ஏற்றிக்கொள்ளாமல் வெற்றி தோல்வி எது பற்றியும் கவலை இன்றி என் தலைமை என்ன கட்டளை பிறப்பிக்கிறதோ அதை முழுமையாகப் பின்பற்றினேன். படித்த செய்திகள் கண்ட அனுபவங்கள் சிறு வயது முதல் என் தந்தையாரோடு இருந்து கற்றுக் கொண்ட அரசியல் பாடம் இவை எல்லாமும் என்னை உருவாக்கின. 
எல்லாவற்றுக்கும் மேலாக இப்படித் தான் நாம் இருக்க வேண்டும் என்று இல்லாமல் பல அரசியல் தலைவர்களிடமும் காணும் நல்ல இயல்புகளைப் படித்துக் கொள்வதற்கும் அதனைப் பின்பற்றுவதற்கும் தொடர்ந்து முயன்றிருக்கிறேன். துணிச்சலில் ஜெயலலிதா போலவும், தமிழ் ஆளுமையில் கலைஞர் போலவும், சமூக அக்கறையில் ராமதாஸ் போலவும், மக்களோடு பழகுவதில் கேப்டன் போலவும், பேச்சாற்றலில் வைகோ போலவும் அவர்களின் நல்ல தன்மைகளை எடுத்துக் கொள்ளவேண்டும் என்று இளம் வயதிலேயே நினைத்ததுண்டு.
பெரும் ஆளுமை ஆளுநராக உருவானது எப்படி? 
நான் மிகப்பெரும் ஆளுமை அல்ல. புடவைக்கும் பூவுக்கும் ஜிமிக்கிக்கும் என எல்லாவற்றுக்கும் ஆசைப்படும் சாதாரண பெண் தான். அதே நேரத்தில் நான் எங்கே சென்றடைய வேண்டும் என்ற இலக்கை மிகத் தெளிவாக வைத்துக் கொள்கிறேன். உடன் இருப்பவர்களுக்கு சகோதரி, உங்கள் பக்கத்து வீட்டுப்பெண் அப்படித்தான் என்னை நான் நினைத்துக் கொள்கிறேன். எப்போதும் இந்த எளிமையை கடைப்பிடிக்க விரும்புகிறேன். எனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை உள்ளார்ந்த ஆர்வத்தோடு செய்து முடிக்க வேண்டும் என்று மெனக்கெடுகிறேன். நல்ல இயல்புகளை அப்படியே வளர்க்க வேண்டும் என்பதில் உறுதியோடு இருக்கிறேன். இது என்னை பெரிய ஆளுமையாகக் காட்டலாம். ஆனால் என்னைப் பொருத்தவரை நான் மிகச் சாதாரணப் பெண்ணாக தான் இப்போதும் இருக்கிறேன்.
தமிழிசையின் இயல்பான முகம் எது?
இந்தப் பதவியில் இப்படி இருக்க வேண்டும், இந்த வேலைக்கு இப்படித்தான் முகத்தை வைத்துக்கொள்ள வேண்டும் என்று எந்த ஒரு இயல்புக்கு மாறான தன்மையையும் நான் ஏற்பதில்லை. பூக்களைச் சூடிக் கொள்வது எனக்குப் பிடிக்கும் அதை நான் அன்றாடம் செய்கிறேன். வண்ண வண்ண உடைகள் பிடிக்கும் அதை ஒருபோதும் மாற்றிக் கொண்டதில்லை. அரசியல்வாதி இப்படி உடுத்திக் கொள்ள வேண்டும் இப்படிப் பிறரிடம் பழகுவதில் நெறிமுறைகளை வைத்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் அறிவுரைகள் கூட சிலர் வழங்கியிருக்கிறார்கள். ஆனால் நான் வீட்டில் என் குடும்பத்தாரிடம் எப்படி இருக்கிறேனோ அப்படியே கட்சிக்காரர்களிடமும், ஒரு குடும்பத்தில் சகோதரி போலவே நான் என்னை சுற்றி இருக்கும் தொண்டர்களோடு பழகியிருக்கிறேன். இன்னார்க்கு இப்படி என்று எதையும் மாற்றிக் கொள்வதில்லை நான் நானாகவே இருக்கிறேன். நான் விரும்பிய படியே இருக்கிறேன். விரும்பிய இலக்கை நோக்கியும் பயணிக்கிறேன். இயல்பாய் வேலைகளை மட்டும் தொடர்ந்து செய்து கொண்டே இருந்தாலே போதும் சிகரத்தை அடைந்து விடலாம். அப்படித்தான் இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன். 
சிறு வயது முதல் உங்களுக்குள் இருக்கும் இந்தக் கனலுக்கு எப்படித் தீனி போட்டீர்கள்? 
எந்த வயதிலும் நான் சும்மா இருந்ததில்லை. மருத்துவராக உழைத்தேன். அடுத்து குடும்பம் அதிலே என் கடமைகளை மிகத் தெளிவாக செய்திருக்கிறேன். எந்த சமரசமும் இன்றி அடுத்து அடுத்து என்று ஏதோ ஒன்றைக் கற்றுக்கொள்வதில் ஓடிக் கொண்டே இருந்திருக்கிறேன். அதனால்தான் நீர்த்துப் போகாமல் எனக்குள் அந்தக் கனல் தொடர்ந்து ஒளிர்ந்து கொண்டே இருந்தது. ஓடிக்கொண்டே இருக்கிறேன் என்பதற்காக நான் எதையும் ரசிப்பது இல்லையா?அப்படி இல்லை என் பாதையில் எதிர்ப்படும் காட்சிகளை, அதிகாலையில் பூத்த மலரை ரசிப்பேன். பயணம் என்பது மனதிற்கு நெருக்கமானது. சேருமிடம் மட்டுமல்ல பயணமும் முக்கியமானது. பயணத்தில் வரும் அத்தனையையும் ரசிக்கவும் காணவும் தவறியதில்லை. இவையே என்னை எப்போதும் உயிர்ப்போடு இருக்கச் செய்கின்றன.
அரசியல்வாதியாக பார்த்தாயிற்று, ஆளுநராக தமிழிசையை இப்போது பார்க்கிறோம்; மருத்துவராக தமிழிசையை மீண்டும் பார்க்க முடியுமா?
நிச்சயமாக பார்க்க முடியும். தொழில் ரீதியாக மருத்துவராக நான் பணியாற்றவில்லை என்றாலும் சேவை ரீதியாக என் மருத்துவப் பணியைத் தொடர்ந்து கொண்டுதான் இருப்பேன். இத்தனை ஆண்டுகளிலும் கூட இயன்ற அளவுக்கு என்னுடைய மருத்துவ சேவையை தொடர்ந்து கொண்டுதான் இருந்திருக்கிறேன். இப்போது கூட தெலுங்கானாவில் டெங்கு பாதிப்பு அதிக அளவில் இருக்கிறது. அதனை உடனே சரி செய்வதற்கான முயற்சிகளை முன்னெடுக்க நினைத்திருக்கிறேன்.
பரபரப்பான அரசியல் தலைவராக உங்களை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருந்தது. இனி ஆளுநர் அதற்கே உரிய நெறிமுறைகள் இருக்கின்றன. இந்த மாற்றத்திற்கு தயாராகி விட்டீர்களா?
என்னைப் பொருத்தவரை எது எனக்குக் கிடைக்கிறதோ அதற்கு உடனே தயாராகி விடுவேன். வேட்பாளராக வேண்டுமா, மாநில தலைமை ஆகவேண்டுமா, மருத்துவராக மருத்துவப் பணியா எது வந்த போதும் உடனுக்குடன் அதற்கு ஏற்ப செயல்படத் தொடங்குவது இயல்பாகவே எனக்கு இருக்கிறது. ஒரு மருத்துவராக எந்த நேரத்திலும் அவசர பணியை எடுத்து செய்வதில் பயிற்சியும் இருக்கிறது. அதனால் எனக்கு மூச்சு விட்டுக் கொள்வதற்கான நேரமும் கூடத் தேவையில்லை உடனடியாகவே என் பொறுப்புகளை நான் கவனிக்கத் தொடங்கிவிடுவேன். 
உங்கள் வெற்றியின் ரகசியம்? 
மகிழ்ச்சியோடு ஒரு வேலையைச் செய்வது. தேர்ந்தெடுத்த பாதையில் உறுதியாக இருப்பது. வாழ்க்கை வாழ்வதற்கு என்ற நம்பிக்கையோடு பயணிப்பது. 
தமிழகப் பெண்களுக்கு உங்கள் செய்தி?
ஒரு தமிழ் சகோதரியாகவே நான் தெலுங்கானா செல்கிறேன். இங்கே அக்கா என்றார்கள் அங்கே அக்கையா அவ்வளவுதான். கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் இந்தக் கவிதை தான் எனக்கு உந்துசக்தி. அதையே தான் என் தமிழ் சகோதரிகளுக்கும் நான் சொல்கிறேன். "வேலிக்கு வெளியே தலையை நீட்டும் எனது கிளைகளை வெட்டும் தோட்டக்காரா.. பூமிக்கடியில் நழுவும் என் வேர்களை நீ என்ன செய்து விடுவாய்'" 
பெண்களை எல்லா இடத்திலும் தடுப்பதற்கு முயற்சிகள் நடந்து கொண்டே தான் இருக்கும். ஆனால் வேகமாக நாம் ஆழப்பதிந்து விட்டால் நம்மை எவரும் எதுவும் செய்துவிட முடியாது. நம்மால் முடியாதது எதுவுமே இல்லை. நம்பிக்கையோடு இருங்கள். அழுகையை தூக்கி எறியுங்கள். பிரச்னைகள் வந்து கொண்டே தான் இருக்கும் அதை எதிர்கொள்வது தான் வாழ்க்கை. 
எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் ஒழுக்கத்தைப் பின்பற்றி பொதுவாழ்க்கைக்கு வாருங்கள். வாய்ப்புகள் நம் கதவை தட்டுவது இல்லை நாம்தான் நம் முயற்சியால் அவற்றை வென்றெடுக்க வேண்டும். எது வந்த போதும் தளராதீர்கள் அவமானங்களை தொடர்ந்து சந்திக்க வேண்டி வரும் விட்டுவிடாதீர்கள். அவமானப்படுத்துவோர் தோல்வி காண அதைத் தாண்டி பெண்கள் வெற்றி காண்போம். 
- கோதை ஜோதிலட்சுமி
படங்கள் : பி.ராதாகிருஷ்ணன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com