புதிய சிந்தனை... பொருளாதார உயர்வு...

உலகம் முழுவதும் பல வகையான கழிவுகள் குவிந்த வண்ணம் உள்ளன. கழிவுப் பொருள்களை மேலாண்மை செய்ய முடியாமல் உலக நாடுகள் தவித்து வருகினறன.
புதிய சிந்தனை... பொருளாதார உயர்வு...

உலகம் முழுவதும் பல வகையான கழிவுகள் குவிந்த வண்ணம் உள்ளன. கழிவுப் பொருள்களை மேலாண்மை செய்ய முடியாமல் உலக நாடுகள் தவித்து வருகினறன. மின்னணுக் கழிவுகள், ஆர்கானிக் கழிவுகள்,மருத்துவ கழிவுகள், மட்கும் கழிவுகள், மட்காத கழிவுகள் என வகை,வகையான கழிவுகள் நாள் தோறும் உருவாகி உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன.

பல நிறுவனங்கள் இந்த கழிவுகளை பயன்படுத்தி வேறு பொருள்களை உற்பத்தி செய்கின்றன. சில பகுதிகளில் கழிவு பிளாஸ்டிக் கூழ்களைக் கொண்டு சாலைகள் அமைக்கப்படுகின்றன. இருந்தாலும், வேஸ்ட் மேனேஜ்மெண்ட் என்பது இன்னும் தேவையான விஷயமாகவே இருந்து வருகிறது.

இதற்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஆங்காங்கே கழிவுப் பொருள்களை பயன்படுத்தி மக்களுக்கு தேவையான பொருள்களை உருவாக்கும் சிறு,சிறு தொழில் கூடங்களும் இந்தியா முழுவதும் பரவலாக இருந்து வருகிறது.

தேவையில்லை என வீசப்படும் பொருள்களைக் கொண்டு வித்தியாசமாக புதிய பொருள்களை தயாரித்து மார்க்கெட் செய்தால் என்ன என்று தோன்றியது ஒடிஸாவின் புவனேஷ்வரை சேர்ந்த பெண் ஒருவருக்கு.. அந்த யோசனையை துணிச்சலாக செயல்படுத்தி உழைத்த அவருக்கு பலன் கைமேல் கிடைத்து வருகிறது.

வெற்றிக்காக வித்தியாசமாக யோசித்த அவர்தான் பெனோரிட்டா தேஷ் (Benorita Dash). துணி தைக்கும் நிறுவனங்கள் வெட்டித் தள்ளி வெளியேற்றிய கழிவுத் துணிகளை பயன்படுத்தி புதிய வடிவிலான பைகள், வித்தியாசமான உடைகள், ஆபரணங்கள் உள்ளிட்டவற்றை தயாரித்து தள்ளுகிறார் பெனோரிட்டா. இவர் தயாரிக்கும் பொருள்களை விற்பதற்காக புவனேஷ்வரில் கடை ஒன்றையும் நடத்தி வருகிறார்.

28 வயதே ஆன அவருக்கு சிறு வயதிலேயே படுக்கை விரிப்புகளில் டிசைன் செய்வது பிடித்தமான விஷயமாக இருந்துள்ளது. பிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதிப்புகளை புரிந்து கொண்டதிலிருந்து பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்த்து வந்த அவர், மண்ணால் செய்யப்பட்ட பொருள்கள், கண்ணாடியால் செய்யப்பட்ட பொருள்களை மட்டுமே பயன்படுத்த தொடங்கியிருக்கிறார். தனக்கான உடைகளை தைப்பதற்கு கூட சிறிய அளவு துணிகளை வாங்கி ஒட்டுப் போட்டு வித்தியாசமான வடிவமைப்பில் உடைகளை உருவாக்குவேன். ஏனென்றால் துணி வீணாகக் கூடாது என்பதற்காகத்தான். உணவிலும் தேவையான அளவு உணவைத்தான் வாங்கி சாப்பிடுவேன் என்கிறார் தேஷ்.

ஒருமுறை பழைய கழிவுத்துணிகளின் குப்பையால் நாய்க்குட்டி ஒன்று மூச்சுத் திணறிக் கொண்டிருப்பதை பார்த்த அவருக்கு இந்த துணிக் கழிவுகளை பயன்படுத்தி வித்தியாசமான பொருள்களை செய்து விற்பனை செய்தால் என்ன என்று தோன்றியது. அன்று தொடங்கியதுதான் இந்த தொழில்.

துண்டு, துண்டாக சேகரிக்கப்பட்ட துணிகளை ஒன்றாகத் தைத்து பல்வேறு வகையான புதிய உடைகளை உருவாக்கும் ஒரு ஒட்டுத் தொழில்நுட்பம் அவருக்கு வருவாய் ஈட்டித் தர ஆரம்பித்துள்ளது. நாளாக,நாளாக வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

புதுப்பது டிசைனிங் தொடர்பான ஆய்வறிக்கைக்காக பல்வேறு இடங்களுக்கு சென்ற அவர் ஏராளமான நெசவாளர்களை சந்தித்துப் பேசினார். அவர்கள் கைத்தறித் தொழிலை கைவிடுவதற்கான காரணங்கள். மார்க்கெட்டிங் பிரச்னைகள் குறித்து தெரிந்து கொண்ட அவர், 2017-இல் தனது பிராண்டான லேடிபெனை (Ladyben), மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சகத்தின் கீழ் பதிவுசெய்தார், தொடர்ந்து கைத்தறி நெசவாளர்களின் பொருள்களையும் சந்தைப்படுத்தினார்.

உலகில் இரண்டாவது மிகப்பெரிய மாசினை உருவாக்கும் தொழில் பேஷன் தொழில்தான் என கூறும் அவர் கார்மென்ட், பொட்டிக்ஸ், டெய்லரிங் கடைகளுக்கு சென்று வீணாக வெட்டி எரியப்பட்ட துணிகளை சேகரிக்க தொடங்கியிருக்கிறார்.கழிவுகளை வைத்து என்ன செய்யப்போகிறாய் என அவர்கள் கேட்டார்கள். இந்த கழிவுதான் என் எதிர்காலத்திற்கான நம்பிக்கை என நான் அவர்களிடம் கூறி வெட்டி எரியப்பட்ட துணி மூட்டைகளை எடுத்து வருவேன்.

இருந்தாலும், துண்டான துணிகளை ஒட்டி தைப்பதற்கான டெய்லர்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது,  பொதுவாகவே ஆல்டரேஷன் செய்யவே டெய்லர்கள் தயங்குவார்கள். அப்படி இருக்கும் போது, துண்டான துணிகளை ஒட்டி புதிய வடிவமைப்புடன் தைப்பதற்கான டெய்லர்கள் கிடைப்பது அரிதாக இருந்தது. ஆனாலும் தனியாகவே தொழிலை தொடங்கினேன். என்னுடைய வித்தியாசமான நோக்கத்தை பார்த்த டெய்லர்கள் சிலர் என்னுடன் இணைந்தார்கள். சில மெஷின்களையும்,டெய்லர்களையும் கொண்டு தற்போது, உடைகள் உள்ளிட்ட பொருள்கள் செய்யும் வேலை நடந்து வருகிறது என்கிறார்.

அண்மையில் கொல்கத்தாவில் இவர் நடத்திய கண்காட்சியை ஏராளமானோர் பார்வையிட்டு சென்றுள்ளனர். புதிய சிந்தனையால், கழிவுத் துணிகளுக்கு மறு அவதாரம் கொடுத்து பொருளாதாரத்தில் ஏற்றம் கண்டு வரும் பெனோரிட்டா தேஷின் உழைப்பு,  புதிய சிந்தனை கொண்ட இளைஞர்களுக்கு பாடம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com