மூன்று தங்கம்: மூன்று அனுபவங்கள்!

"BWF உலக சாம்பியன் ஆகிவிட்டேன் என்பதை நம்ப எனக்கு அதிக நேரம் தேவைப்பட்டது.
மூன்று தங்கம்: மூன்று அனுபவங்கள்!

"BWF உலக சாம்பியன் ஆகிவிட்டேன் என்பதை நம்ப எனக்கு அதிக நேரம் தேவைப்பட்டது. இறுதி போட்டி நாளுக்கு முன் இரவில் என்னால் தூங்க முடியவில்லை. முந்தைய போட்டிகள்.. அதில் கிடைத்த புள்ளிகள்.. எல்லாம் என் முன் வந்து போயின. இறுதி போட்டியில் திறமையாக விளையாட வேண்டும். எனக்குள் சொல்லிக் கொண்டேன். இந்த வெற்றிக்காக நீண்டநாள் காத்துக்கொண்டிருந்தேன். 
வெற்றியின் மகிழ்ச்சியை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகள் இல்லை. இறுதி போட்டியில் எல்லாம் நல்லபடியாக முடிந்தது. அந்த மன நிறைவில்.. மகிழ்ச்சியில் ரொம்ப நேரத்திற்கு பசியே எடுக்கவில்லை. அடுத்ததாக ஒலிம்பிக்ஸ் 2020 நெருங்குகிறது. அதில் தகுதி பெற கடுமையாக உழைக்க வேண்டும். இந்த வெற்றிக்குக் காரணம் பயிற்சியாளர்கள் கிம் ஜி ஹியுன், கோபி சந்த் மற்றும் எனது பெற்றோர்."

இவை, சுவிட்சர்லாந்தின் பஸில் நகரில் உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டன் தொடர் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டியில், உலகின் நான்காம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நúஸாமி ஒகுஹராவை தர வரிசையில் ஐந்தாம் இடத்திலிருக்கும் பி வி சிந்து ஆட்டம் தொடங்கிய 38 நிமிடங்களில் தோற்கடித்த போது கூறிய வார்த்தைகள். 
சிந்து முக்கியத்துவம் கொடுத்திருக்கும் கிம் ஜி ஹியுன் யார் ? இதுவரை கேள்விப்படாத பெயராக இருக்கிறதே என்று தோன்றும்.
சிந்துவின் வெற்றிக்கு மூன்று மாதத்திற்கு முன்வரை பின்னணியில் இருந்தவர்கள் பயிற்சியாளர் கோபி சந்த் மற்றும் சிந்துவின் பெற்றோர் ரமணா -விஜயா. இந்தப் பட்டியலில் இப்போது இடம் பிடித்திருப்பவர் தென் கொரியாவைச் சேர்ந்த இறகுப் பந்து பயிற்சியாளர் கிம் ஜி ஹியுன். பயிற்சியாளராக இருபது ஆண்டுகள் அனுபவம் கிம்மிற்குச் சொந்தம். கிம் சர்வதேச ஆட்டக்காரராகவும் இருந்திருக்கிறார். கிம்தான் சிந்துவின் வீச்சில் அதிரடி மாற்றத்தைக் கொண்டு வந்திருப்பவர். அவர் செய்த மாற்றம் எட்டாக் கனியாக இருந்த தங்கப் பதக்கத்தை சிந்துவிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் குறைந்த நாட்களில், கிம் சிந்துவின் மூன்றாம் "கை'யாகவும், மூன்றாம் சக்தியாகவும் மாறியுள்ளார்.
கிம்மை தென் கொரியாவிலிருந்து தனது பயிற்சி நிலையத்திற்கு சென்ற மார்ச் மாதம் அழைத்து வந்தவர் கோபி சந்த். "பயிற்சி நிலையத்தில் நிறைய ஆட்டக்காரர்கள் பயிற்சிக்கு வருவதால் எனது நேரத்தைப் பங்கிட வேண்டியுள்ளது. சிந்துவுக்கு தேவையான நேரத்தை என்னால் ஒதுக்க முடியவில்லை. பயிற்சி தருவதில் எனக்கு உதவியாக இருக்க கிம்மை அழைத்து வந்தேன்' என்கிறார் கோபி. நட்சத்திர ஆட்டக்காரர்களாக சிந்து, சாய்னா நேவால் இருவருக்கும் பிரத்யேக பயிற்சி தர கிம் வந்தாலும், சாய்னா தனது கணவரும், இறகுப் பந்தாட்டக்காரருமான கஷ்யப்பிடம் பயிற்சி பெற முடிவு செய்தார். அதனால் கிம் தனது முழு கவனத்தை சிந்துவிடம் குவிக்க முடிந்தது. கோபியும் கிம்மிற்கு சிந்துவை பயிற்சியளிக்க முழு சுதந்திரம் கொடுத்திருந்தார். சிந்துவுக்கு கிம் வெறும் பயிற்சியாளராக மட்டும் இருக்கவில்லை. சிந்துவுக்கு விழிப்பூட்டும் தூண்டுகோலாகவும் ஆலோசகராகவும் மாறினார். 
"பயிற்சி பலன் தர வேண்டுமென்றால் பயிற்சியாளருக்கும் ஆட்டக்காரருக்கும் இடையில் நம்பிக்கை புரிதல் வேண்டும். ஒருவரை ஒருவர் நம்பாவிட்டால் ஒரு பலனும் கிடைக்காது. சிந்து திறமைசாலிதான். ஆனால் சாமர்த்தியம் குறைவாக இருந்தது. சாமர்த்தியம் யுக்தி, லாகவங்களுடன் கலந்திருக்க வேண்டும். ஒரே யுக்திகளை அடுத்தடுத்து எல்லா ஆட்டங்களிலும் பயன்படுத்தக் கூடாது. மெதுவாக ஆட்டத்தைத் தொடங்கினால் எதுவுமே எடுபடாது. அதிரடி ஆட்டம் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை தொடர வேண்டும்' என்கிறார் கிம்.
"கிம் சொல்கிற மாதிரி சிந்துவை தொடக்கம் முதல் ஆடச் சொன்னேன். சிந்துவும் அதிரடியை ஆரம்பித்து கடைசி வரை பிடித்து தெம்புடன் நின்றார். அந்த அணுகு முறைதான் தங்கத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது' என்று ஆமோதிக்கிறார் கோபி.

கிம்மின் பயிற்சி குறித்து சிந்து என்ன சொல்கிறார் ? 
பயிற்சியாளர் கிம்முடன் பயிற்சி தொடங்கி இரண்டு மாதங்கள் ஆகின்றன. ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் ஒவ்வொரு கோணம் உள்ளது. "பேட்'டை சுழற்றி பந்தை அடிப்பதில் பலவகை முறைகளை பரீட்சித்துப் பார்த்தோம். அந்த லாகவத்தில் சில பிழைகளை கிம் கண்டுபிடித்தார். அவற்றை நேர் செய்வதில் நாங்கள் இருவரும் இணைந்து முயற்சித்தோம். அந்த முயற்சிகள் எனக்கு போட்டியில் உதவி செய்தன. பயிற்சியாளர் கோபி சார் நான் எப்படி ஆட வேண்டும் என்று திட்டமிட்டார். அதை என்னிடம் சொன்னார். கிம் , கோபி சார் எனது ஆட்டத்தில் உள்ள குறைகள் குறித்து கலந்து ஆலோசித்தார்கள். அவற்றை எப்படி சரி செய்வது என்றும் முடிவுக்கு வந்தார்கள். போட்டிகளுக்காக கடுமையான பயிற்சிகள் எடுத்தேன். ஜங்க் உணவு வகைகளை நான் முழுமையாக ஒதுக்கியிருக்கிறேன். தீவிர இறகாட்ட பயிற்சியுடன், ஃபிட்னஸ் பயிற்சியும் இரண்டு ஆண்டுகளாகச் செய்து கொண்டிருக்கிறேன். இந்த விளையாட்டிற்காக எனது உடலை மிகவும் வருத்திக் கொண்டிருக்கிறேன். அம்மாவின் அருகாமை கிடைப்பதில்லை. அதை நான் அவ்வப்போது உணருகிறேன்." 
BWF உலக சாம்பியன் பட்டம் மற்றும் தலா இரண்டு வெள்ளி, வெண்கலம் பதக்கங்கள் சிந்து பெற்றிருந்தாலும், சர்வதேச தரத்தில் சிந்து ஐந்தாம் இடத்தில் தொடருவார். அடுத்தடுத்து சீன ஓப்பன், கொரியன் ஓப்பன், டென்மார்க் ஓப்பன், ஃபிரெஞ்ச் ஓப்பன் போட்டிகள் நடக்க உள்ளன. அதில் சிந்து பெரும் வெற்றிகளை பொறுத்தே சிந்துவின் தர வரிசை மாறும். சென்ற இரண்டு ஆண்டுகளாக சிந்து சந்தித்த தோல்விகள் சர்வதேச அளவில் அவரை இரண்டாம் ஸ்தானத்திலிருந்து ஐந்தாம் ஸ்தானத்திற்கு இறக்கி விட்டிருந்தன. 
சென்ற ஆண்டு டிசம்பர் மத்தியில் சீனாவின் குவாங்சோவ் நகரில் நடந்த "உலக டூர் ஃபைனல்ஸ்' இறகுப் பந்தாட்டத் தொடரில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து முதல் முறையாக "உலக சாம்பியன்' பட்டத்தை வென்று புதிய வரலாறு படைத்தார். பதக்கத்துடன், ஒரு லட்சத்து இருபதாயிரம் டாலர் பரிசும் கிடைத்தது. தங்கப் பதக்கம் பெறும் முதல் இந்திய பெண் இறகுப் பந்தாட்ட வீராங்கனையும் சிந்துதான்..! எதிராளியாக இருந்தவர் வேறு யாருமல்ல !
இப்போது சிந்துவிடம் தோற்ற அதே நúஸாமி ஒகுஹராதான். பல சந்தர்ப்பங்களில் சிந்து நஸோமியிடம் தோல்வி அடைந்திருக்கிறார். அதனால்தான் "ஆட்டத்தில் வெற்றி தோல்வி சகஜம்' என்று சிந்து சாம்பியன் ஆன சூழ்நிலையிலும் சொல்லியிருக்கிறார்.
இந்திய இறகுப் பந்தாட்ட சம்மேளனம் சிந்துவுக்கு இருபது லட்சம் பரிசாக அறிவித்துள்ளது. வாழ்த்து மழையுடன் இனி பரிசு மழையும் கொட்டும். சிந்து தங்கப் பதக்கத்தை அம்மாவுக்குப் பிறந்த நாள் பரிசாக அறிவிக்க .. அம்மா விஜயா, "எனக்கு இதுவரை கிடைத்திராத அறிய பெரிய பரிசினை சிந்து வழங்கியிருக்கிறாள் ... இந்தப் பதக்கத்தைப் பெற சிந்து இந்த இளம் வயதில் செய்த தியாகங்கள் மகத்தானவை'' என்று சிலிர்த்துப் போயிருக்கிறார். 
சிலிர்த்துப் போனது அம்மா விஜயா மட்டுமா?
BWF உலக சாம்பியன் பட்டம் பெற்ற முதல் இந்தியர்' என்ற பெருமையைக் கண்டு ஒட்டு மொத்த இந்தியாவும் அல்லவா சிலிர்த்துப் போயிருக்கிறது.
-அங்கவை

மானஸிக்கு கிடைத்த தங்கம்...!

ஆகஸ்ட் 25 பிற்பகல் BWF இறகுப் பந்தாட்டத்தில் பி வி சிந்து தங்கப் பதக்கம் பெறுவதற்கு முதல் நாளே இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் கிடைத்துவிட்டது. அதே சுவிட்சர்லாந்தில் பஸில் நகர் விளையாட்டரங்கம். அதே இறகுப் பந்து உலக சாம்பியன் போட்டி. ஆனால் ஒரே ஒரு வித்தியாசம். அது உடல் ஊனம் உள்ளவர்களுக்கான போட்டி. இடதுகால் இழந்த, முப்பது வயதாகும் மானஸி ஜோஷி சர்வதேச போட்டியில் முதல் தடவையாக தங்கம் பெற்று சாதனை படைத்திருக்கிறார். மானஸி ஜோஷி, சிந்துவின் பயிற்சியாளரான கோபி சந்த் நடத்தி வரும் அகாடமியில் கடந்த இரண்டு வருடங்களாக பயிற்சி பெற்று வருபவர். 
கோபி சந்தின் சிஷ்யைகள் இருவர் இறகுப் பந்தாட்டத்தில் ஒரே சமயத்தில் உலக சாம்பியனாகியிருப்பது ஓர் அபூர்வ சாதனை.. அபூர்வ பொருத்தம். 
ஆண், பெண் மாற்றுதிறனாளிக்கான உலகப் போட்டியில் இந்தியாவிற்கு 12 பதக்கங்கள் கிடைத்துள்ளன. அதில் தங்கப் பதக்கம் பெற்றது மானஸி மட்டுமே. இந்தக் குழுவினர் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சரை சந்தித்த போது சுமார் ஒன்றரை கோடி பரிசாக வழங்கப்பட்டது. மானஸிக்கு கிடைத்த பரிசுத் தொகை இருபது லட்சம். 
கோச் கோபியின் சிஷ்யையானதினாலும் சர்வதேச அளவில் முதன் முதலாக தங்கப்பதக்கம் வென்றதாலும் அந்த விழாவில் மானஸிக்கும் சிறப்பு செய்யப்பட்டது.
மானஸி அடிப்படையில் கணினி பொறியாளர். குஜராத்தின் ராஜ்கோட் நகரைச் சேர்ந்தவர். அப்பா மும்பை பாபா அணு ஆராய்ச்சி கழகத்தில் விஞ்ஞானியாக இருந்து ஓய்வு பெற்றவர். அந்த விபத்து மானஸியின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. மானஸி மனம் திறக்கிறார் :
"எல்லாரையும் போல சிட்டாகப் பறந்து கொண்டிருந்தேன். கணினி பொறியாளராக வேலை. கை நிறைய சம்பளம். வேலையில் சுறுசுறுப்பு. இறகுப் பந்தாட்டம் பள்ளி முதல் எனக்குப் பரிச்சயம். பள்ளி கல்லூரி அளவில் பரிசுகள் வாங்கியிருக்கிறேன். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கிடையில் நடக்கும் போட்டிகளில் இறகுப் பந்தாட்டத்தில் நான்தான் முதலாவதாக வருவேன். அதைத் தாண்டி, முழு நேர ஆட்டக்காரியாக வேண்டும் ... சாதனை படைக்க வேண்டும் என்று நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. ஆனால் விதி வேறு கணக்கு போட்டு வைத்திருந்தது. 
மும்பையில் சாலையைக் கடக்கும் போது விபத்து நேர்ந்தது. விபத்து நடந்தது 2011-இல். இரு சக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தேன். அப்போது காலை எட்டரை மணி. லாரி என்னை மோதித் தள்ளி இடது கால் மேல் ஏறி இறங்கியது. கையும் ஒடிந்துவிட்டது. ரத்த வெள்ளத்தில் மிதந்தேன். கூட்டம் கூடி வேடிக்கை பார்த்தார்கள். கூட்டத்தில் ஒருவன் எனது ஹெல்மெட்டை திருடிச் சென்றான். மும்பையில் சிறந்த மருத்துவமனைகள் இருந்தன என்றாலும் எனக்கு ஆம்புலன்ஸ் உதவி உடனடியாகக் கிடைக்கவில்லை. மூன்று மணி நேரம் சாலையில் கிடந்தேன். 
அவசர சிகிச்சைக்காக பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு நல்லவர்கள் சிலர் எடுத்துச் சென்றார்கள். ஆனால் அங்கே எலும்பு மருத்துவர் இல்லை. வேறு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று அறுவை சிகிச்சை செய்யத் தொடங்கியபோது மாலை ஆறரையாகிவிட்டது. அதற்குள் சிதைந்திருந்த இடது கால் முழங்காலுக்குக் கீழ் மரத்துப் போனது. நரம்புகள் சதைகள் உணர்விழந்தன . முழங்காலுக்கு கீழ் வெட்டி எடுப்பதை விட வேறு வழியில்லை என்று சொல்லிவிட்டார்கள். ஆறு மாதம் ஓய்வில் இருந்தேன்.
நடமாட உதவியாக செயற்கைக் கால் பொருத்திக் கொண்டேன். அதன் விலை இருபது லட்சம். ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். காப்பீட்டுத் தொகை கிடைத்ததினால் செயற்கைக் காலைப் பொறுத்திக் கொண்டேன். நடந்தது நடந்துவிட்டது. வரும் நாட்களை எதிர் கொள்ள... மெல்ல இறகுப் பந்தாட்டத்தை ஆடத் தொடங்கினேன். அப்போதுதான் மாற்றுதிறனாளிக்கான போட்டிகள் தேசிய சர்வதேச அளவில் நடக்கிறது என்பதை அறிந்தேன். சம்பளம் குறைந்தாலும் பரவாயில்லை என்று , வேலைப் பளு குறைந்த வேலைக்கு மாறினேன். 
பாரா (Para) ஆசிய போட்டிகளில் பங்கெடுக்க 2014-இல் தகுதி போட்டிகளில் கலந்து கொண்டேன். தகுதி பெற முடியவில்லை. ஆனால் பலரது கவனத்தைக் கவர்ந்தேன். அந்த ஆண்டே தேசிய அளவில் வெள்ளிப் பதக்கம் பெற்றேன். 2015 -இல் ஸ்பெயினில் நடந்த சர்வதேச போட்டி ஒன்றில் கலந்து கொண்டேன். பதக்கம் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் எனக்கு ஒரு புது திசையைக் காட்டியது. புது நம்பிக்கையை விதைத்தது. சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்வது எனது லட்சியமானது. உலக சாம்பியன் போட்டி 2015-இல் இரட்டையர் ஆட்டத்தில் வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. 2016-இல் ஒற்றையர், இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம், 2017 -இல் ஒற்றையர் பிரிவில் வெண்கலம், 2018-லிலும் ஒற்றையர் பிரிவில் வெண்கலம் கிடைத்தது. 2018 பாரா ஆசிய போட்டி ஒற்றையர் பிரிவில் வெண்கலம்.. என்று பதக்கம் வாங்கினாலும் 2019-இல் தங்கம் பெற முடிந்தது. மூன்று முறை உலக சாம்பியனாக இருக்கும் பருல் பர்மர் என்பவரை இரண்டு ஆட்டத்தில் தோற்கடித்தேன். அதற்கு எனக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர்கள்தான் காரணம். 
பொதுவாக மாற்றுதிறனாளிகள் வெளியே போக வர மிகவும் சிரமப் பட வேண்டியுள்ளது. ஒதுங்கி விடுகிறார்கள். விபத்து ஏற்பட்டு செயற்கைக் காலினால் மீண்டும் நடக்க ஆரம்பித்ததும் பயிற்சிக்காக, அலுவலகம் செல்ல ஆட்டோ, ரிக்ஷா, டாக்சி என்றுதான் பயணித்தேன். எனக்காக என் குடும்பத்தினர் மிகவும் சிரமப்பட்டார்கள். என்றாலும் நிரந்தரமாக ஊக்குவித்தார்கள். அலுவலகத்திலும் அனைவரும் உதவினார்கள். எனக்கு இரண்டு ஸ்பான்சர்கள் கிடைத்திருப்பதுதான் எனக்கு கிடைத்திருக்கும் நிம்மதி. எனது செயற்கைக் காலை மாற்ற வேண்டிய தருணம் வந்துவிட்டது. என்னிடம் அத்தனை சேமிப்பு இல்லை. எப்படியாவது சமாளித்தாக வேண்டும்... என்கிறார் இடது காலை இழந்தாலும் இதயத்தில் நம்பிக்கை இழக்காமல் "என்னாலும் முடியும்' என்று சாதித்துக் காட்டியிருக்கும் மானஸி ஜோஷி.
-கண்ணம்மா பாரதி

துப்பாக்கி சுடும் போட்டி

ஜூனியர் பிரிவில் இருந்து சீனியர் பிரிவுக்கு மாற்றப்பட்டு முதல் உலக துப்பாக்கி சுடும் போட்டியிலேயே தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் தமிழகத்தின் இளவேனில் வாலறிவன்.
தேசிய விளையாட்டான ஹாக்கியோடு, கபடி, பாட்மிண்டன், தடகளம், டேபிள் டென்னிஸ், வாலிபால், கூடைப்பந்து, மல்யுத்தம் என பல்வேறு விளையாட்டுகளும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இதில் துப்பாக்கி சுடுதலும் ஒன்றாகும். 
ஜூனியர் உலகப் போட்டியில் தங்கம்: கடந்த 2018-இல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஜூனியர் உலக துப்பாக்கி சுடும் போட்டியில் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்தார். நிகழாண்டு ஜெர்மனியின் சூல் நகரில் நடைபெற்ற ஜூனியர் போட்டியிலும் தங்கம் வென்றார். மியுனிக்கில் நடைபெற்ற போட்டியில் நூலிழையில் வெண்கலத்தை தவற விட்டார்.
சீனியர் பிரிவில் தங்கம்: இதன் தொடர்ச்சியாக தற்போது ரியோடி ஜெனிரோவில் நடைபெற்ற சீனியர் உலகப் போட்டியில் மகளிர் 10 மீ. ஏர்ரைபிள் பிரிவில் பங்கேற்ற முதன்முறையே தங்கம் வென்றுள்ளார். இறுதிச் சுற்றில் 251.7 புள்ளிகளை பெற்று தங்கம் வென்றார் இளவேனில்.
இளவேனில் வாலறிவன் கூறியதாவது:
"தங்கப் பதக்கம் வென்றது வரும் ஆண்டுகளில் பெரிய போட்டிகளை எதிர்கொள்ள தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. அடுத்து வரும் ஒலிம்பிக் போன்ற பெரிய போட்டிகளிலும் பதக்கம் வெல்ல இது உத்வேகமாக அமையும்'' என்றார்.
-பா.சுஜித்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com