மகளிர்மணி

தோட்டம் அமைக்கலாம் வாங்க...

4th Sep 2019 11:15 AM

ADVERTISEMENT

பூ உதிர்வை தடுக்க...!
 செடிகளுக்கு உரமிடுவது என்பது ஏதோ ஒன்றை செடிகள் வளர கொடுப்பதில்லை. இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட அதிலும் நமது வீட்டருகில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு எளிமையாக தயாரிக்கப்படும் உரங்களை கொடுப்பதால் செடிகள் சீராக வளர்வது மட்டுமல்ல அவற்றிலிருந்து கிடைக்கும் காய்களும் சத்தானதாகவும், சுவையானதாகவும் இருக்கும். இந்த காய்கள் உடலுக்கு தேவையான பலவிதமான சத்துக்களையும் உடலுக்கு கொடுப்பதுடன், உடல் தனக்கு தேவையான சத்துக்களை பெறுவதற்கும் துணைபுரிகிறது. இவ்வாறு இயற்கையில் விளைந்த காய்கள் உடலுக்கு நோய் எதிர்ப்பு திறனையும் ஆரோக்கியத்தையும் அளிக்கவல்லது.
 இவற்றிற்கு முதலில் நாம் நமது வீட்டுக்கழிவுகளையே உரமாக்கி செடிகளுக்கு அளிப்பது சிறந்தது. சென்ற இதழில் இதனை தெரிந்து கொண்ட நாம் இந்த உரத்தை வாரம் ஒருமுறை செடிகளுக்கு இடுவது சிறந்தது. அதே போன்று வீட்டிலேயே எளிமையாக தயார்செய்யக்கூடிய மற்ற உரங்களை இனி தெரிந்துகொள்வோம்.
 சருகு உரம்:
 பொதுவாக நகரங்களிலும், கிராமங்களிலும் மரங்களின் சருகுகள் பெரியளவில் கிடைக்கும். அவற்றை இன்று பெரும்பாலானவர்கள் ஒன்றாக சேர்த்து எரிக்கின்றனர். இதனால் சுற்றுச்சூழல் மாசு மட்டுமல்ல புவிவெப்பமடைவதும் அதிகரிக்கிறது. இதனை தவிர்ப்பதோடு அவற்றைக் கொண்டே நமக்கு தேவையான சிறந்த உரத்தை தயாரிப்பதன் மூலம் பல நன்மைகள் நமக்கு கிடைக்கும்.
 நம்மைச்சுற்றி கிடைக்கும் இந்த இலைதழை சருகுகளை சேகரித்து, அதனுடன் சிறிது காயவைத்து பொடித்த நாட்டு மாட்டின் சாணப்பொடியினை (அல்லது சாணக்கரைசலை) நீரில் கரைத்து தெளிக்க சில நாட்களில் இவை மக்கிப்போய் உரமாக மாறும். வீட்டுக்கழிவுகள் உரமாக்குவதைப்போலவே இதனையும் எளிதாக தயாரிக்கலாம்.
 முட்டை ஓடு:
 பாரம்பரிய நாட்டு விதைகளுக்கு பூச்சிகள் பொதுவாக அண்டாது. பட்டம். தட்பவெப்பம், சூழல் மாறுவதால் ஏதேனும் பூச்சிகள் செடிகளை தாக்கமுற்பட்டால் எளிமையாக நுணுக்கிய முட்டை ஓடுகளையும் அதனுடன் சிறிது உப்பையும் சேர்த்து செடிகள் மீது தூவினால் பூச்சிகள் அண்டாது.
 காபி, டீ டிகாஷன்:
 காபி, டீ டிகாஷன்களை (கழிவுகளை) செடிகளுக்கு இடுவதாலும் பூச்சிகளை ஒழிக்கமுடியும், செடிகளும் சீராக வளரும்.
 தக்காளி ரசம்:
 தக்காளிப்பழத்தை பிழிந்து அதன் சாறினை செடிகளின் மீது தெளிக்க பூச்சிகள் ஓடிவிடும். பூச்சிகளுக்கு தக்காளி செடி இலை மற்றும் அதன் பழத்தின் வாசனை பிடிக்காது. இது ஒரு சிறந்த பூச்சிவிரட்டி.
 மண்புழு உரம்..
 வீட்டிலேயே கிடைக்கும் இயற்கை உரத்தையும் மண்புழு உரமாக மதிப்புக்கூட்டி செடிகளுக்கு அளிக்கலாம். இதனால் நல்ல வளர்ச்சியும், சிறந்த காய்களும் கிடைக்கப்பெறும். செடிகளுக்கு தேவையான பலவிதமான சத்துகள் இந்த உரத்தில் உள்ளது.
 வேம்புக்கரைசல்:
 பூச்சிகள் செடிகளை தாக்காமல் இருக்கவும், செடிகளில் முட்டையிடாமல் இருக்கவும் வேம்பு கரைசல் உதவும். மேலும் இந்த கரைசலால் தீமை செய்யும் பூச்சிகள் மலடாகிறது. நன்மை செய்யும் பூச்சிகளும் மண்ணிலிருக்கும் உயிரினங்களும் இந்த வேம்பு கரைசலால் பாதுகாக்கப்படுகிறது.
 இதற்கு வேப்பங்கோட்டையினை தூளாக்கி, அதனை பன்னிரண்டு மணி நேரம் நீரில் ஊறவைத்து, அதனுடன் கோமியத்தை சேர்த்து ஒருபங்கிற்கு பத்துப்பங்கு நீர்சேர்த்து செடிகளின் மேல் தெளிக்க வேண்டும்.
 இஞ்சி கரைசல்:
 இஞ்சி சாறினை இடித்து எடுத்துக்கொண்டு அதனோடு பத்துப்பங்கு நீர்கலந்து செடிகளின் மேல் தெளிக்க அஸ்வினி போன்ற பூச்சிகள் குறையும்.
 பூண்டு கரைசல்:
 பூண்டை இடித்து சாறு எடுத்துக்கொண்டு அதனுடன் பத்துப்பங்கு நீர் சேர்த்து செடிகளின் மேல் தெளிக்க பூச்சிகள் கட்டுப்படும்.
 பூ உதிர்வை தடுக்க:
 பெருங்காயத்தை செடிகளின் வேரில் இடுவதால் பூக்கள் மற்றும் பிஞ்சு உதிர்வை தடுக்கலாம். இருபது கிராம் பெருங்காயத்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து செடிகளுக்கு தெளிக்கலாம்.
 3எ கரைசல் எனப்படும் இஞ்சி, பூண்டு, மிளகாய் கரைசல்:
 இரண்டு பங்கு பூண்டினை பன்னிரண்டு மணி நேரம் நீரில் ஊறவைத்து அதனை விழுதாக எடுத்துக்கொள்ளவேண்டும். ஒரு பங்கு மிளகாய், ஒரு பங்கு இஞ்சியையும் விழுதாக எடுத்துக்கொண்டு அதனோடு மூன்று பங்கு நீர் சேர்த்து வடிகட்டி செடிகளின் மீது தெளிக்க பூச்சிகள் ஓடிவிடும்.
 -தொடரும்

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT