மகளிர்மணி

சமையல்! சமையல்!

4th Sep 2019 11:30 AM

ADVERTISEMENT

ஜவ்வரிசி உப்புமா

தேவையானவை: ஜவ்வரிசி -100 கிராம், பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட் துருவல், வறுத்த வேர்க்கடலை -தலா ஒரு கிண்ணம், பச்சை மிளகாய் -1, துருவிய இஞ்சி -ஒரு தேக்கரண்டி, உப்பு -தேவைக்கேற்ப, பொட்டுக்கடலை -2 தேக்கரண்டி, கொத்துமல்லி சிறிதளவு, விருப்பப்பட்டால் நெய் -2 தேக்கரண்டி , எலுமிச்சம்பழம் -அரை மூடி.
 செய்முறை: ஜவ்வரிசியை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு, ஒரு மணி நேரம் ஊறவிடவும். வாணலியில் நெய் விட்டு, கடுகு, பச்சைமிளகாய் தாளித்து, வெங்காயம், பொட்டுக்கடலை, இஞ்சி, கேரட் துருவல், வேர்க்கடலை எல்லாவற்றையும் சேர்த்து, ஊறிய ஜவ்வரிசியையும் சேர்த்துக் கிளறவும். உப்பு சேர்த்துக் கிளறி ஜவ்வரிசி வெந்ததும் நறுக்கிய கொத்துமல்லி எலுமிச்சைச்சாறு கலந்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

அவல் தோசை

ADVERTISEMENT

தேவையானவை: அவல் -200 கிராம், அரிசி -100 கிராம், உப்பு தேவையான அளவு, கடுகு, இஞ்சி துருவல் -சிறிது, மிளகாய் 1
 செய்முறை: அவல், அரிசியை ஒரு மணி நேரம் தனித்தனியே ஊறவைத்து, ஒன்றாகச் சேர்த்து நைஸாக அரைக்கவும். மாவுடன் உப்பு சேர்த்து கடுகு, மிளகாய், இஞ்சி போட்டுத் தாளித்துக் கொட்டி கலக்கவும். தோசைக்கல்லில் மாவை ஊற்றி, மிதமான வெப்பத்தில் தோசைகளைச் சுட்டெடுக்கவும்.
 
 இடியாப்பம் சொதி

தேவையானவை: இட்லி அரிசி -கால் கிலோ, எண்ணெய் -ஒரு தேக்கரண்டி, உப்பு -தேவையான அளவு.
 செய்முறை: அரிசியை மூன்று மணி நேரம் ஊறவைத்து களைந்து, சிறிது தண்ணீர் விட்டு, கிரைண்டரில் நைஸாக அரைக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு மாவை, தோசைமாவுப் பதத்தில் கரைத்து உப்பு சேர்த்து மிதமான வெப்பத்தில் அடுப்பில் வைத்து கெட்டியாகக் கிளறவும். ஆறியதும் நீளவாக்கில் மாவை நன்றாகப் பிசைந்து உருட்டி வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் (உருண்டைகள் மூழ்கும் அளவுக்கு) விட்டு நன்றாகக் கொதிக்கவிடவும். உருண்டைகளைப் போட்டு நன்றாக வெந்ததும், இடியாப்ப அச்சில் ஒவ்வொன்றாகப் போட்டுப் பிழிந்து கொள்ளவும்.
 சொதி: 6 பீன்ஸ், 1 கேரட், 1 குடமிளகாய் மூன்றையும் நீளவாக்கில் நறுக்கி, சிறிது எண்ணெய் விட்டு வதக்கி, உப்பு சேர்த்து வேகவிடவும். நன்றாக வெந்ததும் 100 மி.லி தேங்காய்ப்பால் சேர்க்கவும். சிறிது எண்ணெய்யில் கடுகு தாளித்து இறக்கவும். இடியாப்பம் சொதி தயார்.

குழிப்பணியாரம்

தேவையானவை: இட்லி அரிசி -200 கிராம், வெந்தயம் -2 தேக்கரண்டி, உளுந்தம் பருப்பு -4 தேக்கரண்டி, தேங்காய்ப் பால் 100 மி.லி, கேரட் துருவல், பொடியாக நறுக்கிய வெங்காயம் -தலா ஒரு கிண்ணம், பொடியாக நறுக்கிய இஞ்சி ஒரு தேக்கரண்டி, பச்சைமிளகாய் -1, கடுகு -ஒரு தேக்கரண்டி, எண்ணெய், உப்பு -தேவைக்கேற்ப.
 செய்முறை: இட்லி அரிசியுடன் வெந்தயம், உளுந்தம் பருப்பு சேர்த்து, இரண்டு மணிநேரம் ஊறவைத்துக் களைந்து, சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் நைஸாக அரைத்து, தேவையான உப்பு சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, கேரட், வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி மாவுடன் கலந்து, தேங்காய்ப் பால் விடவும். பணியாரக் கல்லில் ஒவ்வொரு குழியிலும் சிறிது எண்ணெய் விட்டு மாவை ஊற்றிப் பொன்னிறமாக இருபுறமும் திருப்பி வேகவிடவும். புதினா, தேங்காய், வெங்காயம், கொத்துமல்லி என இதற்குத் தொட்டுக்கொள்ள எல்லா வகைச் சட்னியும் அருமையாக இருக்கும்.
 
 கேழ்வரகு தோசை
 

தேவையானவை: கேழ்வரகு மாவு -200 கிராம், கடுகு, சீரகம் -தலா ஒரு தேக்கரண்டி, உப்பு -தேவையான அளவு, பெருங்காயத்தூள் -சிறிதளவு, எண்ணெய் -100 மி.லி
 செய்முறை: கேழ்வரகு மாவுடன் உப்பு, சீரகம், பெருங்காயத்தூள், கடுகு சேர்த்து தாளித்து, தோசைமாவுப் பதத்தில் கரைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லைக் காயவைத்து, மிதமான வெப்பத்தில் தோசை மாவைப் பரவலாக ஊற்றி இருபுறமும் எண்ணெய்விட்டு வெந்ததும் எடுக்கவும். இதற்குத் தொட்டுக் கொள்ள, தேங்காய்ச் சட்னி அருமையாக இருக்கும்.
 -கா.அஞ்சம்மாள், திருவாடானை.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT