மகளிர்மணி

என் பிருந்தாவனம்! 30 -பாரததேவி

4th Sep 2019 11:12 AM

ADVERTISEMENT

"என்னமோ தங்கராசு, உன் பாட்டி பூவம்மா ஊரு, நம்ம பக்கத்து ஊருன்னாலும் நீ இந்நேரத்துக்கு அங்கப் போறது சரியா படல அதுவும் இருட்டு நேரம், புல்லும், புதருமா வெறும் தருசுக்காடு. பாத்துப்போ'' என்ற பொன்னையா தாத்தா ஊரை நோக்கி நடந்தார்.
 தங்கராசு பொன்னையா தாத்தாவிடம் அப்படிச் சொல்லிவிட்டானே தவிர, அவனுக்கு எங்கேயும் போக மனமுமில்லை, உடம்பில் பலமுமில்லை. ஆனால் எங்கேயாவது போய்தான் ஆக வேண்டும். இல்லாவிட்டால் அவன் தம்பி பாண்டியோ, இல்ல அம்மாவோ தேடி வந்துவிடுவார்கள். அவளுக்கு தெரியும் தன் மகன் தன்னிடம் சொல்லாமல் எங்கேயும் போகமாட்டான் என்று தங்கராசு வம்படியாக எழுந்து நடக்கலானான். இவன் பிஞ்சைக்கு அயிந்தாரு பிஞ்சைத் தள்ளி கிடை போட்டிருந்தார்கள். நிலா இப்போது தான் பிறந்து மூன்றாம் பிறையாக வளர்ந்திருந்தது. அதைப் பார்க்கையில் அவனுக்கு கோபமாயிருந்தது. அவனுக்கும், கௌசிகாவிற்கும் சண்டை என்று தெரிந்து விட்டதுபோல் அல்லவா இந்த வானம் மூடிக்கிடக்கிறது என்று அவன் நினைத்து முடிக்குமுன்பே எந்த தடையுமில்லாமல் திறந்திருந்தது வானம். நிறைய வெள்ளித் துணுக்குகளாக நட்சத்திரங்கள் மின்னின வெட்ட வெளிக்காற்று அவனை இதமாய் தழுவிச் சென்றது.
 தூரத்து பனை மரத்திலிருந்து குயில் ஒன்று கூவும் குரல் ரொம்ப விகாரமாய் கேட்டது. தங்கராசு கிடையை நோக்கி நடந்தான்.
 இவனைக் கண்டதுமே கிடைக்காரர்களுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.
 "அண்ணே! வாண்ணே வா, என்ன இந்த பக்கம் அர்ச்சுவமா இருக்கு'' என்று கேக்க தங்கராசுவுக்கு அவர்களைப் பார்க்கவே கூச்சமாக இருந்தது.
 ""சும்மாதான் உங்களையெல்லாம் பாத்துட்டுப் போவலாமின்னு வந்தேன்''
 "அப்படியெல்லாம் சும்மாப் பாக்க வரக்கூடிய ஆள் இல்லையே நீ''
 "நம்ம வயல்ல கருதவெல்லாம் அறுதுட்டோம். கெட போடணுமில்ல அதேன் உங்களயெல்லாம் பாத்துட்டு கெட போட எப்ப வாரீகன்னு கேட்டுட்டுப் போவோமின்னு வந்தேன்''.
 "கெட போட கீதாரிய தேடில்ல போவணும், இங்க எதுக்கு வந்தே'' என்றான் இருளாண்டி.
 "ஏய் விடுங்கடா, அண்ணன் ஒரு நாளைக்கு மதினிகிட்ட இருந்து தப்பிச்சி வந்திருக்காரு அவரப் போட்டு பாடாபடுத்திக்கிட்டு... போங்க எல்லாரும்... போயி மத்தியானம் பிடுங்கிட்டு வந்தமே நிலக்கடலச் செடி அதுல இருக்க நிலக்கடலய ஆஞ்சி நெருப்பு வளத்து சுடுங்க. வீட்டுல இருந்து வந்தக் கஞ்சிய இன்னும் குடிக்காமத்தான இருக்கோம். அந்தா இருக்க, தேக்கு மரத்தில இருந்து ரெண்டு தேக்கு எலய பிடுங்கிட்டு வாங்க எல்லாரும் சேந்தே கஞ்சியக் குடிப்போம்'' என்றான் வளவரசன்.
 எல்லோரும் சேந்தே கஞ்சியக் குடிப்போம் என்று வளவரசன் சொன்னதைக் கேட்டதும்தான் இருட்டுமுன்பு கௌசிகாவோடு சேர்ந்து சாப்பிட வேண்டுமென்று ஆசைப்பட்ட தன் கசப்பான அனுபவத்தை எண்ணி பெருமூச்சுவிட்டான்.
 "என்னண்ணே உன் மொவம் ஒருவடியா இருக்கு, எப்பவும் கல கலப்பா பேசுவே. ஒரு பேச்சையும் காணோம்'' என்ற வளவரசன், என்ன இருளாண்டி தங்கராசு அண்ணன் எதுவுமே பேசல'' என்றான்.
 "இலையில நீ சோற வையி... அவன் நம்ம கூட சாப்பிடுவான். அதுக்கு முன்ன அந்தத் துண்டு முடிச்சில இருக்க பழங்கள எடுத்துக் கொடு'' என்று சொல்ல,
 "அய்யய்யோ அந்தத் துண்ட திருமன்ல்ல வச்சிருக்கான். அவன் இம்புட்டு நேரத்துக்கு அந்தப் பழத்த வச்சிருக்கானா?தின்னுட்டானான்னுக் கூடத் தெரியலயே, நானு போயி அதவாங்கிட்டு வாரேன்'' என்று சொல்லிவிட்டு வளவரசன் கிளம்ப,
 அப்போ அவன் எதிரே திருமன்,
 "ஆட்டுக்காரா, ஆட்டுக்காரா -நீ
 அடமழைக்கு எங்கிருப்பே
 குயிலு செறகெடுத்து
 கூடுகட்டி நானிருப்பேன்..
 ஆட்டுக்காரா, ஆட்டுக்காரா
 அட மழைக்கு நீ எங்கிருப்பே
 வேடந்தாங்கல் பறவையோட வீடுகட்டி தானிருப்பேன்..
 ஆட்டுக்காரா, ஆட்டுக்காரா
 அடமழைக்கு எங்கிருப்பே
 மயிலு தோக கொண்டு மாடிகட்டி நானிருப்பேன்.
 என்று பாடிக் கொண்டே வந்தான்.
 "அடடா, இவனைக் கொஞ்சம் விட்டாப் போதும் ஊருக்குள்ள இருக்க பறவைக கூடவெல்லாம் குடியிருப்பான்'' என்று சொன்ன இருளாண்டி,
 "அந்த துண்டக் கொண்டாப்பா'' என்று வாங்கினான்.
 "அந்தத் துண்டில் எலந்தப் பழமும், கோவப் பழமும் இருந்தது. அதை எடுத்து தங்கராசுவிடம் கொடுத்தான். "இந்தா தங்கராசு, காட்டுல விளையுற இந்தப் பழங்கள நீயுந்தேன் தின்னுருப்பே. ஆனா இப்போதைக்கு தின்னருக்க மாட்டே. அதேன் உனக்குக் கொடுக்கேன். நம்ம எத்தனப் பழத்த கடையில வாங்கி திங்கோம். ஆனா இந்தப் பழம் கணக்கா ருசி இருக்கா? காட்டு வழியே அலையிறவகளுக்கு, காட்டுப் பழந்தேன் ருசி'' என்றான்.
 உண்மையிலேயே தங்கராசுவிற்கு அந்தப் பழம் ருசியாயிருந்தது. அவனும் அந்தப் பழங்களை எல்லாம் பல வருடங்களுக்கு முன்னால் தின்றவன்தான். பிஞ்சை வேலையின்னு பொறுப்புகளை எடுத்துக் கொண்ட பிறகு இந்தப் பழங்களின் நினைப்பே இல்லாமல் போய்விட்டது.
 வளவரசன், ஆடுகளை பெரிய விசில் சத்தம் கொடுத்து, ஒரே இடத்தில் மடக்கி கூட்டாக நிற்க வைத்துவிட்டு வந்தான்.
 இருளாண்டி தங்கராசு முன்னால் பெரிய, பெரிய இலையாய் இரண்டு தேக்கு இலையை விரித்தான். அதில் நாலு பேராக இருந்தவர்களின் தூக்குப் போனியிலிருந்து நாலு வகை சோற்றை எடுத்து வைத்தான். பிறகு வெங்காய குழம்பும், டம்பட்டவரக்காய் வெஞ்ஞனமும் எடுத்து வைத்தான்.
 "சாப்பிடு தங்கராசு.. உன் கூட கூட்டாஞ்சோறு சாப்பிட்டு எம்புட்டு நாளாச்சி'' என்று தங்கராசுவை உட்கார வைத்து அவனும் இவனுக்கு எதிரில் உட்கார்ந்தபோது, தங்கராசுவிற்கு கண்கலங்கியது.
 இப்படி ஒரு அன்பு தனக்கு கிடைக்கவில்லையே என்று ஏங்கினான். இந்த கௌசி மட்டும் என்னைக் கொஞ்சம் அனுசரித்துப் போனால் நம் வாழ்க்கை எப்படியிருக்கும். நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்று ஏங்கினான்.
 "என்ன தங்கராசு, கெடைக்காக கேக்க வந்தேன்னு சொல்லிட்டு இங்க வந்தே... ஆனா, உன் நெனைப்பெல்லாம் எங்கேயோ இருக்கு போலிருக்கு'' என்றதும்,
 தங்கராசு சிரித்தபடியே, இருளாண்டியைப் பார்த்தான்.
 "அதெல்லாம் ஒன்னுமில்ல இருளாண்டி, நம்ம ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் பாத்து எம்புட்டோ நாளாச்சி ஆனாலும் எம்மேல இம்புட்டுக்குப் பிரியமா இருக்கியே'' என்று தங்கராசு சொல்லி முடிக்குமுன்பே,
 "என்ன தங்கராசு இப்படி பேசுறே, நாம ஒரு ஊருக்காரக சின்னப்பிள்ளையில இருந்து எம்புட்டு வெளையாட்டு வெளையாடியிருக்கோம், ஒன்னாச் சேர்ந்து அலஞ்சிருக்கோம். இப்ப நானு ஆடு மேய்க்கேன், நீ விவசாயியா இருக்கே - உன் உதவி எனக்கு வேணும், என் உதவி உனக்கு வேணும் இப்படி இருக்கையில பிரியமில்லாமயா இருப்பேன். சரி, சரி சாப்பிடு'' என்றான் உரிமையோடு,
 "ஏ... இருளாண்டி கொஞ்ச நாளைக்கு விவசாயத்த என் தம்பிகிட்ட விட்டுட்டு உன் கூட ஆடு மேய்க்க வரலாமின்னு நினைக்கேன். நீ என்னடா சொல்லுதே'' என்று தங்கராசு கேட்டதும் இருளாண்டிச் சிரித்தான்.
 -தொடரும்
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT