மகளிர்மணி

சமையல்! சமையல்!

16th Oct 2019 12:21 PM

ADVERTISEMENT

அவல் தோசை-தேங்காய்ச்சட்னி

தேவையானவை: அவல் - 200 கிராம், அரிசி - 100 கிராம், உப்பு - தேவையான அளவு, கடுகு, இஞ்சி துருவல் - சிறிது, மிளகாய் - 1.
 செய்முறை: அவல், அரிசியை ஒரு மணி நேரம் தனித்தனியே ஊறவைத்து, ஒன்றாகச் சேர்த்து நைஸாக அரைக்கவும். மாவுடன் உப்பு சேர்த்து கடுகு, மிளகாய், இஞ்சி போட்டுத் தாளித்துக் கொட்டி கலக்கவும். தோசைக்கல்லில் மாவை ஊற்றி, மிதமான வெப்பத்தில் தோசைகளாகச் சுட்டெடுக்கவும்.
 தேங்காய்ச் சட்னி: ஒரு கிண்ணம் தேங்காய்த் துருவலுடன், 1 பச்சை மிளகாய், 4 தேக்கரண்டி பொட்டுக்கடலை, உப்பு சேர்த்துத் தண்ணீர் விட்டு அரைக்கவும். அவல் தோசைக்கு அருமையான சைடிஷ்.
 பொட்டுக்கடலை உருண்டை

ADVERTISEMENT

தேவையானவை: பொட்டுக்கடலை - கால் கிலோ, வெல்லம் - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
 செய்முறை: வெல்லத்தைப் பொடித்துத் தண்ணீரில் கரைத்து, வடிகட்டி பாகாகக் காய்ச்சவும். பாகை தண்ணீரில் கொஞ்சம் விட்டால் உருண்டு வரவேண்டும். அதுதான் சரியான பாகு பதம்! அதில் பொட்டுக்கடலை, ஏலக்காய்த்தூள் போட்டுக் கிளறி, சிறிய உருண்டைகளாகப் பிடிக்கவும்.
 குறிப்பு: குழந்தைகளுக்கு கடையில் விற்கப்படும் பாக்கெட் ஸ்நாக்ஸ்களுக்குப் பதிலாக வீட்டில் செய்யப்படும் இதுபோன்ற எளிய தின் பண்டங்களைக் கொடுப்பது குழந்தைகளுக்கு நல்லது.
 வெஜிடபிள் இடியாப்பம்

தேவையானவை: இடியாப்பம் - 5, பெரிய வெங்காயம், கேரட், குடமிளகாய் - தலா ஒன்று, பீன்ஸ் - 10, நெய் - 2 தேக்கரண்டி, கொத்துமல்லி (நறுக்கியது) - கைப்பிடி அளவு, உப்பு - தேவையான அளவு.
 செய்முறை: பெரிய வெங்காயம், பீன்ஸ், கேரட், குடமிளகாயை நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் நெய் விட்டு, நறுக்கிய காய்களைப் போட்டு, உப்பு சேர்த்து வதக்கவும். இடியாப்பத்தை கொஞ்சம் வெந்நீரில் சேர்த்து, வடிகட்டி அதனுடன் வதக்கிய காய்களைப் போட்டுக் கிளறவும். நறுக்கிய கொத்துமல்லி தூவி இறக்கி குழந்தைகளுக்குக் கொடுக்கவும்.
 குறிப்பு: இட்லி அரிசியை ஊற வைத்து அரைத்து மாவை மிதமான தீயில் வைத்துக் கெட்டியாகக் கிளறினால் இடியாப்ப மாவு ரெடி. இதை அச்சில் போட்டுப் பிழிந்து, ஆவியில் வேக வைத்தால் இடியாப்பம் தயார். இதனுடன் தேங்காய்ப் பால், வெல்லம் சேர்த்து இனிப்பு இடியாப்பமாகவும் கொடுக்கலாம்.
 பார்லி பாத்

தேவையானவை: பார்லி - 200 கிராம், வறுத்த வேர்க்கடலை - ஒரு கிண்ணம், பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டி, நறுக்கிய குடமிளகாய், பெரிய வெங்காயம் - தலா 1, நறுக்கிய கொத்துமல்லி - சிறிதளவு, இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கவும்), மிளகுத்தூள் - கால் தேக்கரண்டி, நெய் - மேசைக்கரண்டி, துருவிய கேரட் - ஒரு கிண்ணம், கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக் கரண்டி, எலுமிச்சம்பழம் - 1, உப்பு - தேவையான அளவு.
 செய்முறை: பார்லியை அரை மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடிகட்டவும். வாணலியில் நெய் விட்டு நறுக்கிய குட மிளகாய், வெங்காயம், இஞ்சியைப் போட்டு நன்கு வதக்கவும், நெய்யில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து அதில் பார்லியைப் போட்டு உப்பு சேர்க்கவும். வறுத்த வேர்க்கடலை, பொட்டுக்கடலை, மிளகுத்தூள் போட்டு கிளறி, துருவிய கேரட்டையும் சேர்த்துக் கிளறி இறக்கவும். எலுமிச்சம்பழத்தைச் சாறு பிழிந்து சேர்க்கவும். நறுக்கிய கொத்துமல்லி தூவி, நன்றாகக் கலந்து கொடுக்கவும்.
 குறிப்பு: பார்லி சிறுநீரகப் பிரச்னை வராமல் தடுக்கும்; நீர் சம்பந்தமான நோய்களை விலக்கும்.
 கே. முத்தூஸ், தொண்டி
 

ADVERTISEMENT
ADVERTISEMENT