மகளிர்மணி

அநீதிக்கு எதிரான அதிகாரி..!

16th Oct 2019 12:34 PM

ADVERTISEMENT

அநீதியை எதிர்த்து, அரசியல்வாதிகளின் தலையீட்டை தள்ளிவைத்து, தைரியமாக நிர்வாக முடிவுகள் எடுத்ததற்காக இன்று கேரளம் முழுவதும் கொண்டாடப்படுபவர்தான் ரேணு ராஜ் ஐ.ஏ.எஸ்.
 கேரளத்தில் மூணாறுக்கு வெகு அருகில் இருக்கும் தேவிகுளம் வட்டத்தின் உதவி ஆட்சியராகப் பணி புரிந்த ரேணு ராஜ் பொறுப்பேற்ற ஒன்பது மாதத்திற்குள் சுமார் 90 நில ஆக்கிரமிப்புகளை ரத்து செய்திருக்கிறார். இந்தப் பகுதிகளில் ஆண்டாண்டு காலமாக தமிழர்கள் அதிகமாக வாழ்கிறார்கள். மூணாறைப் போலவே தேவிகுளம் தேயிலைத் தோட்டங்களைக் கொண்ட பச்சை பூமி. பச்சை பூமியைக் கண்டால் யாருக்குத்தான் ஆசை வராது. அப்படித்தான் மூணாறு, தேவிகுளம் பகுதிகளில் காடு, நில ஆக்கிரமிப்பு பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த ஆக்கிரமிப்புகளிள் ஆணிவேர்களை கிள்ளி எறிந்தவர் ரேணு. அதனால் ரேணு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். இந்த இடமாற்றம் கேரளத்தில் சர்ச்சைக்குச் சலங்கை கட்டிவிட்டிருக்கிறது.
 2015 ஐ. ஏ .எஸ் தேர்வில் அகில இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் தேர்வான ரேணு அடிப்படையில் எம்பிபிஎஸ் மருத்துவர். சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். படிப்பில் தொடக்கம் முதலே படு மிடுக்கு. ஐஏஎஸ் தேர்வில் முதல் முயற்சியில் வெற்றிக் கனியைப் பறித்தவர்.
 "எனது மகளின் வெற்றியை உலகெங்கும் பட்டினி கிடக்கும்.. படிக்க வழியின்றி பரிதவிக்கும் பாவப்பட்ட குழந்தைகளுக்கு சமர்ப்பிக்கிறேன். எங்களுக்கு பணக்காரர்களாக ஆக வேண்டும் என்ற எண்ணமில்லை. மூன்றடுக்கு வீடு வேண்டும் என்ற ஆசை இல்லை. ஐந்தாறு கார்கள் வேண்டும் என்ற இச்சையில்லை. சாதாரணமாக வாழ்ந்தால் போதும். மகள் ரேணு மருத்துவரானால் கொஞ்சம் பேருக்கு மட்டுமே உதவ முடியும். உழைக்க முடியும். ஆனால் ஐஏஎஸ் அதிகாரியானால் ரேணு எடுக்கும் முடிவுகள் லட்சக்கணக்கான மக்களுக்கு உதவும். அதனால்தான், ரேணு "ஐஏஎஸ் அதிகாரி'யாக வேண்டும் என்று கண்ட கனவிற்குத் துணை நின்றோம்'' என்று சொன்ன ரேணுவின் தந்தை ராஜகுமாரன் நாயர், கேரள அரசு போக்குவரத்துத் துறையில் நடத்துநராகப் பணி புரிந்தவர்.
 சமீபத்தில் மூணாறில் ஓடும் "முதிரம்புழா' ஆற்றின் கரையோரத்தில் புதிதாக பஞ்சாயத்து சார்பில் கட்டடம் கட்டப்பட்டு வந்தது. அப்படிக் கட்டுவது "நதிக்கரை பாதுகாப்புச் சட்டத்துக்கு' விரோதம் என்பதைத் தெரிந்து கொண்ட ரேணு, சற்றும் தாமதிக்காமல், "கட்டடம் கட்டுவதை நிறுத்துங்கள்' என்று உத்தரவிட்டார். ரேணுவின் முடிவினை எதிர்த்து வழக்கு கேரள உயர் நீதிமன்றத்தில் போடப்பட்ட போது, "ஆற்றின் கரையோரம் அரசு எப்படி கட்டடம் கட்டலாம் ? ரேணு எடுத்த முடிவு சரியானதே' என்று தீர்ப்பானது. தொடர்ந்து தேவிகுளம் இடது கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், ரேணுவை அவமரிதையாக பொதுமக்கள் முன்னிலையில் திட்டினார். "ஐ.ஏ.எஸ் தேர்வு பெற்றுவிட்டால் எல்லாம் தெரியும் என்ற நெனப்பா.. இவர்கள் கலெக்டராக வேண்டும் என்று படிக்கிறார்களே தவிர எந்த அறிவும் கிடையாது' என்று ஒருமையில் விமர்சித்துமிருக்கிறார். இப்படி பேசிய காணொளி கேரளத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை வெடிக்கச் செய்தது. பிறகு ராஜேந்திரன் மன்னிப்பு கேட்டார்.
 எல்லாவற்றிற்கும் மேலாக ரேணு ஒரு நில ஆக்கிரமிப்பை எதிர்த்து அதிரடி நடவடிக்கை எடுத்ததுதான் ஆட்சியாளர்களின் புருவங்களை உயர்த்தியது. கோபத்தைப் பற்ற வைத்தது. ரேணுவின் பணியிடை மாற்றலுக்கும் பிரதான காரணமானது. சென்ற மாதம், கேரளத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கும் இடதுசாரி கட்சியின் தலைவர்களில் ஒருவரும் "இடுக்கி' தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜாய்ஸ் ஜார்ஜ், அவரது குடும்பத்தினர் தேவிகுளம் பகுதியில் இருபது ஏக்கர் நிலம் முறைகேடாக ஆக்கிரமிப்பு செய்து பட்டா போட்டுள்ளதாகத் தெரிந்து கொண்ட ரேணு , அந்தப் பட்டாவை உடனடியாக ரத்து செய்து உத்தரவிட்டார். இந்த ஆக்கிரமிப்பு நிலம், அமையவிருக்கும் (நீலக்)குறிஞ்சி மலருக்கான சரணாலயத்தைச் சேர்ந்ததாம். இந்த நடவடிக்கைக்குப் பிறகுதான் ரேணு மீதான எதிர்ப்பு புகையத் தொடங்கியது.
 விளைவு..? ரேணு உதவி ஆட்சியர் பதவியிலிருந்து சென்ற வாரம் மாற்றம் செய்யப்பட்டார். பொது நிர்வாகத் துறையின் செயலாளராக பணியில் சேர வேண்டும் என்ற கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பதவி மாற்றம் ஆணையை கையில் வாங்கிக் கொண்டாலும், விடை பெறுவதற்கு முன்னதாக 1999 - வாக்கில் முறைகேடாக வாங்கப்பட்ட இரண்டரை ஏக்கர் பரப்பு கொண்ட நான்கு நிலங்களின் பட்டாக்களை போலி என்று அறிவித்ததுடன் ரேணு அதிரடியாக ரத்து செய்துவிட்டுதான் தேவிக்குளத்தை வீட்டுக் கிளம்பினார்.
 தேவிகுளம், மூணாறு பகுதியில் சுற்றுலா ரிஸார்ட்டுகள் முளைத்து வருகின்றன. கேரளத்தில் சுற்றுலாவுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால், நிலங்களுக்கு அதிக விலை. இதுபோன்ற காரணங்களால், அரசுக்குச் சொந்தமான நிலங்கள் மீது ஆக்கிரமிப்பாளர்கள் குறிவைக்கின்றனர். அரசியல் பின்னணி, கூட்டணியுடன் ரிஸார்ட்டுகள் கட்டுகிறார்கள். இந்த மாதிரியான நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு ரேணு சிம்ம சொப்பனமாக மாற , கோபமடைந்த ஆக்கிரமிப்பாளர்கள் ரேணுவை மாற்றியுள்ளனர். ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராகச் செயல்படும் எல்லா உதவி ஆட்சியர்களுக்கும் இந்த கதிதானாம். கடந்த ஒன்பது ஆண்டுகளில் பதினாறு உதவி ஆட்சியர்கள் பதவி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கேரளத்தில் நில ஆக்கிரமிப்பு நடந்து கொண்டுதான் உள்ளது.
 "உதவி ஆட்சியராக தேவிக்குளத்தில் மனசாட்சிப்படி பணி புரிந்தேன். ஒரு நாளைக்கூட நான் வீணாக்கவில்லை. நில அபகரிப்பு என்பது மலைப்பகுதியை அரித்து அழிக்கும் புற்று நோய். அது காரணமாகவே அரசு விதிகளின்படி துணிச்சலாக நடவடிக்கைகளை முடுக்கிவிட்டேன்'' என்று கூறும் ரேணு பல அபலைப் பெண்களுக்கு உதவியுள்ளார். பலருக்கு உதவி தொகை கிடைக்கவும் வழிவகை செய்து தந்துள்ளார்.
 சிரமங்கள், துயரங்கள், கஷ்டங்கள் வரும் போது பெண்களுக்கு அழுகை வரும்தான். அழுவது குற்றமல்ல .. ஆனால் அழுது முடிந்ததும் எழுந்து வாருங்கள்.. சூழ்நிலையை எதிர் கொள்ளுங்கள். முடங்கிப் போகாதீர்கள். வாழ்க்கையில் முற்றுப் புள்ளியாகிப் போனால் விடியலைக் காண முடியாது.
 மருத்துவராக பணி புரிந்த போது பணியில் இத்தனை அழுத்தம் இருக்கவில்லை என்பது உண்மைதான். பொறுப்புள்ள பதவியில் இருக்கும் போது சில முடிவுகளை நடைமுறைப்படுத்தும் போது எதிர்பார்க்காத சந்தர்ப்பங்களில் சில முணுமுணுப்புகளும், எதிர்ப்புகளும் எழத்தான் செய்யும். அதே சமயம் இந்த பொறுப்பு பல நல்ல சேவைகளைச் சமூகத்திற்குச் செய்ய அநேக சந்தர்ப்பங்களை வழங்குகிறது. நல்லது செய்தால் மன நிறைவு ஏற்படும். இரவில் படுக்கையில் கிடந்தவுடன் நிம்மதியாக உறங்கலாம்'' என்கிறார் ரேணு ராஜ் ஐஏஎஸ்.
 - பிஸ்மி பரிணாமன்

ADVERTISEMENT
ADVERTISEMENT