மகளிர்மணி

நம்பிக்கையுடன் எதிர் கொள்ளுங்கள்! - லதா மங்கேஷ்கர்

2nd Oct 2019 12:27 PM

ADVERTISEMENT

தொன்னூறு வயதை செப்டம்பர் 28-இல் நிறைவு செய்து 91-இல் அடியெடுத்து வைக்கிறார் பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர். முன்னமே இந்திய அரசின் "பாரத ரத்னா' உட்பட அனைத்து விருதுகளும், லதாவுக்கு வழங்கப்பட்டுவிட்டன. அதற்காக இந்திய அரசு, "பிறந்த நாள் வாழ்த்துகள்' என்று சொல்வதுடன் நின்றுவிட முடியுமா? எழுபது ஆண்டுகளாக தனது குயில் குரலால்மக்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கும் லதா மங்கேஷ்கரை கெளரவிக்க "இந்தியாவின் மகள்' என்ற பட்டத்தை பிரதமர் மோடி வழங்கியுள்ளார்.
 லதா மங்கேஷ்கர் கலைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். பெற்றோர் சகோதர சகோதரிகள் நாடக , திரைப்பட உலகுடன் தொடர்புள்ளவர்கள். பாலிவுட் பின்னணிப் பாடகியாகப் புகழ் பெற்று விளங்கும் ஆஷா போன்ஸ்லே லதாவின் இளைய சகோதரி. சுமார் இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ள லதா, இந்தியர்களால் "இசைக்குயில்" எனப் பாராட்டப்படுபவர். நான்கு வயதிலேயே பாடத் தொடங்கி, எழுபது ஆண்டுகளில் சுமார் முப்பதாயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடி சாதனை படைத்திருக்கும் லதா இந்திய திரையுலகில் இசை அரசியாக பவனி வருகிறார்.
 லதா இந்தோர் ராஜ்ஜியத்தில் செப்டம்பர் 28, 1929-இல் பிறந்தவர். அப்பா பண்டிட் தீனநாத் மங்கேஷ்கர். மராத்திய இசைக் கலைஞர். பூர்விகம் கோவா. "மங்கேஷி' ஊரைச் சேர்ந்தவர் என்று பொருள்படும்படியாக "மங்கேஷ்கர்' என்று பெயருடன் இணைத்துக் கொண்டார். அது பின்னர் லதா பெயருடனும் சேர்ந்து கொண்டது. லதாவுக்கு பெற்றோர் இட்ட முதல் பெயர் ஹேமா. அப்பாவின் நாடகத்தில் வரும் "லத்திகா' பாத்திரத்தின் நினைவாக ஹேமா, லதாவாக பெற்றோரால் பெயர் மாற்றம் செய்யப்பட்டார். குழந்தைகளில் மூத்தவரும் லதாதான்.
 லதா மங்கேஷ்கரின் தந்தை இசைப் பாடகர், நாடகக் கலைஞர் என்பதால் இசை ஞானம் லதாவின் ரத்தத்திலும் கலந்திருந்தது.
 ஐந்து வயதிலேயே தந்தையை இசை குருவாக ஏற்றுக் கொண்ட லதா, நாடகங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். இசையில் மேம்பட புகழ் பெற்ற அமான்அலி கான் சாகிப், அமானத்கானிடம் சிஷ்யையானார். குடும்ப சொத்தாகிவிட்ட இசை, லதாவைத் தொடர்ந்து உடன் பிறந்த ஹ்ருதயநாத் மங்கேஷ்கர், ஆஷா போஸ்லே, உஷா மங்கேஷ்கர், மீனா மங்கேஷ்கர் ஆகியோரும் இசைத்துறையில் முத்திரை பதித்தார்கள்.
 லதாவின் தந்தை 1942-இல் இறந்தார். லதா குடும்பத்தைக் கடுமையான பொருளாதார நெருக்கடி. திரைப்படங்களில் பாடுவது ஒன்றுதான் வருமானத்திற்கு வழி என்றானது. லதா திரைப்படப் பாடகியாக அறிமுகமானது 1942-இல். "கிதி ஹசால்'" மராத்தி படத்திற்காக லதா பாடிய முதல் திரைப்படப் பாடல் படத்தில் இடம் பெறவில்லை. அது பெரிய ஏமாற்றமாக அமைந்தது. லதா சில மராத்தி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. லதாவின் குரல் மிக மென்மையாக இருந்ததால் வாய்ப்புகள் அத்தனை எளிதாகக் கிடைக்கவில்லை. பாடிய மராத்திப் பாடல்களும் கை கொடுக்கவில்லை.
 அப்போதைய முன்னணி பாடகியான நூர்ஜஹான் போன்று லதா பாடவும் செய்தார். ஆனாலும் பயனில்லை. இசையமைப்பாளர் குலாம் ஹைதர், லதாவை பல இயக்குநர்களிடம் பரிந்துரை செய்தார். யாரும் லதாவுக்கு வாய்ப்பு தரவில்லை.
 "லதாவின் குரலின் அருமை உங்களுக்குத் தெரியவில்லை. "என் படத்தில் பாடுங்கள்..' என்று பலர் கெஞ்சி லதாவின் காலில் விழும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை ' என்று கோபத்தில் வெடித்த குலாம் ஹைதர், அவர் இசையமைத்த "மஜ்பூர்'" என்ற ஹிந்தி திரைப்படத்தில் பாட லதாவுக்கு வாய்ப்பு அளித்தார். அந்த வாய்ப்பு லதாவின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அந்த வெற்றியைத் தொடர்ந்து "மஹல்', "அந்தாஸ்', "பர்சாத்', "துலாரி' போன்ற படங்கள் லதாவின் புகழை வானுக்கு உயர்த்தின. குலாம் ஹைதர் அன்று கூறியது பலித்தது. ஆம் ..! தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் லதாவிடம் வாய்ப்பிற்காக "கியூ'வில் நின்றார்கள்.
 அன்று முதல் இன்று வரை முன்னணி இசை அமைப்பாளர்களின் இசை அமைப்பில் பாடியிருக்கும் லதா, இளையராஜா, ஏ.ஆர் ரஹ்மான் இசை அமைப்பில் தமிழ் படங்களிலும் பாடியுள்ளார். லதா பாடுவதுடன் நிறுத்திக் கொள்ளாமல், இசையமைப்பாளராகவும், படங்களின் தயாரிப்பாளராகவும் இருந்தார். 1999-இல் மாநிலங்களவை உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்ட லதா மங்கேஷ்கருக்கு, 2001-இல் இந்தியாவின் மிக உயர்ந்த விருதான "பாரத ரத்னா' வழங்கப்பட்டது.
 2001-இல் தந்தையின் நினைவாக "மாஸ்டர் தீனநாத் மங்கேஷ்கர்' மருத்துவமனையை புனேவில் லதா தொடங்கினார்.
 வாழ்க்கையில் கசப்பான அனுபவங்கள் லதாவையும் விடவில்லை.
 "ஒரு உண்மையைச் சொல்லவா... நான் வயதை எண்ணுவதில்லை... நினைத்துப் பார்ப்பதில்லை. மனதளவில் இளமையாக இருக்கிறேன். மேடு பள்ளங்கள் இல்லாத வாழ்க்கை இருக்கிறதா என்ன... நானும் வாழ்க்கையில் கஷ்டப்பட்டிருக்கிறேன்... பட்டினி கிடந்திருக்கிறேன்.. பர்சில் பணம் இல்லாமல் கையைப் பிசைந்து மனம் கலங்கியிருக்கிறேன். அதையே எப்பவும் நினைத்துக் கொண்டிருக்க வேண்டுமா.. நம்பிக்கையுடன் "நாளையை' எதிர் கொள்ளுங்கள். அடுத்தது என்ன என்று யோசியுங்கள்.. நல்ல நாள் வந்தே விடும்'' எனும் லதாவின் பாடல் அனுபவங்களும் சுவையானவை.
 "அப்போதெல்லாம் பாடல் பதிவு செய்யப்படும்போது ஏசி வசதி கிடையாது. ஒளிப்பதிவு கச்சிதமாக இருக்க வேண்டுமென்று மின் விசிறியைக் கூட நிறுத்தி விடுவார்கள். சில சமயம் பாடல்களை நண்பகலில் பதிவு செய்வார்கள். வெப்பத்தில் புழுங்கி வியர்வையில் குளிப்போம். அப்படிப்பட்ட சூழலில் நான் சில தடவைகள் மயங்கி விழுந்திருக்கிறேன்.
 அன்றைய காலத்தில் பாடுவதற்கு ஒரு மைக்தான் இருக்கும். இரண்டு பாடகர்கள் பாடினாலும் ஒரே மைக்தான். ஒருவர் பாடி தலையை மாற்றிக் கொள்ள வேண்டும். அந்த இடைவெளியில் இரண்டாம் பாடகர் மைக் அருகில் வந்து பாடுவார். வைக்கப்பட்டிருக்கும் மைக் எனக்கு எட்டாது என்பதால் சின்ன ஸ்டூல் போட்டிருப்பார்கள். அதில் நான் நின்று கொண்டு பாடுவேன்.
 அன்று என்னுடன் சேர்ந்து பாடியவர் உமாதேவி. நான் சில வரிகள் பாடி முடித்ததும் அடுத்த வரிகளைப் பாட மைக் அருகே அவர் வந்த வேகத்தில் தவறுதலாக என்னை உந்த.. நான் ஸ்டூலிலிருந்து கீழே விழுந்துவிட்டேன். நல்ல அடி'' என்றார்.
 1962-இல் இந்திய சீனாப் போர் நடந்தது. அதில் இந்தியாவுக்கு தோல்வி ஏற்பட்டது. போரில் வீர மரணம் அடைந்த இந்திய வீரர்களுக்காக "ஆயே மேரே வதன் கே லோகோன்' பாடலை லதா நெகிழ்ச்சியுடன் பாடினார். அந்தப் பாடலைக்கேட்ட பிரதமர் ஜவஹர்லால் நேரு அழுகையில் உடைந்தார்.
 லதா 1962-இல் உடல் நலக் குறைவால் மரணத்துடன் போராடினார். மருத்துவர் வந்து பார்த்ததில் லதாவுக்கு "மெல்லக் கொல்லும்' விஷம் தரப்பட்டிருப்பதை கண்டு பிடித்து சிகிச்சை அளித்தார். லதா தேறி வர மூன்று மாதம் பிடித்தது. அந்த சந்தர்ப்பத்தில் வீட்டின் சமையல்காரன் தலைமறைவானான். அனைவரும் லதாவின் உடல்நிலைக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் சமையல்காரன் குறித்து மேல் நடவடிக்கைகள் எடுக்கவில்லை. சில மாதங்களுக்கு லதாவுக்குத் தரப்படும் உணவுகள் பரிசோதனைக்கு உள்ளாகின.
 லதாவுக்கு பிடித்த விளையாட்டு கிரிக்கெட். பிடித்த ஆட்டக்காரர் சச்சின். லார்ட் ஸ்டேடியத்தின் காலரியில் லதாவுக்கென்று நிரந்தர இருக்கை ஒதுக்கப்பட்டிருக்கும்.

லண்டன் ராயல் ஆல்பர்ட் அரங்கில் முதலில் பாடிய இந்தியர் லதாதான். 1974-இல் லதா இந்த அரங்கில் பாடினார். லதாவைக் கெளரவித்து நியூயார்க் பல்கலைக்கழகம் உட்பட ஆறு பல்கலைக்கழகங்கள் கெளரவ டாக்டர் பட்டங்களை அளித்துள்ளன. லதாவின் பாடல்களில் மனதை பறி கொடுக்காதவர்கள் யார்? அதனால் லதா உலகம் உள்ள அளவும் வாழ்வார்..!
 - பிஸ்மி பரிணாமன்
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT