மன இறுக்கத்தை குறைக்க உதவும் கலை!

பரதம், குச்சுபுடி நடனக் கலைஞராக மட்டுமின்றி எழுத்தாளர், நடிகை, சமூக ஆர்வலர், நாடக ஆசிரியர், பெண்ணியவாதி, முன்னாள் அரசியல்வாதி என பல துறைகளில் பிரபலமான, "பத்மபூஷண்' விருது
மன இறுக்கத்தை குறைக்க உதவும் கலை!

பரதம், குச்சுபுடி நடனக் கலைஞராக மட்டுமின்றி எழுத்தாளர், நடிகை, சமூக ஆர்வலர், நாடக ஆசிரியர், பெண்ணியவாதி, முன்னாள் அரசியல்வாதி என பல துறைகளில் பிரபலமான, "பத்மபூஷண்' விருது பெற்ற மல்லிகா சாராபாய், மன இறுக்கம் ( ஆட்டிசம்), மன நலிவு பாதிப்பு( டவுன் சின்ட்ரம்) போன்றவைகளால் 
பாதிக்கப்பட்டவர்களுக்கு நாட்டியம் ஒரு சிறந்த சிகிச்சையாக விளங்குவதை மக்கள் தற்போது ஏற்றுக் கொள்வதை பெருமையாக கருதுகிறார். இது குறித்த 
அவரது அனுபவங்களை கேட்போம்:
'பல ஆண்டுகளுக்கு முன் ஆட்டிசம் குழந்தைகள், டவுன் சின்ட்ரம் பாதிப்புடையவர்கள் நிறைந்த அரங்கில் நாட்டிய நிகழ்ச்சி நடத்தும் வாய்ப்பு கிடைத்தது. சோகத்தை உள்ளுக்குள்ளும். மகிழ்ச்சியை வெளியிலும் வெளிபடுத்தும் வகையில் நாட்டியமாடியபோது, அவர்கள் நடத்தையில் மாற்றம் ஏற்படுவதை கண்டேன். தொடர்ந்து இது குறித்து ஆமதாபாத்தில் உள்ள எனது அகாதெமியில் ஆய்வு செய்தபோது, மன இறுக்கம் மற்றும் மன நலிவு பாதிப்பு உடையவர்கள், நாட்டியத்தை ரசிக்கும்போது அவர்களிடம் மாறுதல் ஏற்படுவது தெரிந்தது. இந்த ஆய்வை இப்போது மக்களும் ஏற்றுக் கொள்வது மகிழ்ச்சியாக உள்ளது.
என்னை சந்திப்பவர்களில் பலர், நீங்கள் ஏன் உங்கள் தந்தை விக்ரம் சாராபாய் போல் விஞ்ஞானி ஆகாமல், தாய் மிருணாளினி சாராபாய் போன்று நடன கலைஞராக ஆனீர்கள் என்று கேட்பதுண்டு, எங்கள் குடும்பம் சைவம் என்பதால் கல்லூரியில் படிக்கும்போது அறிவியல் வகுப்பில் தவளையை வெட்டி பரிசோதனை செய்ய நான் மறுத்ததுண்டு.
மேலும் எங்களுக்கு அகிம்சையில் அதிக நம்பிக்கை உண்டு. என் தந்தையை பொருத்தவரை நான் அவரை விஞ்ஞானியாக மட்டும் கருதவில்லை. இந்த நாட்டை நிர்ணயித்ததில் அவருக்கும் பங்குண்டு. இந்தியர்கள் தங்கள் அறிவாற்றலை நிரூபிக்க அறிவியலை தேர்ந்தெடுக்க முன்வர வேண்டுமென அவர் நினைத்தார். என்னுடைய தாய் நாட்டியத்தை நேசித்தவர், என்னுடைய சகோதரன் சுற்றுச் சூழலை நேசிப்பவர். அதேபோன்று நானும் ஏதாவது ஒரு வகையில் இந்த தேசத்திற்கு சேவை செய்ய விரும்புகிறேன். மொத்தத்தில் எங்களுக்குள் வெவ்வேறு எண்ணங்கள் இருந்தாலும், இந்த நாட்டின் வளர்ச்சிக்கு நானும், என் சகோதரனும் சேவை செய்து வருகிறோம்.
ஒரே நேரத்தில் நடனம், நாடகம், எழுத்து என பல துறைகளில் உங்களால் எப்படி செயல்பட முடிகிறது என்று சிலர் கேட்பதுண்டு. என்னைப் பொருத்தவரை மக்களிடையே சுலபமாக சென்றடைவது கலை மட்டுமே. ஆனால் ஒவ்வொரு கலையும் ஒன்றுக்கொன்று வேறு படுவதுண்டு, சினிமாவை பொருத்தவரை நாடகத்திலிருந்து முற்றிலும் மாறுபடும். காமிரா முன் நடிக்கும்போது இயக்குநர் எதிர்பார்ப்பின்படி நடிப்பை வெளிப்படுத்தினால்போதும்.
மேடையில் நடிக்கும் போதோ, நடனமாடும்போதோ மேடை ஒளி - ஒலி அமைப்புகளுக்கு ஏற்ப நடிப்பையோ. முக பாவங்களையோ உங்கள் விருப்பத்திற்கேற்ப கொண்டு வரலாம். ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகேற்ப உணர்வுகளை வெளிப்படுத்த முடியவில்லையே என்ற ஏமாற்றமும் ஏற்படலாம். முப்பது ஆண்டுகளுக்கு முன் என்னுடைய சிந்தனைகளை நாடகத்தின் மூலம் வெளிப்படுத்த முயற்சித்து தோல்வியடைந்தேன். அதன் வெளிப்பாடுதான் நான் எழுதிய "சக்தி - தி பவர் ஆப் உமன்' என்ற புத்தகமாகும்.
மேடையில் மட்டுமின்றி பல கோயில்களுக்குச் சென்று மேடை, ஒலி ஒளி அமைப்புகள் ஏதுமின்றி நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்த விரும்பினேன். அதன்படியே பல கோயில்களில் நாட்டியமாடியதோடு, தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலில், ராஜராஜசோழனின் ஆயிரமாண்டு நினைவு நிகழ்ச்சியின்போது, சுமார் 5 ஆயிரம் மக்கள் முன்பு நடனமாடியது என் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவமாகும். இதன் மூலம் எனக்குள் இருந்த திறமையை சம்பிரதாயப்படி கடவுள் சந்நிதியில் சமர்பித்ததாகவே கருதுகிறேன்.
இன்று எனக்கு 64 வயதாகிறது. என் வயதுக்கேற்ற நடனங்களைத்தான் நான் ஆடுகிறேன். சில நடன கலைஞர்கள் அவர்கள் வயதுக்கு மீறி நடனமாட முயற்சிக்கின்றனர். உடல் ஒத்துழைக்கும் வரை நடனமாடலாம் என்பது என் கருத்து. வயதாகும்போது இளவயதில் ஆடியது போல் மேடையில் நடனமாட முயற்சிக்கக் கூடாது. பார்வையாளர்கள் நகைப்புக்கு இடமாகலாம். நம்முடைய திறமையை எப்படி வெளிப்படுத்தலாம் என்பதை வரையறுத்துக் கொள்வது அவசியம். இதன்மூலம் பார்வையாளர்கள் பாராட்டை பெற முடியும். ஆனால் இன்று எத்தனை நடன கலைஞர்கள் இப்படி செய்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது'' என்கிறார் மல்லிகா சாராபாய்.
- பூர்ணிமா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com