செவ்வாய்க்கிழமை 20 ஆகஸ்ட் 2019

வயதான நடிகைகளுக்கு வாய்ப்பளிப்பதில்லை!

Published: 21st March 2019 10:58 AM

"என்னைப் பொருத்தவரை நடனம் என்பது என்னுடைய தோழி, தத்துவஞானி மற்றும் வழிகாட்டி என்றே சொல்வேன். எப்போது என்னுடைய மனதில் உற்சாகம் குறைகிறதோ அப்போதெல்லாம் என்னை சந்தோஷப்படுத்துவது நடனம்தான். இந்த நடனமும், ஆர்வமும் என் வாழ்க்கையில் இறுதிவரை நீடிக்கும்'' என்று கூறும் ஹேமமாலினி, சமீபகாலமாக படங்களில் நடிப்பதில்லை. அதற்கான காரணம், சொந்தப் படம் தயாரிப்பது, இன்றைய பெண்களின் துணிச்சல் போன்ற பல பிரச்னைகள் குறித்து இங்கு மனம் திறக்கிறார்:
 "இன்றைய தயாரிப்பாளர்களில் பலர் வயதான நடிகர்களுக்கு படங்களில் நடிக்க வாய்ப்பளிப்பது போல், மூத்த நடிகைகளுக்கு வாய்ப்பளிக்க தயங்குகிறார்கள். இதனால் மூத்த நடிகைகள் ஒன்று சேர்ந்து தாங்களே படம் தயாரிக்கலாமா என்று சில சமயங்களில் நினைப்பதுண்டு. இன்றைய நிலையில் பல தயாரிப்பு நிறுவனங்கள் அதிக பொருட்செலவில் படமெடுத்தாலும் தியேட்டர்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. இதன் காரணமாகவே பெரும்பாலான பழைய நிறுவனங்கள் படமெடுப்பதை நிறுத்திவிட்டனர். எனக்கும் இந்தியில் படம் தயாரிக்கும் எண்ணம் இருக்கிறது. ஆனால் இந்திப் படங்கள் எடுப்பதை விட மாநில மொழிகளில் படம் எடுப்பது லாபகரமாக இருப்பதோடு, செலவும் குறைவு. இதன் காரணமாகவே பஞ்சாபி மொழியில் "மட்டி' என்ற படத்தை தயாரித்துள்ளேன். நல்ல கதை கிடைத்திருப்பதால் அடுத்து மராத்தி மொழியில் ஒரு படம் எடுக்க தீர்மானித்திருக்கிறேன்.
 இன்றைய வாழ்க்கை நடைமுறைகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பெண்களை வாசல் மிதியடிகள் போல் கருதிய காலம் மாறிவிட்டது. இப்போதெல்லாம் பெண்கள், அவர்கள் எடுக்கும் முடிவுகளில் நம்பிக்கையுடன் செயல்படுகின்றனர். இது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நம்முடைய நாட்டில் ஏராளமான பெண்கள் குறிப்பாக கிராமப்புறப் பெண்கள், இன்னமும் தங்கள் சக்தியை உணராமல் அல்லது தங்களுடைய அதிகாரத்தை பயன்படுத்த முடியாமல் அடைபட்டு கிடப்பது தெரிகிறது.
 முன் வர முடியாமல் தயங்குகிறார்கள். இந்த நிலைமை மாற வேண்டும். பெண்கள் தங்களது கனவுகளையும், உணர்வுகளையும் தைரியமாக வெளிப்படுத்த வேண்டும்.
 என்னுடைய 70 ஆண்டுகால வாழ்க்கையில் எவையெல்லாம் நடந்ததோ அவைகளை ஏற்றுக் கொள்ளும் மனபக்குவம் எனக்கிருந்தது. எனக்கென்று தனிபாதையை உருவாக்கிக் கொண்டதில்லை. வாழ்க்கையுடன் ஒத்துப்போகிறேன். நடிகையாக வேண்டுமென்ற எண்ணம் எப்போதும் இருந்ததில்லை. தானாக வந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டேன். நான் பாட்டியானவுடன் மேலும் சில பொறுப்புகள் அதிகரித்துள்ளன. தினமும் காலையில் அஹானாவின் மகன் டாரின் மற்றும் ஈஷாவின் மகள் ரத்யாவும் வீட்டிற்கு வந்து என்னை பார்க்காமல் செல்வதில்லை. என் பேரக் குழந்தைகள் வந்து போனதும், என்னுடைய அறை நர்சரி பள்ளி போல் தலைகீழாக மாறி கிடக்கும். இது எனக்கு பிடித்திருக்கிறது'' என்கிறார் முன்னாள் கனவுக் கன்னி ஹேமமாலினி.
 - அ.குமார்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

இந்தியாவின் சூப்பர் அம்மா!
மனதை மயக்கும் மணல் சிற்பங்கள்!

 ஆரோக்கியம் மேம்படுத்தும் மண்புழுக்கள்!
 

சமையல்! சமையல்!
பாலூட்டுவதே இயற்கையான கருத்தடை!