குரலற்றவர்களுக்கான குரலாக ஒலிப்பேன்!

அவசர செலவுக்காக முன்பணமாக வாங்கிய ரூபாய் 5,000 கடன் தொகையைத் திரும்ப செலுத்த முடியாமல் வசந்தாவும் அவரது கணவர் ஏழுமலையும் தங்களின் மூன்று குழந்தைகளோடு,
குரலற்றவர்களுக்கான குரலாக ஒலிப்பேன்!

அவசர செலவுக்காக முன்பணமாக வாங்கிய ரூபாய் 5,000 கடன் தொகையைத் திரும்ப செலுத்த முடியாமல் வசந்தாவும் அவரது கணவர் ஏழுமலையும் தங்களின் மூன்று குழந்தைகளோடு, தமிழ்நாட்டில் ஒரு செங்கற்சூளையில் கொத்தடிமைகளாக்கப்பட்டனர். 
பல நாட்களில் ஒருவேளை சாப்பாடு கூட இல்லாமல் கடும் வெயிலில் அதிகாலை முதல் முன்னிரவு வரை ஓய்வு ஒழிச்சலில்லாமல் வேலை செய்ய வேண்டியிருந்தது. தங்களது விடுமுறை நாட்களின்போது பெற்றோரைப் பார்ப்பதற்காக இத்தம்பதியினர் செல்ல நினைத்தால் மூன்று குழந்தைகளில் ஆறு வயதே நிரம்பிய மூத்த மகளை பணயமாக வைத்துவிட்டுத்தான் செல்ல வேண்டியநிலை.
தாங்கள் வேலை செய்த அந்த சூளையிலிருந்து வெளியேறிச் செல்ல அவர்கள் பலமுறை முயற்சித்த போதும், ஒருசில மணி நேரங்களில் செங்கற்சூளை முதலாளி அவர்களை கண்டுபிடித்து, மீண்டும் அழைத்து வந்துவிடுவார். இதனால் அவர்கள் வாங்கிய திட்டுகளையோ, அடி உதைகளையோ வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. 
இந்நிலையில் தான், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு செங்கற்சூளை அமைந்திருந்த மாவட்டத்தின் நிர்வாக அதிகாரிகள்; ஒருநாள் செங்கற்சூளைக்கு திடீர் விஜயம் செய்து, விசாரணை நடத்தி அவர்களை அங்கிருந்து மீட்ட போதுதான் வாழ்க்கையில் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. கொத்தடிமை தொழிலாளர்களாக இவர்கள் அங்கு வேலை செய்கின்றனர் என்று உறுதிப்படுத்திய ஆர்டீஓ(RDO), இவர்களது கடனை ரத்து செய்து விடுவித்து, அவர்களது சொந்த ஊருக்குப்போய் வசிக்குமாறு அவர்களை அனுப்பிவைத்தார். 
அதன் பின் சுதந்திரமான வாழ்க்கையை அனுபவித்து வாழ்கின்ற பெண்ணாக மாறிய வசந்தா. தற்போது, திருவண்ணாமலையில் செயல்படுகிற விடுவிக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களது சங்கத்தின் (RBLA) மற்றும் சமூகத்தின் கருத்துகளை வலுவாக எடுத்துவைப்பவராக செயல்பட்டு வருகிறார். 
மேலும், ஒரு சுய உதவிக் குழுவின் தலைவியாகவும் இருக்கும் இவர், இவரது குழுவின் மூலம், வறுமையில் வாடும் பெண்களுக்கு சிறு தொழில்கள் கற்றுக் கொடுத்து, அவர்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறார். 
இது குறித்து வசந்தா கூறுகையில், "செங்கற்சூளைகள், ஆலைகள், கல்குவாரிகள் மற்றும் இதுபோன்ற பல இடங்களில் அடைபட்டு, உரிமைகளும், சுதந்திரமும் மறுக்கப்பட்டு கொடூரமான கொத்தடிமை தொழில் என்ற அரக்கன் பிடியில் சிக்கி, தொடர்ந்து சித்ரவதைகளை அனுபவித்து வரும் எனது மக்கள் இன்னும் ஏராளமாக இருக்கின்றனர்.
விடுதலையாவோம் என்ற நம்பிக்கையின் ஒளி தங்களுக்கு தென்படாதா என்ற ஏக்கத்தோடு அவர்கள் இன்னும் காத்திருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் கொத்தடிமையின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான வாழ்க்கை தரப்படும்வரை, குரலற்றவர்களுக்கான குரலாக தொடர்ந்து செயல்படுவதை என்னால் நிறுத்தமுடியாது. வாய்ப்புகள் கிடைக்குமானால், பல்வேறு அமைப்புகளில், பல்வேறு தரப்பட்ட மக்கள் மன்றங்களில் பேச நான் தயாராக இருக்கிறேன்.
சுதந்திரம் என்பது உண்மையில் எதைக் குறிக்கிறது என்று அவர்களுக்கு எடுத்துக்கூறி விளக்கவும் இதன்மூலம் இருள் கவிந்த சுரங்கத்தின் இறுதியில் வெளிச்சத்தை காண எனது சமூகத்தினருக்கு உதவவும் என்னால் முடிந்ததை நான் நிச்சயமாக செய்வேன்'' என்கிறார் வசந்தா. 
- ஸ்ரீதேவி குமரேசன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com