அடையாளம் தெரியாமல் மாறிப்போனேன் - சமீரா ரெட்டி

1997-ஆம் ஆண்டு பங்கஜ் உதாஸின் "அவுர் அஷிஷ்டா' என்ற இசை ஆல்ப வீடியோவில் இடம்பெற்ற 17 வயது இளம் பெண் ஒருவர், கேபிள் டிவி பிரபலமாகாத அந்த சமயத்தில் நாடுமுழுவதும் பலரது கவனத்தை கவர்ந்தார்
அடையாளம் தெரியாமல் மாறிப்போனேன் - சமீரா ரெட்டி

1997-ஆம் ஆண்டு பங்கஜ் உதாஸின் "அவுர் அஷிஷ்டா' என்ற இசை ஆல்ப வீடியோவில் இடம்பெற்ற 17 வயது இளம் பெண் ஒருவர், கேபிள் டிவி பிரபலமாகாத அந்த சமயத்தில் நாடுமுழுவதும் பலரது கவனத்தை கவர்ந்தார். அப்படி பார்த்தவர் மனதில் பதியும் முகப்பொலிவு, கவர்ச்சிகரமான புன்னகையுடன் கூடிய முகம் என வசிகரித்தவர் சமீரா ரெட்டி. அதன்பின்னர், சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானார். அக்ஷய் வார்தே என்ற தொழிலதிபரை மணந்து நான்காண்டுகளுக்கு முன் ஹன்ஸ் என்ற ஆண் குழந்தைக்கு தாயாகி, மீண்டும் தாய்மை அடைந்துள்ள சமீரா ரெட்டி, பிரசவத்திற்குப் பின் எப்படி பழைய நிலைமைக்குத் திரும்பினார் என்ற அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறார்:
 "நான்காண்டுகளுக்கு முன் முதல் குழந்தை பிறப்பதற்கு முன்பே என் உடல் எடை அதிகரிக்கத் தொடங்கியது. பெண்கள் கர்ப்ப காலத்தில் எடை கூடுவது இயற்கைதானே என்று நான் சற்று அலட்சியமாக இருந்து விட்டேன். ஆனால் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியபோது, இது நான் தானா என்ற சந்தேகம் எழுந்தது. மருத்துவ பரிசோதனை செய்தபோது "ப்ளசென்ட்டா ப்ரிவிலா' என்ற பாதிப்பு காரணமாக எடை கூடியிருப்பது தெரிந்தது. ஐந்து மாதங்களுக்கு முழு ஓய்வில் இருக்க வேண்டுமென்றும், தினமும் இன்ஜெக்ஷன் போட வேண்டுமென்றும் கூறினார்கள். தினமும் ஏதாவது ஒரு நிகழ்ச்சி, பார்ட்டி என்றிருந்த எனக்கு திடீரென முழு ஓய்வு எடுக்க வேண்டுமென்று கூறியது, ஏதோ என்னை தனிமை படுத்துவதை போல் தோன்றியது. பிரசவத்துக்குப் பின்னரும் எடை குறையவில்லை. 32 கிலோ அதிகரித்திருந்தது என்னை நானே கண்ணாடியில் பார்க்க அச்சப்பட்டேன். புகைப்படம் எடுக்கவும் யாரையும் அனுமதிக்கவில்லை குழந்தையை கவனித்துக் கொள்வதிலேயே முழு நேரத்தையும் செலவிட்டேன்.
 மனதை தளரவிடாமல் எடையை குறைக்க நடவடிக்கைகளை மேற் கொண்டேன். ஹோமியோபதி மருத்துவரை கலந்தாலோசித்தேன். கவுன்சிலிங் எடுத்துக் கொண்டேன். பிரவசத்திற்கு முன்பும், பின்னரும் நினைத்ததை எல்லாம் சாப்பிடும் பழக்கத்தை படிப்படியாக குறைத்துக் கொண்டேன். வீட்டு வேலைகளை நானே செய்யத் தொடங்கினேன். முதல் ஓராண்டிற்குள் உடல் எடை. 102 கிலோவிலிருந்து 15 கிலோ குறைந்தது.
 என் தேவைகளை நானே செய்யத் தொடங்கினேன். தனி பயிற்சியாளரையோ, டயட்டீசீயனையோ அமர்த்திக் கொள்ளவில்லை. ஒருங்கிணைந்த கூட்டுக் குழுவில் சேர்ந்து உடற்பயிற்சி செய்யத் தொடங்கினேன். இது எனக்கு அனுகூலமாக இருந்தது. ஏறிய எடையை குறைப்பது கடினமென்று சொல்வதை தவறு என நிரூபிக்க வீட்டு சாப்பாட்டைத் தவிர வேறு உணவுகளை சாப்பிடவில்லை. இப்போது 30 கிலோ குறைந்து முதல் பிரசவத்திற்கு முன் இருந்த நிலைக்கு திரும்பிவிட்டேன்.
 நான் அதிக எடையை குறைத்து பழைய நிலைமைக்கு திரும்ப என்னுடைய கணவர் அக்ஷய் வார்தே பெரும் உதவியாக இருந்தார். இரண்டாவது குழந்தைக்கு தயாரா? என்று அவர் கேட்டபோது, எனக்கு எப்போதுமே இரண்டு குழந்தைகள் வேண்டுமென்று சொன்னேன். தற்போது 38 வயதாகும் நான் இரண்டாவது குழந்தையை பெறத் தயாராகிவிட்டேன். ஜூலை மாதம் பிரசவத்தை எதிர்பார்க்கிறேன்.
 இந்த முறை எடை அதிகரிக்கக் கூடாது என்பதற்காக தினமும் துடிப்புடன் செயல் படுகிறேன். கர்ப்பிணிகள் நீச்சல் செய்வது களைப்பை போக்கும் என்று கூறியதால் ஸ்விம்மிங் செய்கிறேன். ஏற்கெனவே எனக்கு ஓரளவு ப்ளசென்ட்டா ப்ரிவிலா பாதிப்பு இருப்பதால் அதை குறைக்க யோகா பயிற்சியும் செய்கிறேன்.
 என்னுடைய கணவர் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம் வைத்திருப்பதால் அவருக்கு உதவியாக இருக்கிறேன். என்னுடைய இரண்டாவது பிரசவம் எங்களைப் பொருத்தவரை ஒரு விழாவாகவே கருதுகிறோம். என்னுடைய சமீப கால தோற்றத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டதை பார்த்த சிலர், கர்ப்பமுற்றிருப்பதை வெளியிட்ட முதல் தென்னிந்திய நடிகை நீங்கள் தான் என்று கருத்து தெரிவித்திருந்தனர். மீண்டும் என் தோற்றத்தை பழைய நிலைக்கு கொண்டு வர எவ்வளவு சிரமப்பட்டேன் என்பதை மற்ற பெண்களுக்கு தெரிவிக்கவே இதை வெளியிட்டேனே தவிர வேறு எந்த உள் நோக்கமும் இல்லை'' என்றார் சமீரா ரெட்டி.
 - பூர்ணிமா
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com