செவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019

விண்வெளி ஆய்வு பயிற்சியில் தேனி மாணவி!  

DIN | Published: 19th June 2019 12:00 PM

தேனி அல்லிநகரத்தைச் சேர்ந்த எழுத்தாளர் தாமோதரனின் மகள் உதயகீர்த்திகா. அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்வழிக் கல்வி பயின்ற மாணவியான இவர், போலந்தில் விண்வெளி ஆய்வுப் பயிற்சி பெறுவதற்கு தேர்வாகியுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா?. நம்பித்தான் ஆக வேண்டும்.
 ஆம். தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வரை தமிழ் வழிக் கல்வி பயின்ற உதயகீர்த்திகா, உக்ரைன் நாட்டில் உள்ள கார்க்கியூ நேஷனல் ஏரோஸ்பேஸ் பல்கலைக் கழகத்தில் ஏர்கிராஃப்ட் மெயின்டனன்ஸ் படிப்பை 92.5 சதவிகிதம் மதிப்பெண்களுடன் இம்மாதம் நிறைவு செய்கிறார்.
 அதனடிப்படையில், உதயகீர்த்திகாவிற்கு தற்போது போலந்து நாட்டில் உள்ள அனலாக் ஆஸ்ரோநட் பயிற்சி மையத்தில் போலந்து, ஜெர்மனி, நெதர்லாந்து நாட்டின் விண்வெளி வீரர்களுடன் சேர்ந்து பயிற்சி பெறவும், விண்வெளி ஆய்வு மேற்கொள்ளவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இப்பயிற்சிக்கு சர்வதேச அளவில் 20 பேர் தேர்வாகியுள்ளனர். இதில், இந்தியாவில் இருந்து உதயகீர்த்திகாவும் ஒருவர். இது குறித்து அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
 "மகேந்திரகிரியில், இஸ்ரோ சார்பில் நடைபெற்ற ஆய்வு கட்டுரை போட்டியில், கடந்த 2012-இல் நான் 10-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது சமர்பித்த கட்டுரைக்கும், 2014-இல் பிளஸ் 2 படித்துக் கொண்டிருந்த போது சமர்பித்த கட்டுரைக்கும் முதல் பரிசு கிடைத்தது. இந்தப் பரிசுகள் விண்வெளி ஆய்வு படிப்பின் மீது எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது.
 பிளஸ் 2 முடித்தவுடன் ஐ.ஐ.டியில் சேர்வதற்கு முயற்சித்தேன். அப்போது, உக்ரைனில் உள்ள கார்க்கியூ நேஷனல் ஏரோஸ்பேஸ் பல்கலைக் கழகத்தில் விண்வெளி அறிவியல் படிப்பில் சேர வாய்ப்பு கிடைத்தது.
 எனது பெற்றோர் அளித்த ஊக்கத்தால் அங்கு ஏர்கிராஃப்ட் மெயின்டனன்ஸ் படித்து வருகிறேன். இந்த நிலையில் தற்போது போலந்து நாட்டில் அனலாக் ஆஸ்ரோநட் பயிற்சி மையத்தில் போலந்து விண்வெளி ஆய்வு பயிற்சி பெற தேர்வாகியிருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்தப் பயிற்சியில் சேர்வதற்கு உடல் மற்றும் மன ரீதியிலான தகுதி குறித்து 8 மணி நேரம் சோதனை நடைபெற்றது.
 வரும் 2021-இல் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதில் நானும் தேர்வு பெற்று, இஸ்ரோவில் இருந்து விண்வெளி ஆய்வுக்கு அனுப்பப்பட்ட முதல் இந்தியப் பெண்ணாக இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம் மற்றும் லட்சியம்.
 உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்பிற்கு பொருளாதாரம், மொழி ஒரு பிரச்னை இல்லை. தமிழ் மொழியை ஊன்றிக் கற்றவர்கள், எம்மொழியையும் எளிதில் கற்கலாம். பள்ளிப் பருவத்தில் இஸ்ரோ சார்பில் நடைபெற்ற ஆய்வு கட்டுரை போட்டிகளில் இணைய தள உதவியுமின்றி, புத்தகங்களை படித்து தான் கட்டுரைகளை சமர்பித்து பரிசு பெற்றேன். இலக்கை நோக்கிய திட்டமிட்ட நகர்வு, விடாமுயற்சி, லட்சியம் ஆகியவை நம்மை வெற்றிப் பாதையில் வழிநடத்திச் செல்லும்'' என்றார் அவர்.
 - கோ.ராஜன்
 
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

வெற்றிக்கான தனி சூத்திரம் எதுவுமில்லை!
சமையல்! சமையல்!
மயான வேலையை மனமுவந்து செய்யும் பெண்!
பற்களை பாதுகாத்திட ...
டிப்ஸ்.. டிப்ஸ்...