செவ்வாய்க்கிழமை 20 ஆகஸ்ட் 2019

வெற்றிப் பெண்மணிகள்

DIN | Published: 05th June 2019 11:14 AM

இந்தியாவின் 17-வது மக்களவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகளைச் சார்ந்த 716 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 76 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் பலர் புதுமுகங்கள் மட்டுமல்ல;
 மிகவும் இளம் வயதினர். அவர்களின் பின்னணி விவரம் இதோ:
 ரம்யா ஹரிதாஸ்

32 வயதான ரம்யா கேரள மாநிலத்தின் ஆலத்தூர் நாடாளுமன்ற தொகுதியிலிருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தெடுக்கப்பட்டிக்கும் எம்.பிக்களில் ஒருவர்.கேரளாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே பெண் இவர் தான். இவரது தந்தை ஹரிதாஸ் ஒரு கூலித் தொழிலாளி. தாய் டெய்லரிங் தொழில் செய்பவர். கோழிக்கோடு மாவட்டம் குன்னமங்கலம் பகுதியைச் சேர்ந்த இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதலே பல்வேறு நெருக்கடிகளை, விமர்சனங்களை, அவமானங்களைச் சந்தித்து வந்தார். ஆனால், எதையும் அவர் கண்டுகொள்ளவே இல்லை. "நான் மக்களுக்காகச் சேவை செய்ய வந்துள்ளேன். அதுவே எனது குறிக்கோள்' எனக் கூறி பம்பரமாகச் சுழன்று பிரச்சாரத்தில் மக்களைச் சந்தித்தார் ரம்யா. பிரச்சாரத்தின்போது குடும்பம் குடும்பமாகப் போய் மக்களை சந்தித்தார். அவர்கள் வீட்டுப் பிள்ளை போல மாறிவிட்டார். அவரது அணுகுமுறை, ஏழை மக்களை வெகுவாகக் கவர்ந்தது. எங்க வீட்டுப் பொண்ணு ரம்யா என இவருக்கே வாக்களிக்க - அதுவே அவரது வெற்றிக்குக் காரணம்.
 சுமலதா அம்பரிஷ்

சினிமா மற்றும் அரசியலில் பல முக்கியப் பொறுப்புகளை வகித்தவர் அம்பரிஷ். அவர் சில மாதங்களுக்கு முன்பு மறைந்ததையடுத்து சுமலதாவின் அரசியல் பிரவேசம் தொடங்கியது. முன்னதாக மக்களவை தேர்தல் தொகுதி ஒதுக்கீட்டின் போது மண்டியா தொகுதியை காங்கிரஸ் கூட்டணியில் உள்ள முதல்வர் குமாரசாமி கட்சியான ஜே.டி.எஸ். கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த நடிகை சுமலாதாவிடம் வேறு தொகுதி ஒதுக்கி தருகிறோம் அதில் போட்டியிடுங்கள் என கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்கள் கூறி பார்த்தனர். ஆனால் அதனை ஏற்காத அவர் மண்டியா தொகுதியில் சுயேச்சையாகக் களமிறங்கினார். அவருக்குப் பா.ஜ.க ஆதரவு அளித்தது. மாண்டியாவில் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகிலை தோற்கடித்தார்.
 சாத்வி ப்ரக்யா சிங்

கடந்த 2006-ஆம் ஆண்டு மாலேகான் மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இதில் முக்கியக் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டவர் சாத்வி ப்ரக்யா சிங். பல ஆண்டு சிறை வாழ்க்கை, சட்டப் போராட்டங்கள், உடல் நல பாதிப்பு எனப் பல தடைகளைத் தாண்டியவர். காங்கிரஸ் தலைவரான திக் விஜய் சிங்கை எதிர்த்து போட்டியிட்டுப் போபால் மக்களவை தொகுதியில் வெற்றிபெற்றவர்.
 சந்திராணி முர்மு

ஒடிசா மாநிலம் கியோன்ஜர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 25 வயதே ஆன சந்திராணி முர்மு. பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவரான இவர், புவனேஸ்வரத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் பி.டெக் பட்டப்படிப்பை முடித்துள்ளார். பி டெக் முடித்திருந்தாலும் சந்திராணி சமூகச் சேவை செய்து வருகிறார்.
 இவர் வசிக்கும் பகுதியில் உள்ளவர்கள் ஏதாவது ஒரு தேவை என்றால் சந்திராணியைத் தேடி வருகிறார்கள். இவரும் தன்னைத் தேடி வருபவர்களின் தேவை அறிந்து உதவி செய்து வருகிறார். உதவி செய்வதற்கு இவர் மறுப்பதும் இல்லை. இவரது தந்தை சஞ்சீவும் சமூக சேவை செய்து வருகிறார். நம்பிக்கையில்லாமலே விருப்ப மனு தாக்கல் செய்த சந்திராணிக்கு ஓடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் அழைத்து வாய்ப்புக் கொடுத்துள்ளார். கியோன்ஜர் தொகுதியில் இவரை எதிர்த்து இருமுறை மக்களவை உறுப்பினராக இருந்த பாஜகவை சேர்ந்த ஆனந்த் நாயக் என்பவர் போட்டியிட்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே போட்டி கடுமையாக இருந்தபோது சந்திராணி கடுமையாகப் பிரச்சாரம் செய்து வென்று காட்டியுள்ளார். 25 வயது 11 வருடங்கள் நிரம்பிய இவர் மிக இளவயது எம்.பி. என்ற பெருமையைப் பெறுகிறார். எம்.பி யாக பதவி ஏற்றபின் "தனது தொகுதி மக்களின் வறுமையைப் போக்குவதே தனது லட்சியம்' என்று கூறுகிறார்.
 கொடெட்டி மாதவி

ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் அருகு லோக்சபா தொகுதி முக்கிய தொகுதிகளில் ஒன்று. ஒய்எஸ்ஆர் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு தற்போது அருகு எம்பியாக உள்ளார், 26 வயதான கொடெட்டி மாதவி. அங்கு உள்ள பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்தியாவின் மிக ஏழ்மையான எம்.பி இவர். தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து ஆறு முறை எம்.பியாக தேர்தெடுக்கப்பட்ட கிஷோர் சந்திர தியோவை தோற்கடித்தவர் என்ற பெருமைக்குரியவர்.
 மிமி சக்ரபோர்த்தி

திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக களமிறங்கினர் பிரபல வங்காள நடிகையான மிமி சக்ரபோர்த்தி ஜாதவ்பூர் தொகுதியில் போட்டியிட்டார் 30 வயது நடிகையான மிமி. வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் கடும் விமர்சனங்களைச் சந்தித்தார். ஆனால், தொகுதியில் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
 நுஸ்ரத் ஜகான்

பசிராத் தொகுதியில் போட்டியிட்டவர் 29 வயது வங்காள நடிகை நுஸ்ரத் ஜகான். மதக் கலவரங்களுக்குப் பெயர் போன இடம் இது. மிமி சக்ரபோர்த்தி போல் நுஸ்ரத்தை வேட்பாளராக அறிவித்ததற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தேர்தல் பிரச்சாரத்தின் போது பாலியல் ரீதியான ஆபாச எதிர்ப்புகளை எதிர்கொண்டார். ஆனால், பின் வாங்காமல் தேர்தல் களத்தில் போராடி மூன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
 மேற்கு வங்கத்திலிருந்து எம்பியாகி இருக்கும் இந்த 2 இளம் நடிகைகளுக்கு வரவேற்பு குவிகிறது. இதுபற்றி டுவிட்டரில் பதிவிட்டுள்ள திரைப்பட இயக்குநர் ராம் கோபால் வர்மா, "வாவ் வாவ் வாவ், வங்கத்திலிருந்து புது எம்பிக்கள். மிமி சக்ரபோர்த்தி மற்றும் நுஸ்ரத் ஜஹான். இந்தியா உண்மையிலேயே முன்னேறியிருக்கிறது' என பதிவிட்டுள்ளார்.
 தமிழ் நாட்டில் 64 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டு அதில் திமுக கூட்டணி சார்பில் கனிமொழி, ஜோதிமணி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் வெற்றிபெற்று மக்களவைக்கு சென்று இருக்கிறார்கள்.
 மக்கள் மனதில் இடம் பிடித்து மக்களவைக்கு சென்றுள்ள இந்தப் பெண்களின் குரல் நிச்சயம் பாராளுமன்றத்தில் ஓலிக்கும்!
 -வனராஜன்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

இந்தியாவின் சூப்பர் அம்மா!
மனதை மயக்கும் மணல் சிற்பங்கள்!

 ஆரோக்கியம் மேம்படுத்தும் மண்புழுக்கள்!
 

சமையல்! சமையல்!
பாலூட்டுவதே இயற்கையான கருத்தடை!