22 செப்டம்பர் 2019

செவித்திறனற்ற பெண்ணின் துணிகர பயணம்!

DIN | Published: 05th June 2019 10:59 AM

பெங்களூருக்கும் போர்ச்சுகல் நாட்டிற்கும் இடைப்பட்ட தூரத்தை விமானம் மூலம் சென்றடைய சுமார் 8,700 கி.மீ ஆகும். பெங்களூரைச் சேர்ந்த 34 வயதாகும் அர்ச்சனா திம்மராஜூ, தன் வாழ்நாள் சாதனையாக தரைவழியே பெங்களூரிலிருந்து போச்சுகலுக்கு மோட்டார் சைக்கிள் மூலம் செல்ல திட்டமிட்டுள்ளார். இதில் என்ன சாதனை இருக்கிறது?
 அர்ச்சனாவுக்கு செவித்திறன் இல்லை. உலகிலேயே முதன் முறையாக செவித்திறனற்ற ஒரு பெண் 40ஆயிரம் கி.மீ.தூரத்தை பைக் மூலம் கடந்தவர் என்ற சிறப்பைப் பெற வேண்டும் என்பதுதான் இவரது லட்சியமாகும்.
 அதன்முதற்கட்டமாக, பிறவிலேயே செவித்திறனற்ற அர்ச்சனா, அடுத்த ஆண்டு பெங்களூரிலிருந்து நேபாளம் , பூடான், மியான்மர், கசகஸ்தான், மாஸ்கோ, ஐரோப்பா வழியாக போர்ச்சுகலுக்கு மோட்டார் சைக்கிள் மூலம் சென்றடைய திட்டமிட்டுள்ளார். போர்ச்சுகல் சென்றடைந்தவுடன் அங்கிருந்து விமானம் மூலம் பெங்களூர் திரும்ப இருக்கிறார். தற்போது, இந்த துணிகர பயணத்திற்காக, அந்தந்த நாட்டின் அனுமதி பெறும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
 மல்லய்யா அதிதி இன்டர்நேஷனல் பள்ளியில் ஓவிய ஆசிரியையாக பணியாற்றும் இவர், தனியாக இந்த பயணத்தை மேற்கொள்ள போவதில்லையாம். செவித்திறனற்றவர் என்பதால் தனியாக பயணம் செய்வது பிரச்னை என்பதோடு, வழியில் மக்களுடன் கலந்துரையாட முடியாது என்பதால் உடன் அபிஜித் சோமசேகர் என்பவரையும் அழைத்துச் செல்லவுள்ளார்.
 பல நாடுகளின் கலாசாரத்தையும், உணவு வகைகளையும் தெரிந்து கொள்வதோடு, ஆசிய ஐரோப்பிய நாடுகளில் உள்ள செவித்திறனற்றவர்களுக்காக நடத்தப்படும் 60 பள்ளிகளுக்குச் சென்று அங்குள்ள மாணவர்களையும் சந்திப்பதென்பது இவரது நோக்கமாகும். ஏற்கெனவே, கடந்த ஆண்டில் பெங்களூரிலிருந்து உலகிலேயே மிக உயரமான வாகன பாதையான கார்டங்லா வழியே பூடானில் உள்ள லீ என்ற இடத்திற்கு சென்றுள்ளார்.
 ""பைக் சத்தத்தை கேட்க முடியாதே தவிர, அதன் அதிர்வுகளை என்னால் உணர முடியும். 15 ஆண்டுகளுக்கு முன் எனது நண்பரின் யமஹா ஆர்எக்ஸ் 100 என்ற பைக் மூலம் ஒட்ட கற்றுக் கொண்டேன். எனக்கு செவித்திறன் இல்லை என்பதை உணர்த்துவதற்காக பைக்கின் பின்னால், வண்டி ஒட்டுபவருக்கு காது கேட்காது. என்னைப் பற்றி ஏதாவது விமர்சித்தால் அதை கேட்கும் சக்தி எனக்கில்லை என்று எழுதி வைத்துள்ளேன்'' என்கிறார் அர்ச்சனா.
 2018-ஆம் ஆண்டை பொருத்தவரை இவருக்கு மறக்க முடியாத ஆண்டாகும். இவர் தன்னுடன் பள்ளியில் பணிபுரியும் நண்பர் டேனியல் சுந்தரம் துணையுடன் மௌன பயணம் ஒன்றை தொடங்கி செவித்திறனற்றவர்களை சந்தித்து உதவிகள் செய்துள்ளார். இவரது துணிகர பயணங்களுக்கு பெற்றோர் ஆதரவு அளித்து வருவதோடு, ராயல் என்பில்ட் தண்டர்பேர்ட் 350 சிசி பைக் ஒன்றையும் வாங்கி தந்துள்ளனர்.
 - பூர்ணிமா
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

பெண்களால் முடியாதது எதுவுமில்லை!
சமையல்! சமையல்!
சமையல் அறை சுத்தமாக இருக்க...!
அரிசியின் பயன்கள்!
தோலின் ஆரோக்கியத்திற்கு உதவும் 6 சத்துகள்!