22 செப்டம்பர் 2019

கைத்தறி சேலையில் புரட்சி!

DIN | Published: 05th June 2019 11:02 AM

இன்றைய ஃபேஷன் உலகில், குறைந்த விலையில், உடனடி பயன்பாட்டுக்கு உதவும் ஆயத்த ஆடைகளின் மோகம் அதிகரித்துவிட்டதால், கைத்தறி ஆடைகள் விற்பனை சரிவு நிலைக்கு வந்துவிட்டது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் "கைத்தறி' சேலைகளுக்கு அகில இந்தியமுக்கியத்துவம் தர வேண்டும் என்ற நோக்கில் பழமையையும் புதுமையையும் ஒருங்கிணைத்து "எத்திக்கஸ்' (Ethicus) என்ற பிராண்டை பிரபலப்படுத்தியிருக்கிறார் பொள்ளச்சியைச் சேர்ந்த விஜயலட்சுமி நாச்சியார். கைத்தறி சேலைகளில் புரட்சி செய்து வரும் இவர் தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்:
"பொள்ளாச்சியைச் சேர்ந்த எங்கள் குடும்பத்தொழில் பருத்தி விற்பனை செய்வது. பருத்தியை குஜராத்திற்கு அனுப்பி வந்தது எனது முந்தைய பரம்பரை. நான் மும்பையில் "துணி மற்றும் ஆடைகள் வடிவமைப்பில்' முதுகலை படித்தவள். படித்து முடிந்ததும் கைத்தறி தொழிலை தொடங்கவில்லை. திருமணமான பிறகும் தொடங்கவில்லை. திருமணமாகி பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் இந்தத் தொழிலுக்கு வந்தேன். கணவருக்கு சொந்தமாக நூற்பாலை உள்ளது. அவர் இயற்கை உரங்கள் இட்டு வளர்க்கப்படும் பருத்திக்கு முக்கியத்துவம் தந்து வந்ததால், நானும் அந்தத் துறை நோக்கி ஈர்க்கப்பட்டேன். 
பருத்தி செடிகள் வளர்ப்பில் அதிக அளவு ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை சுற்றுப்புறச் சூழலுக்கு பலவிதத்தில் கேடுகளை உருவாக்குகின்றன. அதனால், என் கணவர் இயற்கை உரங்கள் கொண்டு வளர்க்கப்படும் பருத்திச் செடிகளிலிருந்து கிடைக்கும் பருத்தி கொண்டு நூல் நூற்பதால் அதை பயன்படுத்தி கைத்தறி சேலைகளுக்கு ஒரு "புதுமுகம்' தந்து என் பயணத்தை 2009-இல் தொடங்கினேன். 
மேன்மையான தரம்... இன்றைய காலத்திற்கு ஏற்ற நவீன டிசைன்... கண்ணைக்கவரும் இயற்கை நிறம்.. இந்த அறத்துடன்தான் பொள்ளாச்சியில் வசிக்கும் திறமையான நெசவாளிகளுடன் எத்திக்கஸ் நிறுவனத்தைத் தொடங்கினேன். கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைபெற்ற பல கண்காட்சிகள், ஃபேஷன் ஷோக்களில் பங்கு பெற்று எங்கள் தயாரிப்புகளை முன்னிலைப்படுத்தியதால் எத்திக்கஸ் கைத்தறி சேலைகள் அகில இந்திய சந்தையையும் தாண்டி வெளிநாடு வாழ் இந்திய பெண்களாலும் விரும்பப்படுகிறது. எங்கள் தயாரிப்புகள் முன்னணி ஜவுளி விற்பனை நிலையங்களிலும், ஆன்லைனிலும் விற்பனைக்கு கிடைக்கும்.
சேலை டிசைன்களில் மாற்றம், கவர்ச்சி, மற்ற கைத்தறி சேலைகளிலிருந்து வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்தியாவின் பல மாநிலங்களில் இருக்கும் திறமையான கலைஞர்களைக் கொண்டு சேலைகளை வடிவமைக்கிறோம். மும்பை நகரின் பூங்காக்கள், டாக்சிகள் வரிசை, ஹிந்திப்பட போஸ்டர்கள் வண்ணக் கலவை, நீல தார்பாலின் ஷீட்டுகள் விரிக்கப்பட்ட குடிசைகள், மும்பையின் கோழிக்கூடு போன்ற குடியிருப்புகளின் நிறக் கூட்டு, இவற்றின் வண்ண விநோதங்களை சேலையில் விரியச் செய்து அதை தொகுப்பாக வெளியிட்டோம். நல்ல ஆதரவும் விளம்பரமும் கிடைத்தது. 
கை விரல்களால் சேலைகளில் இயற்கை முறையில் தயாரிக்கப்படும் வண்ணங்களைக் கொண்டு கலங்காரி ஓவியங்களை வரையச் சொல்கிறோம். கை கொண்டு நூல் ஓவியம் (எம்பிராய்ட்டரி) பின்னச் சொல்கிறோம். இந்த வேலைகளுக்காக குஜராத்தில் கட்ச், உத்திர பிரதேசம், காஷ்மீர் மாநிலங்களுக்குச் செல்கிறோம். இதனால் எங்கள் சேலைகளில் அகில இந்திய பாரம்பரிய கலை வேலைகள் சங்கமமாகின்றன. 
சேலை நெய்யும் நெசவாளி, டிசைன் செய்யும் கலைஞரின் பெயர்களை அவர்கள் படத்துடன் அச்சிட்ட தகவல் அட்டையையும் சேலையுடன் இணைக்கிறோம். அருமையான சேலையை உருவாக்கியவர்களின் உழைப்பை கெளரவிக்கும் விதமாக, அங்கீகரிக்கும் விதமாக இந்த முறையை 2009-இல் அறிமுகம் செய்தோம். சேலையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பருத்தி எங்கு விளைந்தது போன்ற விபரங்கள் அந்த அட்டையில் இருக்கும். இதனால் சம்பந்தப்பட்டவர்கள் அடுத்த தயாரிப்பின்போது இன்னும் கற்பனை கலந்த அதிக உழைப்பை ஈடுபாட்டுடன் நல்குவார். அதனால் ஒவ்வொரு சேலையும் வித்தியாசமான கலை வடிவம் பெறும். நுகர்வோர்களையும் கவரும். இந்த " தகவல் அட்டை' முறையை இப்போது பல சேலை தயாரிப்பு நிறுவனங்கள் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளன. 
இன்றைய சூழ்நிலையில் இளம் பெண்களிடம் சுடிதார், ஜீன்ஸ், லெக்கின்ஸ் புழக்கம் அதிகமாகிவிட்டது. வயதான பெண்மணிகள் கூட சுடிதார் அணிய ஆரம்பித்து விட்டார்கள். 
இந்த சூழ்நிலையில் கைத்தறி சேலைகளின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்ற எண்ணம்தான் ஊக்கத்தையும் முனைப்பையும் தந்தது. வர்த்தக உண்மை என்னவென்றால் கைத்தறி சேலைகளின் விற்பனை கூடியிருக்கிறது என்பதுதான். தயாரிப்புகளை புதுமையுடன் வித்தியாசமாக தயாரித்தால் நிச்சயம் நுகர்வோர்களின் ஆதரவு அதிகமாகும். இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் துணிகளுக்கு ஆதரவு அதிகமாகிக் கொண்டே வருகிறது. சேலைகள் அணிவதும் இந்தியாவில் அதிகமாகி வருகிறது. பாரம்பரிய சேலை பெண்களிடம் பிடித்திருக்கும் இடத்தை சுடிதாரும் ஜீன்ஸும் எடுத்துக் கொள்ள முடியாது. விழாக்கள் சடங்குகள் சம்பிரதாயங்களின் போது சேலைதான் முன்னணியில். எங்கள் சேலையின் விலை ஆயிரத்தில் தொடங்குகிறது. சிக்னேச்சர் மற்றும் டிசைனர் சேலைகள் பிரத்யேகமாக ஆர்டர் கிடைக்கும் போது அதன் விலை மாறும். தங்கம், வெள்ளி ஜரிகைகள் சேர்த்து செய்யும் சேலைகள் லட்சத்தைத் தாண்டும். எங்களிடம் நாற்பது தறிகள் உள்ளன. அதில் உழைக்கும் நெசவாளிகள்தான் எத்திக்கஸ்ஸின் உயிர்நாடி'' என்கிறார் விஜயலட்சுமி நாச்சியார். 
- பிஸ்மி பரிணாமன்
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

பெண்களால் முடியாதது எதுவுமில்லை!
சமையல்! சமையல்!
சமையல் அறை சுத்தமாக இருக்க...!
அரிசியின் பயன்கள்!
தோலின் ஆரோக்கியத்திற்கு உதவும் 6 சத்துகள்!